ஆளில்லா குட்டி "ட்ரோன்" விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறை | தினகரன்


ஆளில்லா குட்டி "ட்ரோன்" விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறை

டிசம்பர் முதல் அமுல்: பதிவு செய்ய வலியுறுத்து

 ட்ரோன் எனப்படும் சிறிய ரக ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி ட்ரோன்கள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவற்றை பார்வை வரம்பு தொலைவிற்கு அதாவது 450 மீட்டர் உயரத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களை உரிய அரசமைப்பிடம் பதிவு செய்து பதிவு எண்ணை பெறுவதும் அவசியம் என அரசின் விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள், கடலோர பகுதிகள், சர்வதேச எல்லை, மாநிலத் தலைமை செயலகங்கள், அரச மற்றும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் எனக் குறிப்பிட்ட சில பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மூலமாக உணவுப் பொருட்கள், வெடிப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் 250 கிராம் முதல் 150 கிலோ வரையிலான ட்ரோன்கள் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 250 கிராம் முதல் 2 கிலோ வரையிலான நானோ மற்றும் மைக்ரோ ட்ரோன்கள் குழந்தைகள் விளையாட்டு பொம்மையாக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2 கிலோவிற்கு மேற்பட்ட ட்ரோன்ககளை பயன்படுத்த முறையாக பதிவு செய்து அடையாள எண் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு கல்வித் தகுதியுடன் ஆங்கில அறிவு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் ட்ரோன்களை இயக்குவதற்கான புதிய விதிமுறைகள் அமுலுக்கு வருகின்றன. பாதுகாப்பு, மருத்துவம், விவசாயம், பேரிடர் மீட்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ட்ரோன்கள் எனப்படும் குட்டி விமானங்களின் பயன்பாடு அண்மை காலமாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...