இலங்கை - மியன்மார் உடன்படிக்கை மீள செயற்படுத்தப்படும் | தினகரன்

இலங்கை - மியன்மார் உடன்படிக்கை மீள செயற்படுத்தப்படும்

 

இரு நாட்டு தலைவர்களும் இணக்கம்

இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான இணைந்த வர்த்தக உடன்படிக்கையை மீண்டும் செயற்படுத்தி இருநாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை புதியதோர் பாதையில் முன்னெடுக்க இருநாடுகளினதும் அரச தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் எனப்படும் 'பிம்ஸ்டெக்' (BIMSTEC) உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் மியன்மார் நாட்டின் ஜனாதிபதி வின் மைன்ட் (Win Myint) இற்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (30) முற்பகல் நேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே மேற்படி விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் மியன்மாருக்குமிடையில் வர்த்தக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக 1999 ஆம் ஆண்டு இந்த வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட மியன்மார் - இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன்போது தலைவர்கள் விசேட கவனம் செலுத்தினர்.

இரண்டு நாடுகளும் தேரவாத பௌத்த தத்துவத்தை பின்பற்றும் நாடுகளாகவும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நாடுகளாக இருப்பதன் காரணமாகவும் இரண்டு நாடுகளுக்குமிடையில் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தவகையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை இலகுவாக பலப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக மியன்மார் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், இலங்கை மியன்மாரின் நண்பன் என்ற வகையில் சர்வதேச மன்றங்களில் தேவையான எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ஜனநாயகத்துக்காக பாடுபடும் தலைவியான ஆங்சாங் சுகியின் நிகழ்ச்சித் திட்டத்தை குறித்து நினைவுகூர்ந்த ஜனாதிபதி, 2016 ஆம் ஆண்டு அவரை சந்தித்ததையும் நினைவுகூர்ந்தார்.

இன்று இலங்கையில் ஜனநாயத்தை பலப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதை தமது முதன்மையான பொறுப்பாக மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபித்து, ஜனநாயத்தை ஏற்படுத்தி, ஜனாதிபதி பதவியில் இருந்த எல்லையற்ற நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்தது பற்றியும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அத்துடன் 2015 ஆம் ஆண்டு தனது வேண்டுகோளின் பேரில் மியன்மாரிலிருந்து இலங்கைக்கு யானைக் குட்டியொன்றை வழங்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும் மியன்மார் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கை மக்களின் கௌரவத்திற்குரிய வரலாற்று முக்கியத்துவமிக்க தலதா மாளிகைக்கு அந்த யானைக் குட்டியை அன்பளிப்புச் செய்து “புலதிசி ராஜா” என்று அதற்கு பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கைக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தில் அந்த யானைக் குட்டியை பார்வையிடுவதற்கு வருகை தருமாறு மியன்மார் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மியன்மார் ஜனாதிபதி, மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக குறிப்பிட்டார். 60 வருடங்களுக்கும் மேற்பட்ட இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளையும் நினைவுகூர்ந்த மியன்மார் ஜனாதிபதி, தொடர்ச்சியாக இலங்கை மியன்மாருக்கு வழங்கிவரும் உதவிகளை பாராட்டினார். இலங்கையை சேர்ந்த சுமார் 300 பிக்குகள் மியன்மாரில் பல்வேறு பௌத்த நிலையங்களில் உள்ளதாக குறிப்பிட்டார்.

தேரவாத பௌத்த தத்துவத்தை பலப்படுத்தி அதனை முன்கொண்டு செல்வதற்கு இரண்டு நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட தலைவர்கள் உறுதியளித்தனர்.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத் துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் மியன்மார் முதலீட்டாளர்களை எதிர்காலங்களில் அதிகளவில் இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் மியன்மார் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விவசாய நாடுகள் என்ற வகையில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான விவசாயத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.

இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்தி சுதந்திரம் மற்றும் சுபீட்சமான நாடாக முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் தி்ட்டங்களை பாராட்டிய மியன்மார் ஜனாதிபதி, இலங்கைக்குத் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு மியன்மார் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 


Add new comment

Or log in with...