திருப்பதி கோயிலுக்கு வழங்கிய கோடிக்கணக்கான நகைகள் எங்கே? | தினகரன்

திருப்பதி கோயிலுக்கு வழங்கிய கோடிக்கணக்கான நகைகள் எங்கே?

மத்திய, ஆந்திர அரசுகளுக்கு மத்திய தகவல் ஆணையம் அழைப்பாணை

16-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் திருப்பதி கோயிலுக்கு வழங்கிய கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைடூரிய நகைகள் எங்கே போனது என்று மத்திய தகவல் ஆணையர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக விளக்கமான பதில் அளிக்க இந்திய தொல்லியல் துறை, ஆந்திர மாநில கலாச்சார அமைச்சு, திருப்பதி திருமலா தேவஸ்தானம் ஆகியவற்றுக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலையும் அதன் நகைகள், சிலைகள், பாரம்பரிய பொருட்களைப் பாதுகாக்கும் வகையில் திருப்பதி கோயிலை தேசியச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்குத் தகவல் ஆணையர் சிறீதர் ஆச்சாயர்லு கடிதம் எழுதியுள்ளார்.

பிகேஎஸ்ஆர் அய்யங்கார் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கிருஷ்ணதேவராயர் திருப்பதி கோயிலுக்கு அளித்த நகைகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் கோயிலை வரலாற்று புராதனச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். ஆனால் அவரின் மனு பல்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டும் மனநிறைவான பதில் கிடைக்கவில்லை.

இதையடுத்து மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையரிடம் புகார் அளித்து இந்த விவகாரத்தில் அனைத்து விவரங்களையும் வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகேஎஸ்ஆர் அய்யங்கார் வலியுறுத்தினார். இதனால் மத்திய தகவல் ஆணையம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து மத்திய அரசுக்கும் ஆந்திர அரசுக்கும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இது குறித்து மனுதாரர் அய்யங்கார் கூறியதாவது:

இந்த வழக்கின் விசாரணையின் போது திருப்பதி திருமலை தேவஸ்தானம் 1500 ஆண்டு பழமையான கோயில் அமைப்புகளைப் பாதுகாக்கவில்லை. 2011-ம் ஆண்டுப்படி கோயிலையும் கோயிலைச் சுற்றி இருக்கும் புராதனப் பொருட்களையும் இடங்களையும் புராதனச் சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்ற திட்டமும் கிடப்பில் உள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ஹைதராபாத் தொல்லியல் துறை இயக்குநர் அளித்த அறிக்கையில், 20 பேர் கொண்ட குழு திருப்பதி கோயிலின் பழைமையான சுவரை ஆய்வு செய்தனர். அதில் கிருஷ்ணதேவராயர் கோயிலுக்கு அளித்த நன்கொடைகள், நகைகள் விவரம் இடம் பெற்றுள்ளன என்று தெரிவித்தது. ஆனால் திருப்பதி திருமலை தேவஸ்தானமோ அப்படி எந்தவிதமான நகைகளும் கோயிலில் இல்லை. அதுபோன்ற நகைகளைப் பாதுகாக்கவும் இல்லை எனத் தெரிவித்தது.

இவ்வாறு அய்யங்கார் குற்றம் சாட்டினார்.

தகவல் ஆணையர் ஆச்சார்யலு கூறியதாவது:

முன்னாள் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் டி.பி.வத்வா, ஜெகந்நாதராவ் தலைமையில் சுய ஆய்வு செய்யும் குழுவை திருப்பதி திருமலை தேவஸ்தானம் அமைத்து தணிக்கை செய்தது. அந்தக் குழுவின் அறிக்கையில், கோயிலில் திரு ஆபரணப் பதிவேடு என்பது கடந்த 1952-ம் ஆண்டில் இருந்துதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கிருஷ்ணதேவராயர் அளித்த நகைகள் குறித்து இடம் பெறவில்லை எனத் தெரிவித்தனர்.

அதாவது கடந்த 1952-ம் ஆண்டுக்கு முன் கோயிலில் இருந்த பாரம்பரிய நகைகள் குறித்த விவரம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை, பதிவேட்டிலும் இல்லை. ஆனால், அந்த நகைகள் கடந்த 1939ம் ஆண்டு கோயில் அர்ச்சகரிடம் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

கோயிலின் விலைமதிப்பு மிக்க நகைகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா?, பதிவேட்டில் குறிக்கப்படுகிறதா? என்பது தெரியவில்லை. பழங்கால மற்றும் தற்போது பக்தர்கள் வழங்கும் நகைகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் பதிவேட்டில் குறிக்கவும் என்ன மாதிரியான முறைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் தெரியவில்லை.

நகைகள் பாராமிப்பது குறித்து திடீரென ஆய்வு செய்து தணிக்கை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தும் அதற்கு அர்ச்சகர்கள் அனுமதி மறுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வத்வா கமிட்டி அளித்த அறிக்கையின்படி இதுவரை திருப்பதி தேவஸ்தானும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அந்தப் பரிந்துரைகளை வெளிப்படையாக மக்களுக்கும் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக கடந்த 2009-ம் ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநலமனுவை விசாரித்த நீதிபதிகள், வத்மா கமிட்டியின் பரிந்துரைகளை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை. கோயிலின் திரு ஆபரணங்களின் பாதுகாப்பு குறித்து கவலையும் வியப்பும் தெரிவித்திருந்தனர்.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் வத்வா, ஜெகந்நாத் ராவ் கமிட்டியின் அறிக்கைகள் என்ன ஆனது?, அந்த அறிக்கைகள் இதுவரை மக்களுக்கு ஏன் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை? கோயிலின் நகைகளைப் பாதுகாக்க என்ன விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன? அந்த கமிட்டியின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பதற்கான பதில் இல்லை.

விஜயநகர பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தத் திருப்பதி திருமலைக் கோயிலைப் பாதுகாக்க வேண்டியது மத்திய தொல்லியல்துறையின் கடமையாகும். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இந்தக் கோயிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். உலகப் புகழ்பெற்ற இந்து கோயிலான திருப்பதி திருமலையைப் பாதுகாக்க மத்திய அரசு எடுக்கும் என நம்புகிறோம்.

மத்திய கலாச்சாரத்துறை அமைச்சும், தொல்லியல் துறை அமைச்சும் மாநில அரசுகளோடு இணைந்து பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

இவ்வாறு ஆச்சார்யலு தெரிவித்தார்.

இதற்கிடையே திருப்பதி கோயிலின் முன் 15-ம் நூற்றாண்டு சாளுக்கிய மன்னர் மல்லதேவரா மகாராஜ காலத்தில் எழுப்பப்பட்ட வெயில்கால மண்டபம் (ஆயிரங்கால் மண்டபம்) கடந்த 2003-ம் ஆண்டு எந்தவிதமான முன் அறிவிப்பின்றி இடிக்கப்பட்டது, இடித்ததற்கான காரணமும் பக்தர்களிடம் தெரிவிக்கவில்லை.

இந்த மண்டபம் வெயில் காலத்தில் மலை ஏறிவரும் பக்தர்கள் ஓய்வு எடுக்கவும் கோயிலின் தூண்களில் உள்ள சிற்பங்களின் அழகை ரசிக்கவும் கட்டப்பட்டது. ஆனால் இடித்ததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்று மனுதாரர் அய்யங்கார் குற்றம் சாட்டுகிறார்.


Add new comment

Or log in with...