மின்னேரிய தாக்குதல்; பி.சபை உறுப்பினர் உள்ளிட்ட 12 பேர் கைது | தினகரன்

மின்னேரிய தாக்குதல்; பி.சபை உறுப்பினர் உள்ளிட்ட 12 பேர் கைது

மின்னேரிய தாக்குதல்; பி.சபை உறுப்பினர் உள்ளிட்ட 12 பேர் கைது-Hingurakgoda PS and 11 Others Arrested

 

மின்னேரியா தேசிய பூங்காவின், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில், பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், ஹிங்குராக்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) இரவு, மின்னேரியா தேசிய பூங்காவில் கடமையாற்றும் அதிகாரிகள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனையடுத்து, பொலன்னறுவை வலய வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கைது நடவடிக்கையை அடுத்து, தங்களது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்னேரியா தேசிய பூங்காவிற்குச் சொந்தமான, மின்னேரியா குளத்தின் ஒரு பகுதியில், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேசத்திலுள்ள ஏனைய மீனவர்கள் மற்றும் பிரதேசவாசிகளால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு அமைதியற்ற நிலை தோன்றியது.

இதன்போது அவர்கள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நால்வர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, குறித்த மீனவரை அங்கிருந்து அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...