மின்னேரியா தேசிய பூங்கா மீண்டும் திறப்பு (UPDATE) | தினகரன்

மின்னேரியா தேசிய பூங்கா மீண்டும் திறப்பு (UPDATE)

வனஜீவராசி ஊழியர்கள், சபாரி ஜீப் சாரதிகள் போராட்டத்தில்-Wildlife Officials-Safari Jeep Drivers Strike

 

பொலன்னறுவை வலய, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மூடப்பட்ட மின்னேரியா தேசிய பூங்கா சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசி அதிகாரிகள் சிலர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


வனஜீவராசி அதிகாரிகள், சபாரி ஜீப் சாரதிகள் போராட்டத்தில் 1.39pm

சுற்றுலா பயணிகள் செல்வதில் சிரமம்

பொலன்னறுவை வலய, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்ட நடவடிக்கை காரணமாக, சுற்றுலா பயணிகள், மின்னேரியா, கவுடுல்ல, வஸ்கமுவ, அங்கம்மெடில்ல வன விலங்கு பூங்காக்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) இரவு, மின்னேரியா தேசிய பூங்காவில் கடமையாற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு தெரிவித்தே, அவர்கள் இவ்வாறு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்னேரியா தேசிய பூங்காவிற்குச் சொந்தமான, மின்னேரியா குளத்தின் ஒரு பகுதியில், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேசத்திலுள்ள ஏனைய மீனவர்கள் மற்றும் பிரதேசவாசிகளால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு அமைதியற்ற நிலை தோன்றியது.

இதன்போது அவர்கள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நால்வர் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு, குறித்த மீனவரை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த அதிகாரிகள் நால்வரும் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில், அமைதியற்று செயற்பட்ட இரு மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் இருவருக்கும் பகமுண நீதவான் நீதிமன்றினால் செப்டெம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.

ஆயினும், இச்சம்பவம் தொடர்பிலான முக்கிய சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்  தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த விடயத்தை அடுத்து, நேற்றைய தினம் (27) முதல், மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மின்னேரியா தேசிய பூங்காவிற்குள் நுழையும் பிரதான வாயிலின் முன்னால், ஹபரண மற்றும் மின்னேரியா பிரதேச சபாரி ஜீப் ஊழியர்களும் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் போராட்டம் காரணமாக, தாங்கள் பாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்தே, அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...