சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை முன் மர்மப்பொருள் | தினகரன்


சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை முன் மர்மப்பொருள்

ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை முன் கிடந்த திரியுடன் கூடிய மர்மப்பொருளால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனையான இங்கு கிடந்த வெடிமருந்து திரியுடன் கூடிய மர்மப்பொருள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று காலை மருத்துவமனை பிணவறை அருகே பிளாட்பாரத்தில் துப்புரவு பணியாளர் ரேணுகா என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் துணியால் சுற்றப்பட்ட திரியுடன் கிடந்த மர்மப்பொருளை பார்த்து திடுக்கிட்டார்.

அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற ஐயத்தில் உடனடியாக இதுகுறித்துப் பூக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த பூக்கடை பொலிஸார் உடனடியாக வீதித்தடுப்பை வைத்து அங்கு பொதுமக்கள் யாரும் செல்லாமல் தடுப்பு அமைத்தனர். போக்குவரத்தையும் ஒழுங்குப்படுத்தினர்.பெரிய திரியுடன், வெள்ளைத்துணியில் சுற்றப்பட்டு ஒன்றரை நீளத்தில் இருந்த மர்மப்பொருள் வெடிகுண்டாக இருக்கலாம் என்ற அச்சத்தில் வெடிகுண்டு நிபுணர்களையும், வெடிகுண்டை துப்பறியும் மோப்ப நாயையும் வரவழைத்தனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்தனர்.சோதனையில் அது கிராமங்களில் கோவில் விழாக்களில் ஊர்த் திருவிழாக்களில் வெடிக்கப்படும் ஒருவகையான பெரிய வெடி எனத் தெரியவந்தது. அதை யார் மருத்துவமனை அருகே போட்டுச் சென்றது. வேண்டுமென்றே வீசிச் சென்றார்களா? அல்லது தெரியாமல் தவறவிட்டார்களா? என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...