காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விசாரணைகள் முடியும் வரை நிவாரணம் | தினகரன்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு விசாரணைகள் முடியும் வரை நிவாரணம்

*உண்மையை அறியும் உரிமை இதனால் பாதிக்காது
*ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை 5 ஆம் திகதி கையளிப்பு

காணாமல்போன குடும்பங்களுக்கு வாழ்வாதாரக் கொடுப்பனவுகளை அரசாங்கம் வழங்க வேண்டுமென காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் பரிந்துரைத்திருப்பதாக அதன் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

'பலவந்தமாக காணாமல் போனோர் தொடர்பான சர்வதேச தினத்தை முன்னிட்டு கொழும்பு ஜே.ஆர்.ஜயவர்த்தன நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். காணாமல்போனவர்களின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டிருந்த நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற காணாமல்போதல்கள் தொடர்பில் தகவல்களை திரட்டுவதற்கும் விசாரணைகளை நடத்துவதற்கும் காணாமல்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்குவது, மீள நிகழாமை, காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு உளரீதியான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை காணாமல்போனோர் அலுவலகம் தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இன்றையதினம் (நேற்று) இந்த இடைக்கால அறிக்கை வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தபோதும், எதிர்வரும் ஐந்தாம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.  ஆணைக்குழுவின் முக்கிய பரிந்துரைகள் குறித்து நேற்றைய நிகழ்வில் சுட்டிக்காட்டிய சாலிய பீரிஸ், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு தமது அலுவலகம் பரிந்துரைத்திருக்கும் பொருளாதார ரீதியிலான நிவாரண நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மையை அறிந்துகொள்ளும் உரிமையை சமரசம் செய்வதாக இருக்காது என்றும் கூறினார்.

விசாரணைகள் பூர்த்தியாகும் வரை காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால கொடுப்பனவொன்று வழங்கப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழு பரிந்துரைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். காணாமல்போனவர்களின் குடும்பங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளுக்கு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் போதல்களின் சாட்சிகளாக இருப்பவர்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் இருப்பதை நாம் அறிவோம். இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்" என்றும் சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

இந்த வருட ஆரம்பத்தில் நிறைவேற்றப்பட்ட பலவந்த காணாமல்போதல்களைத் தடுப்பதுதொடர்பான சட்டமூலத்தில் திருத்தங்களை காணாமல்போனோர் அலுவலகம் முன்வைத்திருந்ததாகவும் கூறினார். பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான அகழ்வுக் பணிகளில் போதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் விசாரணை செய்வதில் போதிய வசதிகள் இல்லாத நிலைமை காணப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

காணாமல்போனவர்களின் நினைவாக அஞ்சலிக் கூட்டங்கள் நடத்துவதற்கும், அவர்களின் நினைவாக தூபிகள் அமைப்பதற்கும் அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என ஆணைக்குழு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. தேசிய மட்டத்தில் நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

"உண்மையான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டுமாயின் கடந்த காலங்களில் பலர் காணாமல் போயுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. இது நீண்டகாலம் தீர்க்கப்படாத பிரச்சினையாகவும் உள்ளது. பலவந்த காணாமல் போதல்களில் ஈடுபட்டவர்கள் யுத்த வீரர்களாக கொண்டாடப்பட்ட, பாதிக்கப்பட்டவர்கள் துரோகிகளாக பார்க்கப்பட்ட காலமொன்று இருந்தது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந் நிகழ்வில் பிரதான உரையாற்றிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிக உடுகம,

காணாமல்போதல் மனித உரிமை மீறல் பிரச்சினை மட்டுமல்ல பாரதூரமான பிரச்சினையாகும். இதனை முழுமையாக நீக்க வேண்டும். சாட்சியங்கள் சரியான முறையில் இருந்தால் எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களை தடுக்க முடியும்.

குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பதுடன், பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். நாட்டில் தற்பொழுது காணப்படும் முறைமை சரியானதாக இல்லை.

சிலர் இதை புரிந்துகொள்ளவும் இல்லை. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அரசியல் அழுத்தங்களுக்கு தாங்கள் இடமளிப்பதில்லையென்றும் கூறினார்.

காணாமல்போனவர்களின் குடும்பங்கள் நியாயமான தீர்வொன்றை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான பிரச்சினைகளைக் கையாழும்போது சரியான கோட்பாடுகள் அவசியம். அது மாத்திரமன்றி பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற அரசியல் விருப்பமும் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...