என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடந்த கால வெறும் கண்காட்சி போலல்ல | தினகரன்

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடந்த கால வெறும் கண்காட்சி போலல்ல

பாரிய செலவில் வெறும் கண்காட்சியாக மட்டும் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கண்காட்சிகளைப் போலன்றி பாரிய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டதாக தேசிய அரசாங்கத்தின் “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” அமைவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

2018இல் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் மொனராகலையில் இடம்பெறும் “என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

“தேசத்திற்கு மகுடம்” போன்ற கண்காட்சிகள் வெறும் விழாக்களாக மட்டுமே அரசாங்கத்தின் பாரிய நிதி செலவில் நடத்தப்பட்டன. அதனால் அந்த மாவட்டத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட மாகாணத்திலோ மக்கள் எதிர்பார்த்த எத்தகைய அபிவிருத்தியும் இடம்பெறவில்லை.

அதற்கு மாறாக 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' கண்காட்சியையொட்டியதாக முழு மாவட்டமும் பாரிய அபிவிருத்தியடைவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்த அமைச்சர் அனைத்து கண்காட்சிக் கூடங்களையும் பார்வையிட்டதுடன் பொதுமக்களுடனும் அளவளாவினார்.

இதன்போது கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் வீண் விரயங்கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் மக்களுக்கான அபிவிருத்திச் செயல்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விவரண காட்சிப்படுத்தலொன்றும் இடம்பெற்றது.

அமைச்சர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். (ஸ)

மொனராகலையிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...