கிளிநொச்சி பன்னங்கண்டியில் யுவதி சடலமாக மீட்பு | தினகரன்


கிளிநொச்சி பன்னங்கண்டியில் யுவதி சடலமாக மீட்பு

 

கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி, பிரவுன் ரோட் பகுதியிலுள்ள வயல் கால்வாயில் யுவதி ஒருவர் நேற்றுக் (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறிகண்டியைச் சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றுக் காலை இப் பகுதிக்கு பின்புறமாக உள்ள குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் இருபது வயது மதிக்கத்தக்க யுவதி எங்குள்ளவர் என்றும் யார்? என்றும் முதலில் அடையாளம் காணப்படவில்லை. யுவதியின் முகப்பகுதியில் பலத்த அடிபட்டு பாரிய காயம் இருப்பதுடன் உள்ளாடைகளுடன் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையால் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இந்த யுவதி, சில வேளைகளில் வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சடலத்தின் அருகே சாவிக் கொத்தொன்றும் பேனாக்களும் இறப்பர் காலணியும் ஆங்காங்கே காணப்பட்டன. சடலத்தை இழுத்துச் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இதுவரை சடலம் யாருடையது என அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதியையும் குற்றத் தடயவியல் பொலிஸாரையும் அழைத்திருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் தெரிவிக்கையில், யுவதி கொலை செய்யப்பட்ட நிலையில் நீர்ப்பாசன வாய்க்கால் பகுதிக்குள் கொண்டு சென்று போடப்பட்டிருக்கலாம் என வலுவாக நம்பப்படுகிறது.

சடலத்தில் உள் ஆடைகள் போன்றவை மாத்திரமே காணப்படுகின்றன. மேலாடைகள் எதுவுமே காணப்படவில்லை.

அத்தோடு காதில் தோடும் காணப்பட்டுள்ளன.

சடலத்தின் சுற்றுப்புறச் சூழலில் பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தும் இடுப்பு பட்டி, ஒரு கோர்வையில் நான்கு திறப்புக்கள், பியர் ரின், நீலம் மற்று மஞ்சள் நிறங்களில் இரண்டு சோடி செருப்புக்கள் , கால் கொழுசு, சிவப்பு பேனை ஒன்று, நீல பேனை ஒன்று என்பன சான்றுப்பொருட்கள் காணப்பட்டுள்ளன.

மேலும் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் வகையில் கழுத்தில் கறுப்பு அடையாளமும் முகம் சேதப்படுத்தப்பட்ட நிலையிலும் காணப்பட்டுள்ளது.

அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் எரிக்கப்பட்ட வைக்கோல்கள் மத்தியில் சடலம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது காரணம் சடலத்தின் கால்களில் கரி படிந்திருக்கின்றன. அத்தோடு சடலம் காணப்படும் இடத்தின் சூழலில் சிதறி கிடக்கும் சான்றுப்பொருட்களை அவதானிக்கின்ற போது இப் பகுதியில் கடலமாக காணப்படும் யுவதிக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் இடையே முரண்பாடுகளும், இழுபறிகளும் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பலமாக சந்தேகிக்கப்படுகிறது

சம்பவ இடத்திற்கு பிற்பகல் 2.45 மணிக்கு சென்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்டுள்ளார். அத்தோடு மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி தடயவியல் பொலீஸார் உட்பட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையிலேயே நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறிகண்டியைச் சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என அடையாளம் காணப்பட்டார்.

இச் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனா இருந்ததால் மரணமானவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என சந்தேகம் கொண்ட ஊடகவியலாளர்கள் கிளிநொச்சியிலுள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் நிறுவனங்களுக்கு சென்று விசாரித்துள்ளனர்.

அறிவியல் நகரிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் தொழில் புரியும் ஒரு உத்தியோகத்தர் வரவில்லை என இதன்போது தெரியவந்தது.

ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்குச் சென்று அவர்களிடம் விசாரித்ததன் பின்னர் அவர்களை வைத்திய சாலைக்கு அழைத்து சென்று சடலம் அடையாளம் காணப்பட்டது.

இதன்போது, மரணமானவர் கிளிநொச்சியைச் சேர்ந்த கருப்பையா நித்தியகலா என உறுதிப்படுத்தப்பட்டது.கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஷம்ஸ் பாஹிம்

 


Add new comment

Or log in with...