போதை ஒழிப்புக்கு உலக நாடுகள் ஒன்றுபடவேண்டும் | தினகரன்

போதை ஒழிப்புக்கு உலக நாடுகள் ஒன்றுபடவேண்டும்

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகவும் போதை பொருள் பாவனைக்கு எதிராகவும் உலக மக்களும் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியிருக்கின்றார். சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலானது முழு உலகையும் எதிர்கொண்டிருக்கும் பாரிய சவாலாகக் காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கின்றார். இந்தச் சவாலை முறியடிப்பதில் தனித்துச் செயற்பட முடியாது பிம்ஸ்டெக் அமைப்பு நாடுகள் மட்டுமன்றி முழு உலகும் இவ்விடயத்தில் கைகோர்க்க வேண்டும் எனவும் எமது ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார்.

நேபாளத்தலைநகர் காத்மண்டுவில் நேற்று முன்தினம் பிம்ஸ்டெக் மாநாடு இடம்பெற்றது. இந்த அமைப்பின் அடுத்த தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைத்திருப்பதால் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் போதைப்பொருளுக்கு எதிரான பகிரங்க அழைப்பு முக்கியத்துவம் பெற்றிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. உலகம் இன்றுமுன்னொரு போதுமில்லாத வகையில் போதைப்பொருளுக்குள் அடிமையாகிப் போயிருக்கின்றது. இந்தப் பேரழிவிலிருந்து உலகை மீட்டெடுக்க வேண்டுமானால் அனைத்து நாடுகளும் ஒன்றுபட வேணடியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. ஒரு நாடோ ஒரு பிராந்தியமோ, தனித்து இதில் வெற்றி காண முடியாது.

தெற்காசியப் பிராந்த்தியத்தில் போதைப் பொருள் கடத்தலும், பாவனையும் மிக மோசமாகவே காணப்படுகின்றன. பாதாள உலகத்திடமிருந்து பாதுகாப்பைத் தேடுவதென்பது கூட பெரும் சவாலாகவே காணப்படுகின்றது. பாதாள உலகம், போதைப் பொருள் இவ்விரண்டும் ஒன்றோடொன்று கைகோர்த்திருப்பதால் ஒவ்வொரு நாடும் அழிவு நிலைக்குள் தள்ளப்படும் அபாயத்தினுள் சிக்கியுள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில் கசப்பாக இருப்பினும் முக்கிய விடயமொன்றைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதுதான் போதைப்பொருள் கடத்தல், பாதாள உலகு இரண்டினதும் பின்னால் அரசியல் சக்திகள் இயங்குவது. அரசியல் சக்திகளின் ஒத்துழைப்பே அவர்களுக்கு வலுவூட்டுவதாக உள்ளது.

நாளைய தலைவர்களான எமது இளம் சந்ததியினரில் கணிசமான அளவினர் இன்று போதைக்கு அடிமையாகிப் போயுள்ளனர். மத, கலாசார விழுமியங்களை புறந்தள்ளி எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற சீர்கெட்ட கோட்பாட்டின் படி வாழ முற்படுவதால் எமது பெரும் செல்வங்களான இளம் சந்ததியினரின் எதிர்காலம் கவலைதரக்கூடியதாகவே உள்ளது. பாடசாலைகளில் கூட இன்று போதைப்பொருள் பாவனை புகுந்து கொண்டுள்ளது. போதை என்பதை அறியாதிருந்த கிராமப்புறங்களில் கூட ‘குடு’ எனும் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது.

விமான நிலையத்தில் வாரத்தில், இரண்டு, மூன்று நாட்களாவது போதைப் பொருள் பெருமளவில் பிடிபடவே செய்கின்றது. அதுவும் கூடுதலாக தெற்காசிய வலய நாடுகளிலிருந்தே இந்த போதைவஸ்து கடத்தல் இடம்பெறுகிறது. ஒவ்வொரு தடவையும் இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பெறுமதியான போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. எப்படியும் பிடிபடுவது சிறிதளவுதான். பெருமளவான போதைப்பொருட்கள் நாட்டுக்குள் வரவே செய்கின்றது. இதனை பாவிப்பது யார்? எமது இளம் பரம்பரையினரே. இதிலிருந்து எமது எதிர்காலச் சந்ததியை மீட்டெடுத்தேயாக வேண்டும்.

பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனையானது காலத்தின் கட்டாயமாகவே நோக்கவேண்டியுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பை பத்தோடு பதினொன்றாகப் பார்த்துவிட்டுப் போக முடியாது. ஒவ்வொரு நாடும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து காத்திரமான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். பிம்ஸ்டெக்கின் இந்தப் பாரிய பணி உலகளாவிய மட்டத்துக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும்.

அத்துடன் எமது இளம் சந்ததியினரை மத, கலாசார விழுமியங்களின் பக்கம் ஈர்த்தெடுப்பதற்கான முயற்சிகளில் மதத்தலைவர்களும், புத்திஜீவிகளும் முனைப்புக்காட்ட வேண்டும். மேற்குலகின் ஆயுதக் கலாசாரத்திலிருந்தும், வன்முறைக் கலாசாரத்திலிருந்தும் எமது இளம் சந்ததியினரை பாதுகாப்பது தலையாய கடப்பாடாகும். ஒழுக்க விழுமியங்களைக் கொண்ட நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவதில் ஒவ்வொருவரும் முழுமையான பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

நாடு வளமுள்ளதாகவும், செழிப்பு மிக்கதாகவும் மேன்மையுற வேண்டுமானால் அந்த நாட்டில் ஒழுக்க விழுமியங்களும், கலாசார பண்பாடுகளும் மேன்மை பெற்றிருக்க வேண்டும். இன்றைய நவீன உலகம் ஒழுக்க விழுமியங்களிலிருந்து திசைமாறிப் போய்க்கொண்டிருப்பதன் காரணமாக அழிவை நோக்கிப் பயணிப்பதாகவே நோக்க முடிகிறது. இது பயங்கரமானதொரு நிலைக்கு உலகைத் தள்ளிவிடலாம் என்பதை மறந்துவிடக்கூடாது.

எனவே பிம்ஸ்டெக் அமைப்பு நாடுகள் ஒன்றுபட்டு உலக நாடுகளையும் இணைத்துக்கொண்டு நல்லதொரு எதிர்காலத்துக்காகவும் ஆரோக்கியமான உலகுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதன் மூலம், அதன் ஆணிவேரை பிடுங்கி எறிவதன் மூலம் மட்டுமே பேரழிவிலிருந்து உலகைக் காப்பாற்ற முடியும் இதுதான் யதார்த்தமானது.

ஜனாதிபதியின் பிம்ஸ்டெக் மாநாட்டு அழைப்பு கருத்தாழம் மிக்கதாக அமைந்திருப்பதால் பிம்ஸ்டெக்கின் புதிய தலைவராக எமது ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் பிராந்தியத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்கு காத்திரமான நடவடிக்கை எடுக்க முடியும். அனைத்து உறுப்புநாடுகளும், ஏனைய உலக நாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று நம்பிக்ைகயோடு எதிர்பார்ப்போம்.


Add new comment

Or log in with...