இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி முதியவர் போராட்டம் | தினகரன்

இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி முதியவர் போராட்டம்

இலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி முதியவர் போராட்டம்-Elder Man Protest Against Bribe by Climbing on the Tree

 

பொலிஸார் இலஞ்சம் பெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் முன்னிலையில் முதியவர் ஒருவர் மரத்தில் ஏறிப் போராட்டம் நடத்தினார்.

புதிய நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நடுவதற்கு நேற்று (03) கிளிநொச்சிக்கு வருகை தந்த பிரதம நீதியரசர், நீதியமைச்சர் ஆகியோர் முன்னிலையிலே இம்முதியவர் போராட்டம் நடத்தியுள்ளார்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் அங்கு இடம்பெற்ற கூட்டத்திலும் உரையாற்றினர்.

இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உரையாற்றிக் கொண்டிருந்த போது, மேடைக்கு எதிராக ஏ 09 பிரதான வீதியில் நின்ற பூவரச மரத்தில் ஏறியே முதியவர் இவ்வாறு போராட்டம் செய்தார்.

இதன்போது நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல, பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், நீதிபதிகள் , கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் மேடையில் அமர்ந்திருந்தனர்.

உடனடியாக பொலிஸார் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று முதியவருடன் பேசி அவரை மரத்திலிருந்து இறக்கினர். முதியவரின் கையில் "வேண்டாம்"

எனும் தலைப்பில் ஒரு பதாகையும் இருந்தது.

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது மக்களுக்கு சேவை செய்வதற்கே, எவரும் இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை, இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்பட வேண்டியது உங்களின் பொறுப்பாகும் எனவும் அதில் எழுதப்பட்டிருந்தது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உள்ள ஒருவரின் பெயரை குறிப்பிட்ட அம்முதியவர் அவர் இலஞ்சம் பெறுவதாகவும் தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் பொலிஸார் அவரை சமரசம் செய்து அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

 

 


Add new comment

Or log in with...