முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றம் அமைக்கும் அவசியம் இல்லை | தினகரன்


முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றம் அமைக்கும் அவசியம் இல்லை

குற்றச்சாட்டுகளை  ஆதாரபூர்வமாக  நிரூபிக்க வேண்டும்

முல்லைத்தீவில் அரசாங்கம் எந்த சிங்கள குடியேற்றத்தையும் உருவாக்காது. அவ்வாறான எந்தத் தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாதென இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றுத் தெரிவித்தார்.

சிங்களக் குடியேற்றம் தொடர்பில் சாட்சி இருப்பதாக கூறும் வட மாகாண முதலமைச்சர், இந்த விடயம் தொடர்பில் முதலில் மத்திய அரசாங்கத்துடன் பேசியிருக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்படுவதாக மக்கள் நேற்று முன்தினம் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஆராய வேண்டும். சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.

சிங்களக் குடியேற்றம் தொடர்பில் சாட்சி இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் குற்றஞ்சாட்டியிருப்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

அவர் சாட்சி இருப்பது பற்றி பேசுவதை விடுத்து குடியேற்றங்கள் உருவாக்கப்படுகிறதா? இல்லையா? என்று தான் அறிவிக்க வேண்டும். சாட்சி பற்றி பேச வேறு நபர்கள் இருக்கிறார்கள்.

 இவ்வாறு ஏதும் குடியேற்றங்கள் அமைக்கப்படுகிறதா? என அவர் அரசாங்கத்திடம் வினவியிருக்க வேண்டும். அதன் பின்னர் தான் அறிக்கை விட்டிருக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் திட்டம் அரசாங்கத்திற்கு கிடையாது. கோட்டாபயவின் காலத்தின் பின்னர் அவ்வாறான முன்னெடுப்புகள் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

வடக்கிலுள்ள யுத்த நினைவுச் சின்னங்களை அகற்ற ​வேண்டும் என வடக்கு முதலமைச்சர் கோரி வருவது பற்றியும் இங்கு வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர்,

வடக்கு, கிழக்கிலுள்ள மக்களுக்கு யுத்த நினைவுச்சின்னங்கள் ஒரு பிரச்சினை அல்ல. மூன்று வேளையும் நன்றாக சாப்பிட்டு சொகுசு வாகனத்தில் செல்கையில் தென்படும் நினைவுச்சின்னம் பற்றி சீ.வி பேசுகிறார். ஆனால் மூன்று வேளையும் சாப்பிடாத மக்கள் இவற்றை அகற்றுமாறு கேட்கவில்லை. அவர்கள் தமது அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு தான் கேட்கின்றனர். 30 வருட யுத்தத்தின் பின்னர் தமது காணிகளை வழங்குமாறு கேட்கிறார்கள். மீன்பிடித்தொழிலை தடையின்றி முன்னெடுக்க இடமளிக்குமாறு கோருகின்றனர்.இவ்வாறு தான் மயிலிட்டி துறைமுக பிரதேசம் அண்மையில் விடுவிக்கப்பட்டது. கொக்குளாய் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த மக்களின் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம். தமது பிள்ளைகள் காணாமல் போனதற்கு தீர்வு வழங்குமாறும், நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்குமாறும், வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருமாறும் தான் அந்த மக்கள் கேட்கின்றனர்.

வடபகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வடமாகாண சபைக்கு நிதி ஒதுக்கினாலும் அவை செலவிடப்படுவதில்லை. இதனை மறைக்க இனவாத, மதவாத கருத்துகளை பரப்புகின்றனர். கடந்த அரசும் இவ்வாறு தான் தமது குறைகளை மறைக்க தேசப்பற்று பற்றி பேசியது. வடமாகண முதலமைச்சரின் கருத்துக்களை வடபகுதி மக்கள் பெரிதாக பொருட்படுத்தவில்லை என்றார்.

வடக்கிலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிக்கப்படுவது தொடர்பில் இதன் போது வினவப்பட்டன. வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் நாசமாவதாக குறிப்பிட்ட அவர் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.(ப)

ஷம்ஸ் பாஹிம்

 

Add new comment

Or log in with...