சவால்களுக்கு மத்தியிலும் அரசின் ஸ்திரத்தன்மை | தினகரன்

சவால்களுக்கு மத்தியிலும் அரசின் ஸ்திரத்தன்மை

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாண்டு கால பயணத்தில் எட்டப்பட்ட பயன்கள் குறித்தும் நாட்டு மக்கள் அந்தப் பயன்களை புரிந்து கொள்ளும் வகையிலும் மொனராகலையில் 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி' நேற்றுமுன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை வரை இந்தக் கண்காட்சி இடம்பெறுகிறது. நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஆக்கபூர்வமான பல்வேறுபட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் கடந்த மூன்றாண்டு காலப் பகுதிக்குள் முன்னெடுத்து காத்திரமானதொரு நிலைக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

2025 ஆம் ஆண்டில் முன்னேற்றமடைந்ததொரு நாட்டை மக்களுக்குக் கையளிப்பதனை இலக்காகக் கொண்டு அரசாங்கம் அனைத்துத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்காட்சியை ஆரம்பித்து வைத்துப் பேசுகையில் தெரிவித்திருக்கிறார். என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா, கம்பெரலிய என்பன ஆரம்பம் மட்டுமே எனவும் வேறு பல தூரநோக்குடன் கூடிய திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பாரியதெரு கடன் சுமைக்கு மத்தியிலும் மூன்றாண்டு காலப் பகுதியில் ஆரோக்கியமான திட்டங்கள் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும், பொருளாதாரக் கட்டமைப்பை ஸ்திரத்தன்மையுடன் பேண முடிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெருத்த கடன் சுமையிலிருந்து நாடு ஓரளவு மீட்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் பிரதமர், 2020 ஆகும் போது 100 வீதமாக உள்ள கடன் சுமையை 75 சதவீதமாகக் குறைக்கக் கூடியதாக இருக்குமென நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். சவால்களைக் கண்டு அரசு பயப்படவில்லை எனவும் இடையில் சில தோல்விகளை சந்திக்க நேர்ந்த போதிலும் பயணத்தினை நிறுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

மூன்றாண்டுகளில் அரசு என்ன செய்தது என்று சிலர் கேள்விக்கணை தொடுத்து வருகின்றனர். மூன்றாண்டு காலப் பகுதியில் பலத்த சவால்களுக்கு மத்தியிலும் பொருளாதாரம் சீர்குலையாது பாதுகாக்கப்பட்டிருப்பதே பெரிய விடயமாகும். முன்னர் குறிப்பிட்டது போன்று பெரும் கடன் சுமைக்கு மத்தியிலும் மக்களின் தேவைகளை முடிந்தவரை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கண்களை மூடிக் கொண்டு பெறப்பட்ட கடன்களை சுமந்து கொண்டுதான் இந்த அரசு ஆட்சிப் பயணத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இவர்களது கேள்விகளுக்கு பிரதமர் ‘கிரிக்கெட்’ பாஷையில் பதிலளித்திருக்கிறார். "விக்கட்டுகளை பாதுகாத்துக் கொண்டே பயணத்தை தொடர்கின்றோம். அரசு மீது எறியப்படும் பந்துகளில் வேகத்தை கூர்ந்து அவதானித்து விக்கட்டுகளைப் பாதுகாத்துக் கொண்டுள்ளோம். இந்த தூரநோக்குதான் எம்மை எதிர்கால வெற்றி குறித்து சிந்திக்கச் செய்துள்ளது. முடியாது, இயலாது என்று கூறுவதை நாம் கனவில் கூட நினைக்கவில்லை. எம்மால் முடியும் என்ற மனஉறுதி எம்மிடம் உள்ளது" என்ற தொனியில் பிரதமர் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

அரசாங்கம் எந்தவொரு துறையையும் புறந்தள்ளி, ஒதுக்க முற்படவில்லை அனைத்துத் துறைகளையும் பொறுப்புமிக்கதாக மாற்றியமைத்து வருகின்றது. மக்களின் எதிர்பார்ப்புகளை குழிதோண்டிப் புதைக்கும் எண்ணம் அரசிடம் கிடையாது. 2015இல் நாட்டு மக்களுக்களித்த உறுதிமொழிகளில் ஒன்றைக் கூட விட்டுவிடாது 2020 இற்குள் நிறைவு செய்து காட்டுவோம். அரசு பூட்டிய அறைகளுக்குள்ளிருந்து திட்டம் வகுக்கவில்லை.

மேலிருந்து கீழ் நோக்கிப் பயணிக்கும் தவறான எடுகோளை அரசு மேற்கொள்ளவில்லை. கீழிருந்து மேல் நோக்கிய பயணத்தில் பலமான நம்பிக்கை வைத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அபிவிருத்தி முன்னேற்றமும் வளமான தேசமுமே எமது ஒரே இலக்காகும். இந்த இலக்கு நோக்கிய பயணத்தில் இடையில் சோர்ந்து விடாது இலக்கை எட்டும் வரையில் அரசு கண் துஞ்ச மாட்டாது. 2020இல் இந்த தூரநோக்குப் பயணத்தில் காத்திரமானதொரு மைல் கல்லைத் தாண்ட முடியுமெனவும் 2025இல் வெற்றி இலக்கை அடையக் கூடியதாக இருக்குமெனவும் அரசு உறுதியாக நம்பிக்கை வைத்திருப்பதை நோக்க முடிகிறது.

தொழில் முனைவு, பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி நடவடிக்கைகள் ஊடாக வளமானதொரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற இலட்சியத்துடன் நல்லாட்சி அரசு பயணித்துக் கொண்டிருக்கின்றது. இவை வெறும் பசப்பு வார்த்தைகளாகக் காணப்படவில்லை. பெரும் கடன் சுமைக்கு மத்தியிலும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இதனை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதால் மட்டும் எமது பிரச்சினைகள் தீர்ந்து விடப் போவதில்லை. நல்லிணக்கத்தையும், சமாதான சகவாழ்வையும் உத்தரவாதப்படுத்துவது மிக முக்கியமானதொன்றாகும். நம்பிக்கையை கட்டியெழுப்புவதோடு மக்களிடையே புரிந்துணர்வினையும், நல்லெண்ணத்தையும் மேலோங்கச் செய்ய வேண்டும். புரிந்துணர்வும் சகவாழ்வும் உத்தரவாதப்படுத்தப்படாத வரை நாட்டைக் கட்டியெழுப்புவது வெறும் கனவாகும்.

எனவேதான் நல்லிணக்கம், சகவாழ்வு, சமாதானம் புரிந்துணர்வு என்பவற்றை ஒரே திசையில் முன்னெடுத்து இன, மத, மொழி பேதம் கடந்து அனைவரும் இலங்கையர்கள் என்ற கோட்பாட்டில் எமது பயணத்தை தொடர்வது இன்றியமையாததாகும். இந்தப் பயணப்பாதை சீராக அமையும் போது நிச்சயமாக நாட்டில் நல்லதொரு விடியல் உதயமாகும். எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் செயற்பாடுகள் நிச்சயம் வெற்றி பெறும். இத்தகைய நல்லெண்ணத்துடன்தான் நல்லாட்சிப் பயணம் தொடர்கிறது. இடையில் போடப்படும் தடைக்கற்களை அரசு பொருட்டாகவே கொள்ளவில்லை என்ற பிரதமரின் மனத்தைரியம் நாட்டின் முன்னேற்றத்துக்கு பெரும் தெம்பாகவே அமைகின்றது.


Add new comment

Or log in with...