Thursday, March 28, 2024
Home » நீரின் தரத்தை பாதுகாக்கவும் செலவை குறைக்கவும் அரச – தனியார் கூட்டாண்மை

நீரின் தரத்தை பாதுகாக்கவும் செலவை குறைக்கவும் அரச – தனியார் கூட்டாண்மை

- நீர் கட்டணத்திற்கு சூத்திரம்; இறுதி வரைவு டிசம்பரில் வெளியிட எதிர்பார்ப்பு

by Rizwan Segu Mohideen
November 27, 2023 7:18 pm 0 comment

– 324 நீர் பம்பும் நிலையங்களில் 6 நிலையங்களில் மாத்திரமே சூரிய சக்தி பயன்பாடு

நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், செலவைக் குறைக்கவும் அரச-தனியார் கூட்டாண்மைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கவோ எவ்விதத் திட்டமும் இல்லை என்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிலைபேற்றுத் தன்மையைப் பேணுவதற்கு நீர்க் கட்டணங்களுக்கென சூத்திரம் ஒன்று அவசியப்படுவதாகவும், அதற்கான சூத்திரத்தை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் கட்டணச் சூத்திரத்தின் இறுதி வரைவு டிசம்பரில் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு நியாயமான கட்டணத்தை உறுதி செய்வதில் முக்கியத்துவம் கொடுத்து, வணிக நிறுவனங்களுக்கான கட்டண விகிதத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த முக்கிய தீர்மானங்கள் குறித்து மேலும் ஆலோசிப்பதற்காக அமைச்சர்களான திலும் அமுனுகம மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல் கோரப்பட்டுள்ளதாகவும், இந்த கலந்துரையாடல்களின் முடிவு தெரிவிக்கப்பட்டு, முன்மொழியப்பட்ட கட்டணம் தொடர்பில் வாக்கெடுப்பு மேற்கொள்ளபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதிகரித்த மின்சார கட்டணம் மற்றும் நீர் வழங்கல் சபை தற்போது கொண்டுள்ள கடன்கள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் மற்றும் நட்டம்  போன்றன பெரும் பங்கு வகிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இருப்பினும், கட்டண உயர்வு காரணமான நீர் பேணல் முரயினால், நீர் பயன்பாடு குறைந்துள்ளதாக அவர் இங்கு சுட்டிக் காட்டினார். அந்த வகையில் கடன் மற்றும் CAPEX (மூலதனச் செலவு) ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட ஒரு நிலையான கட்டணச் சூத்திரத்தின் முக்கியத்துவத்தை அமைச்சர் இங்கு  வலியுறுத்தினார்.

நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், செலவைக் குறைக்கவும் அரச-தனியார் கூட்டாண்மைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, ஆனால் நீரை விற்கவோ அல்லது தனியார்மயப்படுத்தவோ எவ்விதத் திட்டமும் இல்லை. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிலைபேற்றுத் தன்மையைப் பேணுவதற்கு நீர்க் கட்டணங்களுக்கான சூத்திரம் ஒன்று அவசியமாகும். அதற்கான சூத்திரத்தை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

நீர் வழங்கல் செயற்பாடுகளுக்கு அதிகமான வலுசக்திச் செலவுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. புதுப்பித்தக்க வலுசக்தி ஆற்றலை நீர் வழங்கல் துறையில் பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 324 நீர் பம்பும் நிலையங்களில் (Pumping Station) இதுவரை 6 நிலையங்களில் மாத்திரமே சூரிய சக்தி பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய அனைத்தும் மின்சாரத்தில் இயங்குகின்றன. இதனால்தான் மின்கட்டணத்தை அதிகரிக்கும் போது நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டியேற்பட்டது.

எனவே சூரிய சக்தியைப் பயன்படுத்தவது குறித்து வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இதனை 25% இனால் அதிகரிக்கவும் 2030 ஆம் ஆண்டுக்குள் 50 % சூரிய சக்தியை நீர் வழங்கல் துறையில் பயன்படுத்தவும் எதிர்பார்த்துள்ளோம். அதற்கு சுமார் 8,507 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக தனியார் துறையின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.” என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். ஜனாதிபதி முன்வைத்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மலையகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்று எதிர்கட்சி உறுப்பினர்களே கூறியுள்ளார்கள்.

தோட்ட உட்கட்டைமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக மலையக மக்களுக்கு காணி உரிமையை வழங்க 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, பெருந்தோட்ட மேம்பாட்டுக்காக 89 பிரதேச செயலகங்களுக்கு 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். அதனை நாம் வரவேற்கின்றோம். மக்களுக்கு மிக அவசியமான விடயங்களை மேற்கொள்வதற்காக அந்த நிதி பிரதேச செயலகங்கள் ஊடாக செலவிடப்படும். இதில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது. இந்தப் பணிகளைக் கண்காணிப்பதற்காக அமைச்சரவை மூலம் குழுவொன்று நியமிக்கப்படும்.

அதன்படி, தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சைப் பொறுத்தவரை, 14 பில்லியன் ரூபா ஜனாதிபதியிடம் இருந்து நேரடியாக கிடைக்கின்றது. அதனுடன் 5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு அமைச்சின் ஊடாகக் கிடைக்கின்றது. மேலும், 10,000 வீட்டுத் திட்டத்தின் முதல் கட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி மூலம், 63 smart class room வேலைத் திட்டத்தையும் ஆரம்பிக்க இருக்கின்றோம்.

இவை மாத்திரமன்றி மலையக மக்களின் 200 வருட நிறைவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்பட்ட இந்திய அரசாங்கத்தின் 3,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடும் உள்ளது. அது தொடர்பாக தற்போது கலந்தரையாடல்கள் இடம்பெற்று வருவதுடன் தேவையான ஆவணங்களைத் தயார்செய்தும் வருகின்றோம். இந்த அனைத்துப் பணிகளையும் எதிர்வரும் 2024 மே மாதத்திற்குள் அமுல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த விடயங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தி மலையக மக்களுடைய வாழ்க்கையை மேம்பாடுத்தலாம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

தோட்ட மக்களின் சம்பள விடயத்தைப் பொறுத்தவரை, இதுவரை கூட்டு ஒப்பந்தம் அவசியமில்லை என்று கூறிவந்த பலரும் இப்போது கூட்டு ஒப்பந்தம் தேவை என்று கூறுகின்றனர். எனவே தற்போது மக்களுக்கு இந்த கூட்டு ஒப்பந்தம் தொடர்பான விடயங்கள் தெரிய வந்துள்ளன. ஜனாதிபதி முன்வைத்த வரவுசெலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தனியார் துறையினரும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.

இந்த சம்பள உயர்வு தொடர்பில் அரசியல் ரீதியிலான தீர்மானமின்றி பொருளாதார ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது இந்நாட்டில் நிலவும் பொருட்களின் விலைகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று கணக்கிட்டே முடிவு செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் சம்பளம் வழங்கப்படும் பொறிமுறை மாற்றப்பட வேண்டும் என்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT