இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க மாட்டோம் என உறுதியளிக்க முடியாது | தினகரன்

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க மாட்டோம் என உறுதியளிக்க முடியாது

ரஷ்யாவிடம் இருந்த நவீன வான்வெளி பாதுகாப்பு கருவிகள் மற்றும் ஏவுகணைகள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க மாட்டோம் என உறுதியளிக்க முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பு, உளவுத்துறை சார்ந்த ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இருப்பினும் தேசிய நலன் கருதி எந்த நாட்டிற்காவது இதில் விதிவிலக்கு, சலுகை வழங்குவது குறித்து முடிவெடுக்க அதிபருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக கருவிகளை வாங்கும் பணி நடந்து வருகிறது. இந்த கருவிகள் மூலம் எதிரி நாட்டின் போர் விமானம், ஆளில்லா உளவு விமானம் என அனைத்து ரக பறக்கும் கருவிகளை 400 கி.மீ., தொலைவில் வரும் போது அடையாளம் காண முடியும். ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கி கொள்ள இந்தியாவை அனுமதிக்க வேண்டும். பொருளாதார தடை விதிக்கக் கூடாது என்ற ஒரு கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக பெண்டகன் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவின் கொள்கை காரணமாக இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அந்நாட்டிற்கு சலுகை வழங்கப்படும் என்ற ஒரு கருத்து வெளியாகியுள்ளது. இது தவறான கருத்து.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவது பெரிய கவலை தான். இங்கு அமர்ந்து கொண்டு இந்தியாவிற்கு சலுகை வழங்கி பொருளாதாரத் தடை விதிக்க மாட்டோம் எனக்கூற முடியாது. இது குறித்து அதிபர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.


Add new comment

Or log in with...