தொழில்தர்மத்தை பேணி பணியாற்றுவது அவசியம்! | தினகரன்


தொழில்தர்மத்தை பேணி பணியாற்றுவது அவசியம்!

மத்திய மலைநாட்டின் கண்டி மாவட்டத்திலுள்ள கலஹா ஆறு ஏக்கர் தோட்ட வைத்தியசாலையில் பெரும் களேபர நிலை நேற்றுமுன்தினம் ஏற்பட்டது. சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க அப்பாவிக் குழந்தையொன்றின் உயிரிழப்பை அடிப்படையாகக் கொண்டுதான் இந்நிலைமை தோற்றம் பெற்றது. அதாவது சளித்தொல்லையால் அவதிக்கு உள்ளான இக்குழந்தை நேற்றுமுன்தினம் காலையில் சிகிச்சைக்காக குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சுமார் இரண்டு மணித்தியாலங்களாக எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் குழந்தை சுவாசிப்பதில் எதிர்கொண்டுள்ள நெருக்கடியை பொறுத்துக் கொள்ள முடியாத பெற்றோர் உடனடியாக குழந்தையைப் பேராதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அங்கு குழந்தை கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சளித்தொல்லைக்கு உள்ளாகியிருந்த இக்குழந்தைக்கு கலஹா வைத்தியசாலையில் உரிய முதலுதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்குமாயின் குழந்தை உயிரிழந்ததை தவிர்த்திருக்கலாம் என பேராதனை வைத்தியசாலை மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையறிந்த பிரதேசவாசிகள் கலஹா வைத்தியசாலையின் மருத்துவரொருவரை உடனடியாக இடமாற்றம் செய்யும்படி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு களேபர நிலையைத் தோற்றுவித்தனர். இந்நிலைமை பிரதேசத்திலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.அதனால் கலகமடக்கும் பொலிஸாரும் பொலிஸ் உயரதிகாரிகளும் ஸ்தலத்திற்கு உடனடியாக விரைந்தனர். அத்தோடு மத்திய மாகாண சுகாதாரத்துறை உயரதிகாரிகளும் அங்கு சென்றனர்.

அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்த போதிலும் அம்முயற்சி கைகூடாத நிலையில் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “இங்கு கடமை புரியும் வைத்தியர்கள் நோயாளர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதில்லை. ஆனால், அவர்களது பிரத்தியேக சிகிச்சை நிலையங்களில் சிறப்பாக கடமை புரிகின்றனர். ஏனெனில் அங்கு பணம் அறவிடப்படுவதே காரணமாகும். எனினும் எல்லா நோயாளர்களாலும் பணம் செலுத்தி சிகிச்சை பெற முடியாதே" என்று சுகாதாரத்துறை உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

இந்த நிலைமை நாடெங்கிலும் காணப்படவே செய்கின்றது. இந்நாட்டில் சுமார் 7, 8 தசாப்தங்களாக இலவச மருத்துவ சேவை நடைமுறையிலுள்ளது. இச்சேவைக்காக அரசாங்கம் முன்னுரிமை அடிப்படையில் கோடிக்காணக்கான ரூபாக்களை செலவிடுகின்றது. அரசாங்க வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட சகல ஊழியர்களுக்கும் அரசாங்கமே சம்பளம் உள்ளிட்ட சகல வசதிகளையும், சிறப்புரிமைகளையும் செய்து கொடுத்திருக்கிறது.

இருப்பினும் இந்த மருத்துவர்கள் இந்நாட்டின் இலவச கல்வியைப் பயன்படுத்தி கற்றுத் தேறியவர்களாவர். ஆனால் அவர்கள் மருத்துவரான பின்னர் மருத்துவ சேவையின் போது நடந்து கொள்ளும் விதம் குறித்து பரவலான விமர்சனங்கள் நிலவுகின்றன.

