Friday, March 29, 2024
Home » சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் 41 பேரையும் மீட்கும் பணியில் தடங்கல்கள்!

சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் 41 பேரையும் மீட்கும் பணியில் தடங்கல்கள்!

- இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் 17 நாட்களாக தொடரும் ஜீவமரணப் போராட்டம்

by Rizwan Segu Mohideen
November 28, 2023 10:36 am 0 comment

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியின்போது தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், மேலும் 4 நாட்கள் மீட்புப் பணி தொடரும் என்று நேற்று கூறப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலை சூழ்ந்த பகுதியான சில்க்யாராவில் உள்ள சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கடந்த 12 ஆம் திகதி திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக சுரங்கத்தை விட்டு வெளியேறும் வழிகள் அடைபட்டன. 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். கடந்த 17 நாட்களாக தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு உள்ளே சிக்கி உயிருக்குப் போராடி வருகின்றனர்.

தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் என்றெல்லாம் ஏராளமான வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டு இருக்கிறார். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை பத்திரமாக மீட்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.

சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கவும், தொடர்பு கொள்ளவும் 4 அங்குலம் அளவிலான குழாய் பயன்படுத்தப்பட்டது. கடந்த வாரம் திங்கட்கிழமை 53 மீட்டர் தொலைவு கொண்ட இடிபாடுகளுக்கு மத்தியில் 6 அங்குல குழாய் செலுத்தப்பட்டது. இதன் மூலமாக சுரங்கத்தில் உள்ள தொழிலாளர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உணவும், குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தக் குழாயில் ‘எண்டோஸ்கோபி கமரா’ அனுப்பப்பட்டு, சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பது வீடியோ மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவர்களின் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன. அதன் மூலம் தொழிலாளர்களுக்குத் தேவையான அறிவுரைகளை அதிகாரிகள் அளித்து வருகின்றனர். சமீபத்தில் தொழிலாளர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகாமல் நேரத்தை செலவிட விளையாட்டுப் பொருட்கள் குழாய் மூலம் உள்ளே அனுப்பப்பட்டன.

கிடைமட்டத்தில் துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியது. உறைய வைக்கும் கடும் குளிரால் இந்தப் பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டது. ஆகர் இயந்திரத்தின் மூலமாக இந்த துளையிடும் பணி நடைபெற்று வந்த நிலையில், சுரங்கத்தில் உள்ள ​ெகான்கிரிட் கம்பிகள் காரணமாக துளையிடும் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அகர் இயந்திரத்தின் பிளேட்டுகள் ​ெகான்கிரீட் கம்பிகளால் உடைந்தன. சில மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் துளையிடும் பணி தொடங்கியது.

அப்போதும் இரும்புக் கம்பிகள், கம்பி வலைகள் இயந்திரத்தின் பிளேட்டுகளில் சிக்கின. இந்தத் தடைகளை மீட்புப்பணியில் உள்ள வீரர்களை அனுப்பி சிறிய இயந்திரங்களை கொண்டு அகற்ற முடிவு செய்யப்பட்டது. அந்தப் பணியிலும் தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், மீட்புப் படையினர் வேறு வழிகளில் தொழிலாளர்களை மீட்க முடிவு செய்தனர்.

அதன்படி செங்குத்தான வடிவில் துளையிட முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஏற்ற இடம் கண்டறியப்பட்டு துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தப் பணி நிறைவடைய 4 நாட்கள் வரை ஆகும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் நிலை கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT