குடியேறிகளின் துயரம் மிகுந்த கடல் பயணம்! | தினகரன்

குடியேறிகளின் துயரம் மிகுந்த கடல் பயணம்!

உலகெங்கும் உச்சத்தில் இருக்கிறது குடியேறிகள் பிரச்சினை. போர், சிதைந்த பொருளாதாரம், இனஅழிப்பு, பயங்கரவாதிகள் என பல்வேறு காரணங்களால், உலகெங்கும் பல்வேறு நாடுகளில் மக்கள் பாதுகாப்பான நாடுகளுக்கு தஞ்சம் கோரி பயணித்து கொண்டிருக்கிறார்கள்.

பாதுகாப்பற்ற வழிகளில் இவர்கள் மேற்கொள்ளும் பயணங்களால், பல துயர சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. குறிப்பாக மத்தியதரைக் கடல் பகுதிகளில் குடியேறிகளை சுமந்து கொண்டு வந்த படகுகள் கவிழ்ந்த சம்பவங்களில் பலர் உயிர் இழந்திருக்கிறார்கள்.

'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஜுவான் மெடினா லிபிய கடல் பகுதிகளில் தத்தளிக்கும் குடியேறிகளை மீட்கும் படகுகளில் 29 நாட்கள் பயணித்து பல புகைப்படங்கள் எடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு புகைப்படமும் அடர்த்தியான துயரத்தை தருகிறது.

ஸ்பானிஷ் தொண்டு நிறுவனத்தால் இயக்கப்படும் இழுவை படகு 'ஓபன் ஆர்ம்ஸ்'. 36 மீட்டர் நீளம் கொண்ட படகு இது.

இந்தப் படகானது ஐரோப்பிய நாடுகளுக்குள் கடந்த சில ஆண்டுகளாக உள்ளே நுழைய முயலும் இலட்சகணக்கான மக்களை கடல் பகுதியில் கண்காணிக்கிறது. தத்தளிப்பவர்களை மீட்கிறது.

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து ஏறத்தாழ 18 இலட்சம் பேர் மத்தியதரைக் கடல் பகுதி முழுவதும் குடியேறி இருக்கிறார்கள் என்கிறது ஐ.நா தகவல்.

'ஒபன் ஆர்ம்ஸ்' இழுவைப் படகில் ஜுவான் மெடினா ஏறிய போது அப்படகு கடலில் தத்தளித்த ஒரு பெண்ணை மீட்டுக் கொண்டிருந்தது. குடியேற நிலம் தேடியவர்கள் இறப்பர் படகில் வந்து கொண்டிருந்தனர்.

ஆனால், துரதிருஷ்டமாக இறப்பர் படகிலிருந்து காற்று போனதில் ஜோஷிபா எனும் ஒரு பெண் மட்டுமே பிழைத்தார். அந்த படகில் நான்கு வயது குழந்தையும், அவரது தாயும் இறந்து கிடந்தனர்.ஜோஷிபா மீட்கப்பட்டர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோது, அவரது உடல்நிலை மிகமோசமாக இருந்தது.

அவர் மத்திய ஆபிரிக்காவில் உள்ள கேமரூன் குடியரசை சேர்ந்தவர்.

ஓகஸ்ட் மாதம் அதே பகுதியில் அகமது என்பவர் 13 வயது மகனுடன் மீட்கப்பட்டார்.லிபிய நகரத்தில் அவரும், இன்னும் சிலரும் கடத்தப்பட்டு ஏழு நாட்கள் வரை சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.பின்னர் அங்கிருந்து அவரும் அவர் மகனும் தப்பி கிழக்கு நோக்கி 130 கி.மீ பயணித்து கரபுள்ளி நகரத்தில், ஒருவருக்கு 1,438 ​ெடாலர்கள் அளித்து இறப்பர் படகில் ஏறி இருக்கிறார்கள். பதினைந்து மணி நேரம் அந்த இறப்பர் படகில் பயணித்து இருக்கிறார்கள். பின் அந்த படகு உடைந்து முன்று மணி நேரம் கடலில் தத்தளித்து இருக்கிறார்கள்.

அந்தக் கணத்தை அவரே விபரிக்கிறார். "எங்களை நோக்கி ஒரு வெளிச்சம் தெரிந்தது. உண்மையில் நாங்கள் அப்போது பயந்து விட்டோம். லிபிய ரோந்து படகுதான் எங்களை நோக்கி வருகிறதோ... மீண்டும் எங்கள் அந்த நரகத்திற்கே அனுப்பி விடுவார்களோ என்று அஞ்சினோம்" என்கிறார்.

"ஆனால், எங்களை நோக்கி வந்தவர்கள் நேசக் கரம் நீட்டினார்கள். 'நாங்கள் உங்கள் நண்பர்கள். ஸ்பானிஷ் மீட்பு படகை சேர்ந்தவர்கள்'என்றார்கள். நாங்கள் சந்தோஷத்தில் கூக்குரலிட்டோம்" என்கிறார் அகமது.

இவர்கள் ஒவ்வொருவரிடமும் துயர் மிகுந்த ஏராளமான கதைகள் உள்ளன. அந்த கதைகளுடன் வாழ நிலம் தேடி பயணித்து கொண்டிருக்கிறார்கள்.


Add new comment

Or log in with...