ஆட்களைத் திரட்டுவதால் ஆகப் போவது எதுவுமில்லை! | தினகரன்


ஆட்களைத் திரட்டுவதால் ஆகப் போவது எதுவுமில்லை!

நா டெங்குமிருந்து இலட்சக்கணக்கானோரை அழைத்து வந்து நாளை புதன்கிழமை கொழும்பு நகரை முற்றுகையிடப் போவதாக பீதியைக் கிளப்பியிருக்கின்றனர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அணியினர்!

மஹிந்த அணியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களில் ஒவ்வொருவரும் நாளைய ‘கொழும்பு முற்றுகை’ தொடர்பாக முரண்பட்ட தகவல்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

கொழும்புக்கு மக்களை அழைத்து வந்து பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக மஹிந்த அணியின் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

கொழும்புக்கு அழைத்து வரப்படும் மக்கள் வெவ்வேறு வீதிகள் ஊடாக பேரணியாகச் சென்று பொது இடமொன்றை அடைவரென்றும், இம்முற்றுகை மூலம் கொழும்பு நகரமே முடங்கிப் போகுமென்றும் மஹிந்த அணியின் மற்றொரு தரப்பு கூறுகின்றது.

கூட்டு எதிர்க் கட்சியின் பலத்தை நிரூபித்துக் காட்டுவதே கொழும்பு முற்றுகையின் நோக்கமென்றும் அவர்கள் கூறுகின்றனர்.

'மக்கள் பலம் கொழும்புக்கு' என்று நாளைய நடவடிக்கைக்கு மஹிந்த அணியினர் பெயரிட்டுள்ளனர்.

கூட்டு எதிர்க் கட்சியினர் என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற மஹிந்த அணியினர் மீதான கரிசனை மக்கள் மத்தியில் படிப்படியாகக் குறைவடைந்து கொண்டு செல்வதனாலேயே இவ்வாறான பேரணியொன்றை மஹிந்த தரப்பினர் நாளைய தினம் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது புரியாததொன்றல்ல!

இவ்வாறான முற்றுகைப் போராட்டங்கள் மூலம் அரசுக்கு எதிராக மக்களைத் திசை திருப்புவது அல்லது தங்கள் மீதான செல்வாக்கை அதிகரித்துக் கொள்வது என்பதெல்லாம் மஹிந்த அணியினரின் பிரதான குறிக்கோள் அல்ல.அது சாத்தியமும் அல்ல.

மக்களை எப்போதும் பரபரப்பான மனோநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதே மஹிந்த தரப்பினரின் முதல் நோக்கம். இல்லையேல் நாட்டின் அரசியலையே மக்கள் மறந்து போய் விடுவார்கள் என்று எண்ணுகின்றனர் அவர்கள். எனவேதான் மக்களைத் திரட்டி வந்து கொழும்பை நாளை அமர்க்களப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் அவர்கள்.

நாடெங்குமிருந்து இலட்சக்கணக்கான மக்களை கொழும்புக்கு அழைத்து வருவதென்பது ராஜபக்ஷ தரப்பினருக்கு கைவந்த கலையாகும். அவர்கள் தங்களது பத்து வருட ஆட்சிக்காலத்தில் இவ்வாறான பேரணிகளையும் முற்றுகைகளையும் கொழும்பில் பல தடவைகள் நடத்திய அனுபவம் வாய்ந்தவர்கள்.

ஒவ்வொரு மே தினத்தின் போதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்களை பஸ்களில் அழைத்து வந்து பேரணியையும் பொது கூட்டத்தையும் நடத்திய அனுபவம் அவர்களுக்கு உண்டு.

அன்றைய ஆட்சிக்காலத்தில் இவ்வாறான மேதின பேரணிகள் வருடம் தோறும் நடந்திருக்கின்றன. கொழும்பில் உள்ள அரசாங்க திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் அரசுக்குச் சார்பான மேதின ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டுமென்ற நியதி அப்போது இருந்தது. அந்த உத்தியோகத்தர்களும் தமது உத்தியோகத்துக்கு ஆபத்து நேர்ந்து விடுமென்ற அச்சத்தினால், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மேதின ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளதெல்லாம் பழைய கதை!