மருத்துவர்கள் என்பவர்கள் மக்களின் உடல் உள ஆரோக்கியத்துக்காக பணியாற்றுபவர்கள் என்பதை எந்நேரமும் கருத்தில் கொண்டவர்களாக செயற்பட வேண்டிய பொறுப்பை கொண்டிருக்கின்றனர். இருந்த போதிலும் ஒரு சில வைத்தியர்கள் அவ்வாறு செயற்படுகின்றார்களா என்ற கேள்வி மக்கள் மத்தியில் நிலவுகின்றது.

இந்நாட்டு மக்களின் வரிப்பணத்தின் மூலமான இலவசக் கல்வி மூலம் கற்று மருத்துவர்களாகும் இவர்கள் அதே மக்களுக்கு சேவை வழங்கும் போது ஒழுங்குமுறையாகவும் அதிக சிரத்தையோடும் சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. இது மக்கள் மத்தியில் காணப்படும் பெரும் மனக்குறையாகும். ஆனால், இந்த மருத்துவர்கள் தனியார் மருத்துவ நிலையங்களில் பிரத்தியேக சேவையில் ஈடுபடும் போது சிறப்பாக கடமையாற்றுகின்றனர்.

இந்நாட்டில் பிரத்தியேக மருத்துவ சேவையானது பணத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறுவதன் விளைவாகவே இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர். பொருளாதார வசதிபடைத்தவர்களால் மாத்திரம்தான் தனியார் மருத்துவ நிலையங்களில் பணம் செலுத்தி சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு சிகிச்சை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதியை எல்லா மக்களாலும் பெற முடியாது. இதனைக் கருத்திற் கொண்டுதான் இந்நாட்டில் முன்னுரிமை அடிப்படையில் இலவச சுகாதார சேவை பரந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றது.

இருந்தும் இவை தொடர்பில் கருத்தில்கொள்ளாத மருத்துவர்கள் தங்களது உரிமைகள் தேவைகள் என்பவற்றை அரசாங்கத்திடம் பெற்றுக் கொள்வதற்காக அப்பாவி மக்களையே பணயமாக வைக்கின்றனர். அதாவது தாம் மருத்துவர்களாக உருவாக்குவதற்கு பின்புலமாக இருந்து அதே மக்களை தம் தேவைகளை அடைந்து கொள்வதற்காக பணயக் கைதிகளாகப் பயன்படுத்தும் பழக்கம் இந்நாட்டு மருத்துவர்களிடம் மாத்திரம்தான் காணப்படுகின்றது.இது பெரும் வேதனைக்குரிய நிலைமையாகும்.

ஒருவர் மருத்துவராக கற்று கடமைக்கு செல்லும்போது தொழில் தர்மத்தை பேணி நடப்பதோடு எப்போதும் மனிதாபிமானத்துடன் செயற்படுவதாகவும் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றார். ஆனால் இந்த உறுதிமொழியை ஒருசில மருத்துவர்கள் கடமையின் போது கருத்தில் கொள்ளாது செயற்படுகின்றனர். இதன் விளைவாகவே கண்டி கலஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த அப்பாவிக் குழந்தைக்கு இரண்டு மணித்தியாலங்களாகியும் சிகிச்சையளிக்கப்படவில்லை. அதனால் குழந்தை உயிரிழந்திருக்கின்றது. இங்கு கடமையாற்றும் மருத்துவர்களும் தொழில் தர்மத்தை பேணி மனிதாபிமானத்துடன் நடந்திருந்தால் இம்மரணத்தை தவிர்த்திருக்கலாம். ஆகவே, மருத்துவர்கள் மனிதாபிமானத்தையும் தொழில் தர்மத்தையும் பேணி கடமையாற்றுவது மிகவும் அவசியமானது. அப்போது மருத்துவர்கள் தொடர்பாக நிலவும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் களையமுடிவதோடு, மக்களின் ஆரோக்கிய சேவையை மேலும் மேம்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.


Add new comment

Or log in with...