கடலுக்கு இரையாகும் திருக்கோவில்! | தினகரன்


கடலுக்கு இரையாகும் திருக்கோவில்!

அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் பிரதேசம் மீண்டும் கடலரிப்பால் காவு கொள்ளப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

நேற்றுமுன்தினம் அங்கு ஆர்ப்பரித்த கடலலையால் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதசுவாமி ஆலயத்திற்கு முன்பாகவுள்ள பிரதேசம் முற்றாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

ஆலயமருகே இருந்த கொங்கிறீட் வீதியை கடலலை புரட்டிப் போட்டுள்ளது. மேலும் மீனவர்களின் மீன்பிடிப் படகுகளும் சேதமடைந்துள்ளன.

அந்தப் பிரதேசத்திலுள்ள தென்னந்தோட்டங்களில் நான்கு நிரைகளில் அமைந்திருந்த தென்னைமரங்களை கடல் உள்வாங்கியுள்ளது. 100மீற்றர் தூரம் வரையான நிலத்தை கடல் தன்னகத்தே உள்வாங்கியுள்ளது. கரையிலிருந்த கிணறு கடலுக்குள் சென்றுள்ளது. இந்நிலைமை தொடர்ந்தால் ஆலயமும் கடலுக்குள் சென்று விடும் ஆபத்து உள்ளது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், திருக்கோவில் பிரதேசபைத் தவிசாளர் இராசையா வில்லியம் கமலராஜன், கடலோரப் பாதுகாப்பு திணைக்களப் பொறியியலாளர் கே.துளசி, ஆலயத் தலைவர் சு.சுரேஷ் உள்ளிட்ட பிரமுகர்கள் உடனடியாக தலையிட்டதன் பேரில் அங்கு சுமார் 1000 மண்மூடைகள் அணையாக அடுக்கப்பட்டன. அதனையும் கடல் படிப்படியாக உள்வாங்குவதை நேற்றுக் காண முடிந்தது.

திருக்கோவில் பொலிசார் நேற்று கடற்கரையில் கருங்கல் கொட்டப் போவதாகக் கூறியுள்ளனர்.கடந்த வருடமும் இதே காலப்பகுதியில் கடல்நீர் ஆலய வளாகத்துள் சுமார் 200மீற்றர் உட்புகுந்தது. அப்போது கடலரிப்பு பெரிதாக இருக்கவில்லை. அதனை அவர்கள் 'ஊவா' என்று அழைக்கிறார்கள்.

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட ஆரம்பிக்கப்பட்ட பின்னர்தான் இந்த வினை இங்கு ஏற்பட்டுள்ளதாக பலரும் கூறுகின்றனர். திருக்கோவில் கடற்பரப்பில் ஆலயத்திற்கு முன்பாலுள்ள பிரதேசம் ஒரு குடாபோன்று காணப்படுவதால் இங்கு தாக்கம் அதிகம் என்றும் இம்மக்கள் கூறுகின்றனர்.

ஆலய நிருவாகசபை உறுப்பினர் பொ.நடேசபிள்ளை(68வயது) கூறுகையில்

"நான் பத்து வயதில் இந்த இடத்தில் விளையாடியுள்ளேன். அப்போது ஆலயத்திற்கும் கடலுக்குமிடையே 1கிலோமீற்றர் தூரம்வரை மணற்பரப்பு. இன்று அப்பரப்பு 100 மீற்றராகக் குறைந்து நேற்றுடன் அது 5 மீற்றராகக் குறைந்துள்ளது.மொத்தம் 95 மீற்றர் பரப்பை கடல் உள்வாங்கியுள்ளது.

அந்த இடத்தில்(தற்போது கடலுக்குள் 300மீற்றர் தூரத்தினுள் உள்ள இடம்) முன்னாள் எம்.பியான எம்.சி.கனகரெத்தினம் ஒரு பங்களாவையும், மீனவர் விடுதியையும், இரு கிணறுகளையும் அமைத்திருந்தார். இன்று அவையனைத்தும் கடலுக்குள் சென்று விட்டன. ஆக ஒரேயொரு கிணறு மட்டும் தெரிகிறது. அதுவும் ஓரிரு நாளில் சரிந்து விடும்.

அந்தக் காலத்தில் 300 மீற்றருக்கு அப்பால் படம்பு எனும் கல்அணைக்கட்டு இருந்தது. அதிலிருந்து தூண்டில் போட்டவர்கள் உள்ளனர்.அதனை 'அனுமான்ட கட்டு' என்றும் சொல்வர். இந்த இடத்தில் ஊவா மடுவும் இருந்தது.

இடைக்காலத்தில் கறுப்புமண் எடுப்பதற்காக கடலுக்குள் திருக்கொன்றை மரக்கட்டையை நட்டனர். அப்போதிருந்த அரசியல் பிரமுகர் அரியநாயகம் தலையிட்டு அமைச்சராகவிருந்த திருச்செல்வத்தாரிடம் கூறி அதனைத் தடுத்து நிறுத்தினார்.

தற்போது கனியமணல் எடுக்கும் படலமும் தொடர்கிறது. ஏதோ இக்கடலரிப்பை தடுக்காவிடின் ஊரே கடலுக்கு இரையாகும்"என்று கவலையுடன் குறிப்பிட்டார்.

மீன்பிடித் தொழிலிலி ஈடுபட்டு வரும் சுதன் என்பவர் கூறுகையில்

"இதே அவலம் நாட்டின் வேறொரு பகுதியில் ஏற்பட்டால் இந்த நேரம் பெரியபெரிய கற்களைக் கொண்டு வந்து குவித்து பாரிய அணை போட்டிருப்பார்கள். ஏன் அதிகம்?கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசலுக்கு முன்னால் போய்ப் பாருங்கள். எப்படி கல்லால் அணை போட்டுள்ளார்கள் என்று. அதனைக் கூடச் செய்வதற்கு இங்கு அரசியல்வாதிகள் இல்லையா?

நாம் அன்றாட தொழிலை இழந்து நிற்கின்றோம்.யாரும் கவனிப்பதாயில்லை.

இது தமிழர் பிரதேசமென்பதால் வருவார்கள், பார்ப்பார்கள்.அதிகம் கதைப்பார்கள். பத்திரிகையில் போடுவார்கள். அவ்வளவுதான் எம்மவரின் கெட்டித்தனம்"என்றார்.

"கடந்த வருடம் இதேபோன்றொரு அவலநிலை ஏற்பட்டிருந்த போது கல்அணை அமைக்க நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய பாரதூரமான நிலை ஏற்பட்டிருக்காது" என்றும் அவர் கூறினார்.

"ஆலயத்திற்கு முன்பாக மீனவர்களின் செய்றபாடுகளை விரும்பாத முருகப்பெருமானின் வேலையோ இது" என்றும் ஒரு வயோதிபர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார். இப்பிரதேசத்தில் கல்அணைக்கட்டு இந்தத்தருணத்திலாவது அமைக்கப்படாவிடின் அடுத்த வருடம் இதேகாலப்பகுதியில் கடல் ஊருக்குள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வி.ரி. சகாதேவராஜா
காரைதீவு குறூப் நிருபர 


Add new comment

Or log in with...