Friday, March 29, 2024
Home » இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு பல தரப்புகளும் முயற்சி

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு பல தரப்புகளும் முயற்சி

- நேற்றுடன் நான்கு நாள் நிறைவு: காசாவில் நிச்சயமற்ற சூழல்

by Rizwan Segu Mohideen
November 28, 2023 7:54 am 0 comment

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான நான்கு நாள் போர் நிறுத்தம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் அதனை நீடிப்பதற்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

ஹமாஸ் போராளிகளும் போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு விருப்பத்தை வெளியிட்டிருப்பதோடு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் அதனை நீடிப்பதற்கு ஆதரவாக பேசியுள்ளார். போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் மற்றும் எகிப்தும் அதனை நீடிப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமான இந்தப் போர் நிறுத்தத்தில் உடன்பட்ட வகையில் பல டஜன் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதோடு பதிலாக இஸ்ரேலிய சிறையில் இருக்கும் 100க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை போர் நிறுத்தம் நிறைவுக்கு வரும் நிலையில் அதனை நீடிப்பது தொடர்பில் அவதானம் அதிகரித்துள்ளது.

“மேலும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவது மற்றும் காசாவில் தேவையாக உள்ள மனிதாபிமான உதவிகள் சென்று சேரும் வகையில் நாளைக்கு (29) அப்பாலும் போர் நிறுத்தத்தை நீடிப்பதே எனது இலக்காக உள்ளது” என்று ஜோ பைடன் கடந்த ஞாயிறன்று கூறியிருந்தார்.

“கைதிகள் தொடர்ந்து விடுவதலையாகும் வரையில் மோதலை நிறுத்துவதற்கு தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு ஆதரவாக ஹமாஸ் அமைப்பு சமிக்ஞையை வெளியிட்டுள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு நீடிப்பதற்கான விருப்பத்தை அவர்கள் மத்தியஸ்தர்களிடம் தெரிவித்திருப்பதாக அது தொடர்பில் தெரிந்த வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்தக் காலப்பகுதியில் 20 தொடக்கம் 40 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை உறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாக போராளிகள் நம்புகின்றனர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி பலஸ்தீன போராளிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 பணயக்கைதிகளை நான்கு நாட்களில் விடுவிக்கவும் அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் இருக்கும் 150 பலஸ்தீனர்களை விடுவிக்கவும் இணக்கம் எட்டப்பட்டது. இந்தப் போர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு இந்த நான்கு நாட்களைத் தாண்டி ஒவ்வொரு மேலதிக தினத்திற்கும் 10 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் போர் நிறுத்தத்தை நான்கு நாட்களை தாண்டி நீடிப்பதற்கு ஹமாஸின் பதிலுக்காக இஸ்ரேலிய அரசு காத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவ வானோலி நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் இதில் பிடிக்கப்பட்டிருக்கும் சில பணயக்கைதிகள் ஹமாஸ் அமைப்புக்கு வெளியே வேறு பலஸ்தீன போராட்டக் குழுவினரின் பிடியில் இருப்பது போர் நிறுத்தத்தை நீடிப்பதில் இருக்கும் சிக்கல்களில் ஒன்றாக உள்ளது.

போர் நிறுத்தத்தை நீடித்து மேலும் பணயக்கைதிகளை விடுவிக்க வகை செய்ய வேண்டும் என்று பணயக்கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் கூட்டணி கட்சிகளிடம் இருந்து இஸ்ரேலிய அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

“பிரான்ஸ் நாட்டவர்கள் உட்பட அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்படும் வரை போர் நிறுத்தத்தை நீடிப்பது நல்லது, உதவியானது மற்றும் அவசியமானதாகும்” என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கத்ரின் கொலொன்னா தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போதே 1200 பேர் கொல்லப்பட்பட்டு 240 பேர் வரை பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக பணயக்கைதிகள் மற்றும் பலஸ்தீன கைதிகள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டனர்.

இதில் கடந்த ஞாயிறன்று விடுவிக்கப்பட்டவர்களில் நான்கு வயதான அமெரிக்க பிரஜையான சிறுமி ஒருவரும் இருந்தார். இவரது பெற்றோர்கள் ஒக்டோபர் 7 ஆம் திகதி தாக்குதலின்போது கொல்லப்பட்டுள்ளனர்.

மறுபுறம் இஸ்ரேலிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பலஸ்தீனர்களில் 17 வயதான ஒமர் அப்துல்லாஹ் அல் ஹாஜ் என்பவரும் இடம்பெற்றிருந்தார். தான் இருண்ட சிறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் வெளியுலகில் என்ன நடப்பது என்று தெரியாமல் இருந்ததாகவும் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

“இப்போது நான் விடுதலை பெற்றதை என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் எமது சகோரர்கள் இன்னும் சிறை அனுபவிக்கும் நிலையிலும் காசாவில் இருந்து வரும் செய்திகளை பார்க்கும்போதும் எம்மால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை” என்று அல் ஹாஜ் தெரிவித்துள்ளார். அல் ஹாஜ், இஸ்லாமிய ஜியாத் அமைப்புடன் தொடர்புபட்டவர் என்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என்றும் இஸ்ரேல் நீதி அமைச்சு குற்றம்சாட்டியபோதும் அதற்கான ஆதாரத்தை வெளியிடவில்லை.

விடுவிக்கப்பட்ட பலஸ்தீனக் கைதிகள் அழைத்துவரப்பட்ட பஸ் வண்டியை சுற்றிக் கூடிய மக்கள் ஆரவாரம் செய்தும், கொடிகளை அசைத்தும் அவர்களை வரவேற்றனர்.

காசாவில் இஸ்ரேல் கடந்த ஒன்றரை மாதங்களாக நடத்திய இடைவிடாத தாக்குதல்களில் அங்கு சுமார் 15,000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு இதில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் மற்றும் பெண்கள் அடங்குகின்றனர்.

இந்நிலையில் ஆங்காங்கே இடம்பெறும் மோதல்கள் மற்றும் மீறல்கள் இந்தப் போர் நிறுத்தத்தை நீடிப்பதில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதில் கடந்த ஞாயிறன்று மத்திய காசாவில் பலஸ்தீன விவசாயி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காசாவின் மகாசி அகதி முகாமின் கிழக்கு பகுதியில் வைத்து இஸ்ரேலிய படைகளால் இந்த விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்துள்ளது. இஸ்ரேலிய துருப்புகளின் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT