வளமான தேசத்துக்கான பொருளாதார இலக்கு! | தினகரன்

வளமான தேசத்துக்கான பொருளாதார இலக்கு!

2015 ம் ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கைப் பிரஜைகள் வரலாற்றுத் திருப்புமுனை ஒன்றுக்கான பின்புலத்தை ஏற்படுத்தும் நோக்கில் இரண்டு தடவைகள் தமது வாக்குப்பலத்தை பயன்படுத்தினர்.

இனங்கள் மற்றும் மத ரீதியிலான பிளவுகளை ஊக்குவிக்கும் மற்றும் அனைத்து வகையான அடிப்படைவாதங்களுக்கும் எதிராக வலுவான ஜனநாயகம், நீதி நிலைநாட்டப்படல்., நல்லாட்சி, நல்லிணக்கம், நிலைபேறான சமாதானம், சமவுரிமை, அனைத்து மக்களினதும் மனித உரிமைகள் மற்றும் நாட்டின் பல்லினப் பரம்பலை அங்கீகரித்தல், அதனை ஊக்குவித்துப் பாதுகாப்பதற்காகவும், இலங்கை அரசியல் கலாசாரத்தில் புதியதொரு மாற்றத்துடன் அனைத்து மக்களுக்கும் பயன்தரு சமநிலை அபிவிருத்தியொன்றுக்காக வடக்கு, தெற்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாண மக்கள் தமது வாக்குப் பலத்தைப் பயன்படுத்தினர்.

அவை வலுவான ஜனநாயகம், ஜனநாயக அமைப்புகள், நல்லிணக்கம், நிலைபேறான சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் உறுதிப் பிரமாணம் எடுத்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக வாக்களித்து பொது மக்களின் எதிர்பார்ப்புகள் என்பதுடன் மக்கள் பிரதிநிதிகள் அவற்றை நிறைவேற்றும் பொறுப்பைக் கொண்டுள்ளனர்.

சர்வதேச ரீதியாக இலங்கையின் நற்பெயரை மீண்டும் கட்டியெழுப்புதல், அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்களின் உருவாக்கம், தகவல் அறியும் சட்டம், கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், உத்தேச நல்லிணக்க கட்டமைப்புக்காக பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளல், அரசியலமைப்புச் சபையொன்றை நிறுவுதல், நாட்டு மக்களை ஊழல்களிலிருந்து விடுவிப்பதற்கான செயற் திட்டங்கள் மற்றும் நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்ட நுழைவுப் பாதை வழியாக நாட்டை முன்னகர்த்திச் செல்லல் என்பன அவற்றில் பிரதானமான விடயங்களாகும்.

ஏனைய விடயங்கள் தொடர்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துகொள்ள முடியாது போயிருந்தாலும், அவற்றையும் ஊக்கத்துடன் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

பொது மக்களின் கடன் சுமையினை குறைப்பதற்காக அவர்கள் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்காக வேண்டி முக்கிய நடவடிக்கைகள் பலவற்றை நாம் எடுத்துள்ளோம். வரலாற்றில் ஒருபோதும் நடந்திராததைப் போன்று அரச மற்றும் தனியார் துறையினரின் வேதனங்களை உயர்த்துதல். ஓய்வூதியக் கொடுப்பனவினை அதிகரித்தல், சமுர்த்தி கொடுப்பனவினை அதிகரித்தல், பெற்றோலியம், எரிவாயு உட்பட அத்தியவசியமான ஔடதங்களின் விலைகளை குறைத்தல், இதுவரை 430,000 க்கும் அதிகமான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவை மேற்கூறப்பட்ட நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ள சில நடவடிக்கைகளாகும்.

ஏனைய ஜனநாயக நாடுகள் போன்று மேற்குறித்த விடயங்களில் விரைவான முன்னேற்றமொன்றை பெற்றுக்கொள்வதற்கான வழி இலங்கையைப் பொறுத்தமட்டில் நேரடி வழிமுறை கொண்டதோ அல்லது இலகுவானதோ அல்ல. ஏனெனில் இலங்கையும் ஏனைய நாடுகள் போன்று சர்வதேச ஒழுங்கிற்கும், இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான ஆபத்துக்களுக்கும் முகம் கொடுக்கவும் நேர்ந்துள்ளதன் காரணமாக சிற்சிறு பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளர்ச்சி கண்ட பாதுகாப்பு மூலோபாயங்களுடன் நவீன பாதுகாப்பு திட்டத்தின் ஊடாக இலங்கையை வலுவான நாடாக கட்டியெழுப்புவதில் நாம் கவனம் செலுத்துவோம்.

