ஒன்றரை வயது குழந்தை மரணம்; கலஹா பதற்றத்திற்கு காரணம் | தினகரன்

ஒன்றரை வயது குழந்தை மரணம்; கலஹா பதற்றத்திற்கு காரணம்

 

சளித்தொல்லையால் அவதியுற்ற ஒன்றரை வயது குழந்தைக்கு துரிதமாகச் சிகிச்சை அளிக்காததால் அக்குழந்தை இறந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி, கலஹா வைத்தியசாலை முன்பாக பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூச்சுவிடுவதற்குச் சிரமப்பட்ட குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்து சுமார் இரண்டு மணித்தியாலம் கடந்துவிட்ட போதிலும் அந்தக் குழந்தைக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அதன் காரணமாக அக்குழந்தையைப் பெற்றோர் பேராதனை வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றபோது அங்கு அந்தக் குழந்தை இறந்துவிட்டதாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனைக் கேள்வியுற்றே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கலஹா ஆறு ஏக்கர் வைத்தியசாலையின் மருத்துவருக்கு எதிராகவே நேற்றுப் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்ைக விடுத்தனர்.

கலஹா தெல்தோட்டை குறூப் தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளியான சங்கர் என்பவரின் 2 வயது மகன் சங்கர் சஜீ என்ற சிறுவனே மரணமடைந்துள்ளார்.

கடுமையான சளித் தொல்லை காரணமாக அவதியுற்ற சிறுவனை பெற்றோர் நேற்று (28) காலை 7 மணியளவில் கலஹா ஆறு ஏக்கர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், 9.00 மணிவரை இந்த சிறுவனை வைத்தியர் பரிசோதிக்கவும் இல்லை, மருந்துகள் ஏதும் கொடுக்கவும் இல்லை. சிறுவனின் அவதியை சகிக்க முடியாத பெற்றோர் உடனடியாகப் பேராதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

சிறுவனை ஆஸ்பத்திரியில்அனுமதித்த போது சிறுவன் மரணதடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கலஹா வைத்தியசாலையில் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்குமானால், சிறுவனைக் காப்பாற்றியிருக்கலாம் எனப் பேராதனை வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்ததாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஆத்திரமுற்ற பிரதேசவாசிகள் கலஹா ஆறு ஏக்கர் அரசாங்க ஆதார வைத்தியசாலை பொறுப்பான வைத்தியர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனக் கோரி கடும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக இப்பிரதேசத்தில் பதற்ற நிலை காணப்பட்டது. இதனால் கலகம் தடுக்கும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் உயர் பொலிஸ் அதிகாரிகளும் வருகை தந்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் இங்கு சமுகமளித்திருந்தனர்.

இவ் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்படுகின்ற நோயாளிகளை வைத்தியசாலை வைத்தியர்கள் உரியமுறையில் கவனிப்பதும் இல்லை, உரிய சிகிச்சைகள் வழங்குவதுமில்லை. ஆனால் இவ் வைத்தியர்களின் பிரத்தியேக மருத்துவ நிலையங்களுக்குச் சென்றால் பணம் பெறுவதற்காக நன்றாக கவனிக்கின்றார்கள். எங்களைப் போன்ற வறியவர்களுக்குப் பண வசதியின்மையால் அரசாங்க ஆதாரவைத்தியசாலையையே நாடி வரவேண்டியுள்ளது எனப் பிரதேசவாசிகள் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டி கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

பொலிஸ் உயரதிகாரிகளும் மத்திய மாகாண சுகாதார பிரிவு அதிகாரிகளும் வைத்தியரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கோரிய போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாய் மொழி உறுதிகளை ஏற்க முடியாது. எழுத்துமூலமான உறுதியைத் தந்தால் மாத்திரமே ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாகத் தெரிவித்தனர். எனினும் சமாதான முயற்சிகள் கைகூடாத நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குப் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டனர்..

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்..

தினகரன் செங்கடகல நிருபர்


Add new comment

Or log in with...