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடக நிறுவனங்களில் கடமையாற்றுவோரும் இவ்விதமாக கட்டாயத்தின் பேரில் கொளுத்தும் வெயியில் ஊர்வலங்களுக்குச் சென்றிருக்கின்றனர்.

உலகத் தொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களை வலுக்கட்டாயத்தின் பேரில் வீதியில் இறக்கி மேதின ஊர்வலத்தில் பங்கேற்கச் செய்த கொடுமையை உலகில் வேறெங்குமே பார்த்திருக்க முடியாது.

பாட்டாளிகள் தினத்தன்று மாத்திரம் இக்கொடுமை நடந்து விடவில்லை. மஹிந்தவின் ஆட்சிக்கு சர்வதேச நெருக்கடிகள் ஏற்பட்ட வேளையில் எல்லாம் இவ்விதமான கட்டாய ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் கொழும்பில் அரங்கேறியதை எவரும் மறந்து விட முடியாது.

தருஸ்மனுக்கு எதிராக கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டதை எவரும் மறப்பதற்கில்லை. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென ஐக்கிய நாடுகள் சபையினால் தருஸ்மன் நியமிக்கப்பட்டிருந்தார். தருஸ்மன் குழுவினரின் அறிக்கை அன்றைய வேளையில் மஹிந்த அரசுக்கு சாதகமாக அமைந்திருக்கவில்லை. எனவேதான் கொழும்புக்கு ஆட்களை அழைத்து வந்து ‘தருஸ்மன் எதிர்ப்பு’ ஆர்ப்பாட்டத்தை அன்றைய மஹிந்த அரசு பாரியளவில் நடத்தியது.

அதுமாத்திரமன்றி அன்றைய அரசின் மனித உரிமை மீறல்களை ஐ.நா கண்டித்த வேளைகளில் எல்லாம் ஐ.நாவுக்கு எதிராக கொழும்பு வீதிகளில் ஆட்களை களமிறக்கியது மஹிந்தவின் அரசு.

பஸ்களில் கொழும்புக்கு மக்களை அழைத்து வருவதென்பது நேர்த்தியாகத் திட்டமிடப்படுவதாகும். தொலைதூர பின்தங்கிய கிராமங்களில் வாழ்வோரில் பாமர மக்களே அதிகம். இவர்கள் உள்நாட்டு அரசியலையோ அல்லது சர்வதேச விவகாரங்களையோ அறியாதவர்களாவர்.

கிராமங்களிலிருந்து அதிகாலையில் ஏற்பாடு செய்யப்படுகின்ற பஸ்களில் தாமாகவே இவர்கள் ஏறிக் கொள்வார்கள். கொழும்பைச் சுற்றிப் பார்ப்பதற்கு இலவசமாக ஒரு சந்தர்ப்பம் இவர்களுக்குக் கிடைக்கின்றது. அது மாத்திரமன்றி உணவுப் பொதியும், மதுபானப் போத்தலும் பரிமாறப்படுகின்றன என்பது ஒளிவுமறைவான சங்கதியல்ல.

கிராமங்களில் பொழுதுபோக்கின்றி உலவும் பாமர மக்களையெல்லாம் இவ்வாறுதான் அன்றைய அரசு வசீகரித்து கொழும்புக்கு அழைத்து வந்து ஒருநாள் நாடகத்தை நடத்தியிருந்தது.

நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும் முன்னரைப் போன்ற ஒருநாள் நாடகமே ஆகும். பஸ்களை ஏற்பாடு செய்து சாரிசாரியாக மக்களை கொழும்புக்கு அழைத்து வருவதெல்லாம் கடினமான காரியமல்ல. அவ்வாறு கொழும்பில் மக்களை ஒன்று திரட்டிக் காட்டுவதால் விளையப் போவதும் எதுவுமில்லை. கொழும்புக்குத் தொழிலுக்கு வருகின்ற மக்களுக்கும், சிகிச்சைக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் வருவோருக்குமே பெரும் பாதிப்பு ஏற்படப் போகின்றது. இம்மக்களுக்குத் துன்பத்தை விளைவிப்பது மட்டுமே ஆகப் போகின்ற விளைவு!


Add new comment

Or log in with...