இவ்வேளையில் நம்மிடமிருந்து பல்லாண்டுகளாக பறிபோயிருக்கும் கனவுகளான நிலையான, அமைதியான, நல்லிணக்க, சுபீட்சமான இலங்கைச் சமூகமொன்றை உருவாக்குவதற்கான நமது எதிர்பார்ப்புகளை நனவாக்கிக்கொள்வதற்காக நாம் தொடர்ந்தும் தளராத உறுதியுடன் செயற்படுவோம்.

அரசாங்கத்தின் பொருளாதார இலக்கு

2025ம் ஆண்டளவில் இலங்கையை சுபீட்சம் மிக்கதொரு நாடாக கட்டியெழுப்புவது எங்கள் நோக்காகும். நம் நாட்டின் அனைத்துப பிரஜைகளுக்கும் உயர்ந்த வருமானத்தையும் சிறந்ததொரு வாழ்க்கை முறைக்குமான சூழலை ஏற்படுத்திக்கொடுப்போம். இதனை அடைவதற்கான தகுந்த கட்டமைப்பு மாற்றம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்களின் வருமானத்தை அதிகரித்தல்., தொழில்வாய்ப்புகளை வழங்குவதை உறுதிப்படுத்தல், அனைவருக்கும் வீடு மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரம் போன்ற விடயங்களுக்கு இதன்போது முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்து மகா சமுத்திர பிராந்தியத்தின் ஏற்றுமதிப் பொருளாதாரக் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும். இலங்கையின் உள்நாட்டு நுகர்வோர் சந்தையானது இருபது மில்லியன் வாடிக்கையாளர்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். யதார்த்தமும் அதுதான். அதன் காரணமாக உயர்மட்டத்திலானதும், நிலைபேறான, நீண்டகால அபிவிருத்தியொன்றுக்காக வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புக்களில் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. உபாய ரீதியாக இலங்கையை இந்துமகா சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக நாம் மாற்றியமைப்போம். அதன் மூலம் உலக உற்பத்தி வலயமைப்பு வாய்ப்பினுள் உள்நுழைவதற்கான வாய்ப்புகளை நாம் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்போம். இலங்கையரின் வாழ்க்கையை சுபீட்சமாக்கும் பொருட்டு உள்நாட்டுப் பொருளாதாரத்தை பலமிக்கதாகவும், துரிதமான முன்னேற்றத்தைக்கொண்டதாகவும் மாற்றியமைப்போம்.

போட்டித்தன்மையை ஊக்குவித்து, வெளிப்படைத்தன்மையுடன் அனைத்து இலங்கையர்களுக்கும் செழிப்புடனான சமவாய்ப்பை ஏற்படுத்தி ஊழலை முறியடிப்போம்.

அபிவிருத்திப் பயணத்தின் குறுக்கீடுகள்

உற்பத்தி, செயற்திறன் மற்றும் நமது பொருளாதாரத்தை உலகளாவிய ரீதியில் போட்டி போடும் நிலைமைக்கு கொண்டுவருவதற்கு தேவையான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டுள்ளோம். அரசாங்கத்தின் நிதி நிதி நிர்வாகம், சந்தையின் நிறுவன ரீதியான நெருக்கடிகள், பலவீனமான சொத்துரிமைகள், போதுமான உட்கட்டமைப்புகளின்மை, ஏற்றத்தாழ்வுமிக்க நிதிவளம், நிறுவனங்களின் பலவீனங்கள் மற்றும் பொருட்களின்விலைகளில் மாற்றங்கள் என்பன நாம் எதிர்கொண்டுள்ள சிக்கல்களாகும்.

பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க கட்டமைப்புக் குறைபாடுகள்- பெருமளவில் பெறப்பட்ட வர்த்தக கடன்களை அடிப்படையாகக் கொண்ட அரசின் உட்கட்டமைப்பு செலவினங்களினால் ஏற்படும் செயற்பாடுகளினால் வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் நிதிவளம் மற்றும் அந்நிய முதலீடுகளில் தளம்பல் என்பன நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களாகும். இவற்றுக்கு மத்தியில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. நேரடி அந்நிய முதலீடுகள் மற்றும் உள்நாட்டு தனியார் முதலீடுகளில் வீழ்ச்சியொன்று ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீடுகள் அனைத்தும் ஆதன மற்றும் அது சார்ந்த வர்த்தக முயற்சிகள், சந்தையில் போட்டித்தன்மை குறைந்து இறக்குமதிகளிலும் முதலீடு செய்யப்படுகின்றது.

ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் தளம்பல்- கேள்வி- நிரம்பல் ஊடாக நிர்ணயிக்கப்படாத பணப்பறிமாற்ற வீதம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவிற்கான காரணியாகும். ஏற்றுமதி தொடர்பிலான நம்பிக்கையீனம், பாதிப்புகள் என்பன ஏற்றுமதித் துறையின் பின்னடைவுக்குக் காரணமாகும். இலங்கையின் ஏற்றுமதியானது ஒருசில ஏற்றுமதி உற்பத்திகளில் மட்டுமே இன்னும் தங்கியுள்ளது. அதற்காக வர்த்தக கடன்கள் மீது பாரிய நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளின் நேரடி முதலீடுகள் பெரும்பாலும் வீடமைப்புத் தொகுதிகள் மற்றும் காணிகள், வெளிநாடுகளுக்கான பயிற்சிெபற்ற தொழிலாளர்கள் அனுப்பும் அந்திய செலாவணி போன்ற துறைகளை நோக்கியதாகவே உள்ளன.

பொது அரசாங்க நிதி வளங்களின் தாக்கங்கள்- வீழ்ச்சியடைந்து வரும் அரச வருமானம், அதிகரித்துவரும் பொதுபடுகடன் முக்கியமாக சலுகைகள் அற்ற வெளிநாட்டு கடன்களுடன் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அரசாங்கத்தின் கடன் தொகை அதிகரிப்பு காரணமாக அபிவிருத்தியில் தடைகள் ஏற்படுகின்றது. நம்பிக்கையீனம், அதிகரித்த வரி விதிப்பு, சமூக மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்கான வளங்களை வேறு துறைகளில் பயன்படுத்தல், அதிகரித்த அரச கடன்கள், தனியார் மற்றும் அந்நிய முதலீடுகள் கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்படாமை போன்றவை அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது.

ஒழுங்குபடுத்துதலினால் வளர்ச்சி பாதிக்கப்படல்- இவ்வாறான தடைகள் அந்நிய மற்றும் உள்நாட்டு தனியார் முதலீடுகளுக்குத் தடையாக உள்ளன. இதில் வர்த்தக ரீதியான உற்பத்திகளை மேற்கொள்வதற்கான இடப்பிரச்சினை முக்கியமானதாகும். அதேபோன்று ஒன்றிணைந்த சர்வதேச அபிவிருத்தியொன்றுக்கான பயிற்சிபெற்ற தொழிலாளர் வளம் நம் நாட்டில் இல்லை. நடைமுறைக்கேற்ப புதுப்பிக்கப்படாத, தொழிலாளர் சந்தையின் செயற் திறனற்ற தன்மை முக்கியமாக குறைந்தளவு பெண்களின் பங்களிப்பு என்பனவும் தடைகளாக உள்ளன.

இறுக்கமான ஏற்றுமதி, இறக்குமதி வரிச் சட்டங்கள் தொலைத் தொடர்பு, போக்குவரத்து, எரிபொருள் விலைகள் அதிகரிப்பு அவற்றின் தரத்தில் குறைபாடு எரி சக்தி, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்புகளின் வளப்பற்றாக்குறைகள் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகளுக்கான தடைகளாக காணப்படுகின்றன.

