Friday, March 29, 2024
Home » IPL 2024: வணிந்துவை விடுவித்த பெங்களூர்; மதீஷ, மஹீஷ் சென்னையில் நீடிப்பு

IPL 2024: வணிந்துவை விடுவித்த பெங்களூர்; மதீஷ, மஹீஷ் சென்னையில் நீடிப்பு

by Rizwan Segu Mohideen
November 28, 2023 6:24 am 0 comment

இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரில் இலங்கை சகலதுறை வீரர் வணிந்து ஹசரங்கவை ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விடுவித்திருப்பதோடு இலங்கையின் இரு வீரர்கள் மாத்திரமே தமது அணிகளால் தக்கவைக்கப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் பத்து அணிகளும் தாம் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை நேற்று முன்தினம் (26) வெளியிட்டது.

இதில் பெங்களூர் அணி தனது முன்னணி சுழற்பந்து வீச்சாளராக செயற்படும் வணிந்து ஹசரங்கவை விடுவித்துள்ளது.

வணிந்து ஹசரங்க கடைசியாக நடைபெற்ற ஐ.பி.எல் பருவத்தில் உபாதைச் சிக்கல்கள் காரணமாக எதிர்பார்த்த அளவு சோபிக்காதபோதிலும் 2022ஆம் ஆண்டுக்கான தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஹசரங்க உபாதை காரணமாக அண்மையில் நடந்த ஆசிய கிண்ணம் மற்றும் உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்காததோடு தொடை எலும்பு முறிவு காயத்திற்காக அண்மையில் இங்கிலாந்தில் சத்திர சிகிச்சை செய்து கொண்டார்.

இந்நிலையில் வரும் டிசம்பர் 19 ஆம் திகதி இடம்பெறும் ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்தில் வணிந்து ஹசரங்கவும் இடம்பெறுவார். அதேபோன்று குஜராத் அணியில் இடம்பெற்ற இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்கவை அந்த அணி விடுவித்திருப்பதோடு பஞ்சாப் அணி பானுக்கு ராஜபக்ஷவை விடுவித்துள்ளது.

இதில் குஜராத் டைடன்ஸ் அணிக்காக 2023ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். பருவத்தில் மாற்று வீரராக இணைக்கப்பட்ட தசுன் ஷானக்க மூன்று போட்டிகளில் ஆடி 26 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

அதேபோன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இதுவரை 13 ஐ.பி.எல் போட்டிகளில் ஆடியிருக்கும் பானுக்க ராஜபக்ஷ ஒரு அரைச்சதம் அடங்கலாக 277 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் சென்னை கிங்ஸ் அணியில் ஆடும் இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன ஆயோரை அந்த அணி தக்கவைத்துள்ளது.

இதன்படி அடுத்த ஐ.பி.எல் தொடருக்காக பத்து அணிகளும் மொத்தம் 173 வீரர்களை தக்கவைத்திருப்பதோடு 85 வீரர்களை விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT