இறக்காமம் குளக்கரைக் காணிகளில் தொடரும் அத்துமீறிய குடியேற்றம் | தினகரன்


இறக்காமம் குளக்கரைக் காணிகளில் தொடரும் அத்துமீறிய குடியேற்றம்

 

வெளியேறுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கடும் உத்தரவு

இறக்காமம் குளக்கரை காணிகளில் அத்துமீறிக் குடியேறியுள்ளவர்களைக் குளக்கரை காணிகளிலிருந்து வெளியேறுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தொடர்ந்தும் கடும் உத்தரவு பிறப்பித்துள்ள போதும் குடியிருப்பாளர்கள் வெளியேறுவதாக இல்லை.

இதன் படி நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்தியத்தின் பொறியியலாளர் ரீ.மயூரனால் குடியிருப்பாளர் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்த உத்தரவின் படி நீர்ப்பாசன கட்டளையியல் சட்டத்தின் பகுதி 2இன் 93ஆம் பிரிவின் கீழ் நீரேந்து பகுதியில் அத்துமீறுவதும், நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படுவதும் தண்டனை சட்டக்கோவையின் 415ஆம் பிரிவின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றம் என்பதால், 2018 ஆகஸ்ட் மாதம் 10 க்கு முன் அத்துமீறிக் குடியேறியுள்ள குடியிருப்பாளர்கள் குறித்த காணிகளிலிருந்து வெளியேறுமாறும் கேட்கப்பட்டுள்ளனர். எனினும், இதுவரை எவரும் வெளியேறவில்லை என நீர்ப்பாசத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இறக்காமம் குளக்கரை காணிகளில் அத்துமீறிக் குடியேறியவர்களால் மேற்கொள்ளப்படும் நிர்மாணப்பணிகளையும் நிறுத்தி அவற்றை அகற்றி, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளிலிருந்து வெளியேறுமாறும் பிராந்திய பொறியியலாளர் மேலும் கேட்டுள்ளார்.

அத்துடன் நீண்ட கால தொன்மை வாய்ந்த இறக்காமம் குளத்தின் கரையோரக் காணிகள் கடந்த சில காலங்களாக கரையோரத்தை அண்டிய சிலரால் அத்துமீறிக் குடியேறி, நிர்மாணப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் தங்கள் தேவைக்காக கரையோரத்துக்குச் செல்ல முடியாதிருப்பதுடன் பாடசாலை மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சிக்கும் அசௌகரியமாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் மீனவர்கள் தங்களுடைய தோணிகளை நிறுத்த முடியாமலும் தங்களின் நாளாந்த மீனவத் தொழிலை மேற்கொள்ள முடியாமலும் அவதிப்படுகின்றனர். இதனால் இவ்விடயம் தொடர்பில் இறக்காமம் பிரதேச மீனவச் சங்கங்களால் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சுட்டிக்காட்டியதையடுத்தே இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நமது நிருபர்

 


Add new comment

Or log in with...