'ரிவிரெச'வுக்கு தலைமை தாங்கிய ரொஹான் தளுவத்த காலமானார் | தினகரன்

'ரிவிரெச'வுக்கு தலைமை தாங்கிய ரொஹான் தளுவத்த காலமானார்

'ரிவிரெச'வுக்கு தலைமை தாங்கிய ரொஹான் தளுவத்த காலமானார்-Former Army Commander Rohan Daluwatte Passed Away
General R De S Daluwatte (WWV RWP RSP VSV USP lom ndc psc) (Army Commander - 01st May 1996 - 15th Dec 1998)

 

இலங்கையின் 14 ஆவது இராணுவத் தளபதியான ஜெனரல் ரொஹான் தளுவத்த இன்று (27) காலமானார்.

1941 (மே 09) இல் பிறந்த அவர், மரணிக்கும்போது, 77 வயதாகும்.

'ரிவிரெச'வுக்கு தலைமை தாங்கிய ரொஹான் தளுவத்த காலமானார்-Former Army Commander Rohan Daluwatte Passed Awayகடந்த 1996 - 1998 (01.05.1996 - 15.12.1998) காலப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக கடமையாற்றிய அவர், விடுதலை புலிகளுக்கு எதிரான 'ரிவிரெச' இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து வைத்து, அதனை தலைமை தாங்கி நடாத்திச் சென்றார்.

போலிஸ் டி சில்வா, லீலா சோமாவதி (D. H. Paulis De Silva, D. W. Leela Somawathie) ஆகியோரின் மகனான ரொஹான் தளுவத்தவுக்கு, மாலினி எனும் தங்கையும், சுசந்த, பின்சிறி, ரூபசிறி, தனசிறி ஆகிய நான்கு சகோதரர்களும் உள்ளனர்.

தனது ஆரம்பக் கல்வியை தர்மபால வித்தியாலயத்தில் கற்ற அவர், பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் அதனை தொடர்ந்தார்.

1961 ஆம் ஆண்டு, கடேட் அதிகாரியாக (பயிற்சி) இராணுவத்தில் இணைந்த அவர், ஐக்கிய இராச்சியத்தின், ரோயல் மிலிட்டரி அகடமிக் சந்தேர்ஸ்ட் (Royal Military Academy Sandhurst) இல் இராணுவ பயிற்சியைப் பெற்றார்.

அவர், 1996 ஆம் ஆண்டு மே 01 ஆம் திகதி, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அவர் இலங்கையின் 14 ஆவது இராணுவத்தளபதியாக இருந்தபோது, விடுதலை புலிகளுக்கு எதிரான 'ரிவிரெச' இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து வைத்து, அதனை தலைமை தாங்கி நடாத்திச் சென்றார்.

இராணுவத்தில் 1963 முதல் 35 வருட கால சேவையில் ஈடுபட்ட அவர் 1998 இல் ஓய்வு பெற்றார்.

தனது சேவைக் காலத்தில், கடேட் பாடசாலையின் தலைமை வழிகாட்டல் அதிகாரியாகவும் (1979 - 1981), முதலாவது இராணுவ புலனாய்வு பிரிவின் கட்டளையிடும் அதிகாரியாகவும், இலங்கை இராணுவ சேவை வீரர்களின் கட்டளையிடும் அதிகாரியாகவும், மன்னார் படையணியின் கட்டளையிடும் இணைப்பு அதிகாரியாகவும், விநியோகம், போக்குவரத்து பணிப்பாளராகவும், இராணுவ பயிற்சி மையம் மற்றும் இராணுவ செயலகத்தின் கட்டளை அதிகாரியாகவும் பதவி வகித்தார்.

ஜெனரலாக தரமுயர்த்தப்பட்ட அவர், ஒன்றிணைந்த நடவடிக்கை மத்தியநிலையத்தின் பிரதானியாகவும், பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாகவும் பதவி வகித்தார்.

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அவர், 2002 முதல் 2005 வரையான காலப் பகுதியில், பிரேசிலுக்கான இலங்கையின் தூதுவராக நியமனம் பெற்றார். அதன் பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பதவி வகித்தார்.

அவர், இலங்கை இராணுவத்தால் வழங்கப்படும் உயரிய விருதான வீர விக்ரம விபூஷண விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...