எதிர்வரும் மூன்றாண்டுகளுக்கான  பொருளாதார இலக்குகள்

2025 அபிவிருத்தி நோக்கிற்காக எதிர்வரும் ஈராண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கான குறைப்பாடுகளைக் களைவது அரசாங்கத்தின் நோக்கமாகும். எதிர்வரும் ஈராண்டுகளுக்குள் தனிநபர் வருமானத்தை 5,000 அமெரிக்க டொலர்கள் வரை உயர்த்துவது எமது இலக்காகும். பத்து இலட்சம் தொழில்வாய்ப்புகள், ஆண்டொன்று 05 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அந்நிய முதலீடுகளை அதிகரித்துக்கொள்வது, வருடமொன்றுக்கு 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஏற்றுமதிகளை இரட்டிப்பாக அதிகரித்துக்கொள்வது போன்றவை அரசாங்கத்தின் ஏனைய இலக்குகளாகும். எம்மால் கடந்த 02 வருட காலப் பிரிவினுள் மாத்திரம் 430,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி உள்ளோம். இவ்வாறான இடைப்பட்ட இலக்குகளின் ஊடாக 2025ம் ஆண்டளவில் நம் நாட்டை உயர் மத்திய தர வருமான பொருளாதார நாடாக வளர்ச்சிபெறச் செய்வது எமது நோக்கமாகும்.

வளர்ச்சிக்கான புதிய வழிமுறை

போட்டிச் சூழலில் அறிவுசார் ஆற்றல்களை அதிகரித்துக்கொள்வதற்கான வழிகளை ஏற்படுத்துவது எமது இலக்காகும். அதன் மூலம் புதிய பேரண்டப் பொருளாதார சந்தை வாய்ப்புக்கான போட்டியில் நாமும் முன்னேறக் கூடியதாக இருக்கும்.

சமூக சந்தைப் பொருளாதார கொள்கைகள் சிறப்பான நிறுவனங்களையும் பலமான சந்தை அமைப்பையும், சுமுகமான சமூகத்தையும் உருவாக்க உத்வேகமளிக்கும். நிலைபேறான கொள்கைகள் சக்திமிக்க சந்தைக் கட்டமைப்பொன்றையும், நீதியான சமூகக் கட்டமைப்பொன்றையும் ஏற்படுத்தும். தனியார் துறையினருக்கும் இதில் முக்கிய பங்குண்டு. கூடிய உற்பத்தித் திறனைப் பெற்றுக்கொள்ளல், புதிய உற்பத்திமுறைகள், உற்பத்திகளின் தரத்தை அதிகரித்தல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்தல் என்பனவும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். பொருளாதாரத்தை போட்டிச் சூழல் கொண்டதாக மாற்றியமைப்பதற்கு நாம் தனியார் துறையினருடன் ஒன்றிணைய வேண்டியுள்ளது. அதன் மூலம் வெற்றிகரமான சர்வதேச வாய்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

போட்டிப் பொருளாதார வாய்ப்பு மற்றும் சமூக நலனோம்பல் என்பன குறித்த சந்தை வாய்ப்பினை கொள்கை வகுப்புகளின்போது கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய விடயங்களாகும். தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்தி சுபீட்சம் மற்றும் சௌபாக்கியத்தை அடைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவோம். பல்துறை சார் துரித அபிவிருத்தியொன்றை உருவாக்கி, தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவ செயற்திறன் மிக்க வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்ந்து, தரமானதும், சர்வதேசத்தில் சந்தை வாய்ப்புள் கூடியதுமான உற்பத்திகளை அதிகரித்து, அதனுடன் இணைந்ததாக உள்நாட்டின் தனியார் பங்களிப்பை வளர்த்துக்கொள்வதும் எமது நோக்காகும். வளர்ச்சி, தன்னிறைவுப் பொருளாதாரம் என்பவற்றின் நிறுவன மற்றும் கொள்கை மறுசீரமைப்புகள் மூலம் உற்பத்திகளை அதிகரித்து சந்தை வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்வதும் எமது நோக்காகும்.

ஆற்றல் மிகு நடுத்தர பொருளாதார வர்க்கத்தினராக பொதுமக்களை முன்னேற்றுவது அரசாங்கத்தின் இலக்காகும். சமூகப் பொருளாதார வழிமுறையில் உச்சத்தை அடைந்துகொள்ளக் கூடிய நடுத்தர வர்க்கமொன்றை உருவாக்கி, நீதியான முறையில் அரச தொழில்வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நாம் முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.

மிகவும் பலனுள்ள சட்ட மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளல் புதிய உள்நாட்டு வருமானச் சட்டமூலம், வெளிநாட்டு செலாவணி சட்டமூலம், தமது வருமானம் தொடர்பில் சுயவிருப்பில் தகவல் அளிக்கும் சட்டமூலம், அரச காணி மற்றும் வங்கிச் சட்டமூலம், குப்பைகளை கண்டபடி கொட்டுதல் தொடர்பான சட்டமூலம், அரச வர்த்தக பொது முயற்சிகள் சட்டமூலம், விமான நிலைய மற்றும் துறைமுகங்கள் சட்டமூலம், ருஹுணை பொருளாதாரக் கூட்டுத்தாபன சட்டமூலம், காணி (சிறப்பு) சட்டமூலம், நிலைபேறான அபிவிருத்திக்கான சட்டமூலம், பொறுப்புகளை முகாமைத்துவம் செய்யும் சட்டமூலம் மற்றும் தேசிய கடன் முகாமைத்துவ சட்டமூலம் என்பன வர்த்தக சிநேகபூர்வ சூழல் ஒன்றை ஏற்படுத்தும். அது வெற்றிகரமான வர்த்தக முயற்சிகளுக்கான சிறந்த பின்புலமாகும்.

பேரண்டப் பொருளாதாரத்தை வலுப்படுத்தல்

சக்திமிக்க நிதிவளம், பொருத்தமான நிலையான விலை மற்றும் சந்தைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட செலாவணி வீதம் என்பன எமது பேரண்டப் பொருளாதாரத்தின் மூன்று முக்கிய தூண்களாகும்.

வளர்ச்சிக்கான சிக்கல்கள், அரச நிதி தொடர்பான பொறுப்பு மற்றும் வரவு செலவுப்பற்றாக்குறை, அரச கடன்கள் இலங்கையின் வரி வருமானம் 2015ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துகொண்டிருந்தது. நடுத்தர பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில் குறைந்தளவு வரியே அறவிடப்பட்டது. வரவு செலவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் பெற்றுள்ள கடன் மொத்த தேசிய உற்பத்தியில் 79.3 வீதத்தை கொண்டிருக்கின்றது. நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் திறைசேரிக்கு பெரும் சுமையாகும். எனவே 2018ம் ஆண்டளவில் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக உறுதிமிக்க பொருளாதார கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியேற்பட்டது.

நடுத்தர அரச கடன்களை குறைத்துக்கொள்வற்காக வருமான அடிப்படையிலான பொருளாதாரக் கட்டமைப்பொன்றை பேணுதல் இதன் பிரகாரம் வரி அறவிடும் முறை மறுசீரமைக்கப்படும் மொத்த தேசிய உற்பத்தியில் வரிகள் மூலமான வருமானம் 16 வீதமாக்கப்படும். வரிச்சலுகை, வரி நீக்கம் மற்றும் விசேட விகிதாசாரம் என்பன ஒழுங்கமைப்பட்டு நீதியானதும்,செயற்திறன் மிக்கதுமான வரி அறவிடும் முறையொன்று ஏற்படுத்தப்படும். மிகவும் நீதியான, முற்போக்கான வரிமுறையொன்று ஏற்படுத்தப்படும். தற்போது 20:80 விகிதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் மறைமுக வரிமுறையானது 40:60 விகிதமாக மாற்றியமைக்கப்படும். வருமானத்தை அதிகரித்துக்கொள்வதற்காக வரி அறவிடப்படாத வருமான வழிமுறைகள் ஏற்படுத்தப்படும்.

