18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு | தினகரன்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் திகதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மூன்றாவது நீதிபதியான எம்.சத்தியநாராயணன் முன் கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்களின் வாதம் நிறைவடைந்த நிலையில் பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம், தமிழக முதல்வர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரச கொறடா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோஹ்தகி ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து 18 எம்.எல்.ஏக்கள் தரப்பில் பதில் வாதம் நடைபெற்று வந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சார்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், "இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்களும் செயல்பட்டதாக எம்.எல்.ஏ. ஜக்கையன் அளித்துள்ளதாகக் கூறப்படும் புகார் தொடர்பான ஆவணங்களை சட்டப்பேரவைத் தலைவர் எங்களுக்கு கொடுக்கவில்லை. மேலும் முதல்வரை மாற்ற வேண்டும் என்பதுதான் 18 எம்.எல்.ஏக்களின் கோரிக்கையே தவிர, ஆட்சிக்கு எதிராக அவர்கள் எந்த இடத்திலும் கருத்துத் தெரிவிக்கவில்லை. இது உள்கட்சி விவகாரம் என்றால் ஒழுங்கு நடவடிக்கைதான் எடுத்திருக்க வேண்டுமே தவிர தகுதி நீக்கம் செய்ய முடியாது' என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப் பேரவைத் தலைவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம், "உள்கட்சி விவகாரத்தை மூன்றாவது நபரிடம் எடுத்துச் செல்லக் கூடாது. ஒருவேளை ஆளுநர், இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த முடிவுகள் விபரீதமானதாக மாறியிருக்கும். இந்த விவகாரத்தைப் பொருத்தவரை 18 எம்.எல்.ஏக்களும் கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக செயல்பட்டுள்ளதை தெளிவுபடுத்துகிறது. மேலும் முதல்வரை மாற்றும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விசாரணையை 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினத்தில் மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம் மட்டும் வாதிட அனுமதியளித்து அன்றுடன் இந்த வழக்கின் வாதங்கள் நிறைவடையும் என நீதிபதி தெரிவித்தார்.

அதன்படி இந்த வழக்கானது நேற்று வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது தமிழக சட்டப் பேரவைத் தலைவர் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி வாதங்களை தொகுத்து முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் வாதங்கள் முழுமையாக முடிவடைந்த நிலையில் திகதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்திவைத்து நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டார்.


Add new comment

Or log in with...