அரச செலவினங்கள் ஒழுங்கமைக்கப்படும் அரசாங்கத்தின் அரச நிதி முகாமைத்துவ பொறுப்பு சட்டமூலத்தின் ஊடாக கட்டாய இலக்குகளை நிர்ணயித்து வருமானக் குறைகள் மற்றும் மொத்த அரச கடன்கள் என்பன ஒழுங்கமைக்கப்படும். அரச பொது தொழில் முயற்சிகள் நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து, அவற்றை இலாபகரமான அமைப்புக்களாக மாற்றுதல், அதற்காக அதனை மறுசீரமைத்தல்.

வளர்ச்சிக்கான செயற் திட்டத்தை வலுப்படுத்துவதற்காக நிலைபேறான நிதிவளத்தைப் பேணுவது அரசாங்கத்தின் நோக்கமாகும் நடுத்தர மற்றும் நீண்டகால தன்னிறைவுப் பொருளாதார இலக்குகளை நிர்ணயித்து முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். 2018ம் ஆண்டு முதல் வரவு செலவுத் திட்டத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த வழி செய்யப்படும்.

உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன்களின் பொறுப்பு தொடர்பான மூலோபாய முகாமைத்துவம் ஏற்படுத்தப்படும் 2020ம் ஆண்டளவில் அரச கடன்களை மொத்த தேசிய உற்பத்தியில் 70 வீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பரந்தளவிலான அரச முதலீட்டு வாய்ப்பினை ஊடாக அபிவிருத்திக்கான முதலீட்டு செலவு முன்னுரிமை அடிப்படையில் அதிகரிக்கப்படும் இதற்கேற்ப 2017- 2020ம் ஆண்டுக் காலப்பகுதியில் அரசாங்க முதலீடு மொத்த தேசிய உற்பத்தி 5--6 வீதமாக அதிகரிக்கப்படும். கடந்த காலங்களை போன்று கட்டிடங்களை மாத்திரம் நிர்மாணிக்காமல் கல்வி, சுகாதாரம், ஆய்வு மற்றும் ஆராய்ச்சி, தொழில் பயிற்சிகளுக்கான மனித வள அபிவிருத்திக்காக இந்த முதலீடு பயன்படுத்திக்கொள்ளப்படும்.

கடந்த காலத்தில் அந்நிய செலாவணி விகிதம் நீண்டகால அபிவிருத்தியில் பாதிப்பேற்படுத்தியது பாரியளவிலான கடன்கள் காரணமாக கட்டுப்பாடற்ற பணவீக்கம் அதிகரித்தது. இலங்கை மத்திய வங்கியினாலும் அதனை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமற் போனது. அதன் காரணமாக கடன் சுமை அதிகரித்தது. கடன்களைச் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. காலம் கடந்த நிலையில் அதனை ஒழுங்குமுறைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் பொருளாதார சக்கரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் சிதைக்கப்பட்டது.

விலைக்கட்டுப்பாடு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும்- உணவுப் பொருட்களின விலை அதிகரிப்பின் காரணமாக பொது மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளைத் தணிப்பற்கு அரசாங்கம் இரண்டு வழிகளில் போராட வேண்டிய நிலையில் உள்ளது. உள்நாட்டு வழங்கல் மற்றும் விநியோக வலையமைப்பை ஒழுங்கமைப்பதும், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து போட்டி மற்றும் நியாய விலையில் விற்பனை செய்வது அரசாங்கம் கடைப்பிடிக்கும் வழிமுறையொன்றாகும். அதன் மூலம் நடுத்தர மற்றும் நீண்டகால அடிப்படையில் விலைக்கட்டுப்பாட்டை பேணிக்கொள்ள முடியும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள இலங்கை மத்திய வங்கி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. குறைந்த பணவீக்கத்தை பேணிக்கொள்வதனூடாக பொருளாதார நடவடிக்கைகளையும் போட்டித்தன்மைகளையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.

இலங்கையின ஏற்றுமதிகளை போட்டி அடிப்படையில் சர்வதேச சந்தையில் முன்வைக்க முடியும். மிகவும் நெகிழ்வான செலாவணி விகிதம் ஒன்றினூடாக வெளிநாட்டு நிதிக்கையிருப்பை அதிகரித்து வெளிச்சக்திகளின் தாக்கத்திலிருந்து பொருளாதாரம் பாதுகாக்கப்படும்.


Add new comment

Or log in with...