சலுகை வட்டி அடிப்படையில் கடனுதவித் திட்டம் | தினகரன்

சலுகை வட்டி அடிப்படையில் கடனுதவித் திட்டம்

 

இலங்கையர்கள் ஆதிகாலம் தொட்டே சர்வதேசத்துடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாவர். அதன் மூலம் உள்ளூரிலும் வர்த்தக சமூகமொன்று உருவானது. இது தொடர்பாக இலங்கையர்களிடமுள்ள வியாபாரத் திறமையைப் பயன்படுத்தி இலங்கையைத் தொழில் முயற்சியாளர்களின் சொர்க்கபுரியாக மாற்றியமைக்கும் நோக்குடன் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

2017 மற்றும் 2018ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையை நிறைவேற்றும் முகமாக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டம் நிதி மற்றும் ஊடக அமைச்சால் அரச மற்றும் தனியார் வங்கிகள், சர்வதேச நிதி ஒத்துழைப்பு நிறுவனங்கள் மற்றும் ஏனைய பங்களிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுத்தப்படும்.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் நிதி மற்றும் நிதியல்லாத சலுகைகளை பெற்றுக் கொடுக்கும் முறைகளை செயற்படுத்துவதற்கும் தேவையான ஆலோசனைகள், நிதி மற்றும் ஊடக அமைச்சினால் குறிப்பிட்ட வங்கிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிகள் குறிப்பிட்ட சலுகைகளை பெற்றுக்கொடுக்க ஆரம்பித்துள்ளன. இந்தக் கடன் திட்டத்துக்காக 2018ம் ஆண்டில் வழங்கப்படவுள்ள வட்டி சலுகைக்காக அரசால் 5250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த மொத்தப் பணத்தைக் கொண்டு பொருளாதாரத்துக்கு 60,000 மில்லியனளவிலான மூலதனத்தை வழங்க முடியும். அதன் மூலம் 50,000 வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. அனைத்து “என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்” 16 யோசனைத் திட்டங்களைக் கொண்டுள்ளது. 11 சலுகைவட்டி அடிப்படையிலான திட்டங்கள் 3 வெளிநாட்டு உதவியால் செயற்படுத்தப்படும் மீள் நிதியாக்க திட்டம், 2 நிதி மற்றும் நிதியில்லாத சலுகைகளை வழங்கும் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1. சலுகை வட்டி அடிப்படையிலான கடன் திட்டம்

1.1 “ரன் அஸ்வென்ன” (தங்க அறுவடை) கடன் திட்டம் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் வணிகமயமாக்கல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இந்த கடன் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் விவசாயிகள், விவசாய அமைப்புக்கள், விவசாயம் தொடர்பான தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்யவும், தனியார் துணை தொழில் முயற்சியாளர்கள் விவசாயிகளுடன் முன் ஒப்பந்த அடிப்படையில் வர்த்தக மட்டத்தில் நடத்தப்படும் பாரிய அளவிலான பண்ணைகளை ஆரம்பிக்கவும், அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நவீன தொழில் நுட்ப வசதியுடனான களஞ்சியங்களை அமைக்கவும் அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபடும் வர்த்தகர்கள் மற்றும் அலங்கார மலர் உற்பத்தியாளர்களுக்கு தமது வியாபார நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் சலுகை வட்டி வீதத்தில் கடன் பெற்றுக்கொடுக்கப்படும்.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி, ஸ்ரீலங்கா தேசிய சேமிப்பு வங்கி, ஹற்றன் நெஷனல் வங்கி, வர்த்தக வங்கி மற்றும் வர்த்தக வங்கி, டீ. எப். சீ. சீ. வங்கி, செலான் வங்கி, பான் ஏசியா வங்கி, காகில்ஸ் வங்கி மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக கடனைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த கடன் திட்டத்தின் கீழ் 750 மில்லியன் ரூபாவை ஆகக் கூடிய கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். மீள செலுத்தும் காலம் 5 வருடங்களாகும். வட்டி வீதத்தில் நுற்றுக்கு 50 வீதத்தை அரசு செலுத்துவதால் தற்போதைய சந்தை வட்டி வீதத்துக்கு அமைய கடனைப் பெற்றுக்கொள்ளும் தரப்பினரால் வருடத்துக்கு செலுத்த வேண்டிய வட்டி நூற்றுக்கு 6.75 வீதமாகும். அரசு இதன் கீழ் சலுகை வட்டியிலான கடனை வழங்க 2018ம் ஆண்டுக்காக ஒதுக்கியுள்ள நிதி 925 மில்லியன் ரூபாவாகும்.

1.2 “கொவி நவோதா”

கடனுதவித் திட்டம் தாவர ஒட்டு, தாவர கன்றுகள் நடல், களையெடுத்தல், அறுவடை செய்தல், விவசாய காணிகளை பண்படுத்தல் போன்ற விவசாய நடவடிக்கைகளுக்காக இயந்திரங்களை பாவிக்க ஊக்குவிப்பதன் மூலம் சிறிய அளவிலான விவசாய தொழிலை இயந்திரமயமாக்கி உற்பத்தி செலவை குறைத்து விவசாயிகளை பலப்படுத்தல் அதிக பட்ச கடனாக 500,000 ரூபா வழங்கப்படும்.

வருடாந்த வினைத்திறன் வட்டி 13.5 விதமாகும். மானிய வட்டி 75% கடன் பெற்றோர் செலுத்த வேண்டிய வட்டி வீதம் 3.38 வீதமாகும்.

1.3 “ரிய சக்தி” திட்டம்

இக்கடன் மூலம் பயன்பெறுபவர்கள் பாடசாலை சிற்றூர்திகளின் (வான்களின்) உரிமையாளர்களாவர். அதிகபட்ச கடனாக 4,000,000 ரூபா வழங்கப்படும். வருடாந்த வினை திறனான வட்டி விதம் 13.5 வீதமாகும். மானிய வட்டி வீதம் 75% கடன் பட்டோரால் செலுத்த வேண்டி வட்டி வீதம் 3.38% ஆகும்.

1.4 ரிவி பல சவி

இதன் மூலம் வீட்டு உரிமையாளர்கள் பயன்பெறுவார்கள். வீடுகளுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரத்தைப் பெற கடன் வழங்கப்படும். மேலதிக மின்சாரத்தை விற்பனை செய்வதால் மேலதிக வருமானத்தைப் பெறமுடியும். அதிகபட்ச கடனாக 350,000 ரூபா வழங்கப்படும். வருடாந்த வினைத்திறனான வட்டி வீதம் 13.5% மானிய வட்டி வீதம் 50% கடன்பட்டோர் செலுத்தவேண்டிய வட்டிவீதம் 6.75% வீதமாகும். அரசு ஒதுக்கியுள்ள நிதி 1500 மில்லியன் ரூபாவாகும்.

1.5 “திரி சவிய”

இதன்மூலம் பயன் பெறுபவர்கள் கோழி வளர்ப்பாளர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள் இதன் மூலம் கிராம மக்களின் போசணையை அதிகரிக்க முடியும். அதிகபட்ச கடன் தொகை 50,000 ரூபா, வருடாந்த வினைத் திறன் வட்டிவீதம் 13.5% மானிய வட்டி வீதம் 100% கடன்பட்டோரால் வட்டி செலுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி 75 மில்லியன் ரூபாவாகும்.

1.6 ஜய இசுர கடன் திட்டம்

வருடாந்த விற்பனை 10 மில்லியன் ரூபாவுக்கும் 250 மில்லியன் ரூபாவுக்கும் இடையிலும் ஊழியர்களின் எண்ணிக்கை 5 இற்கும் 50 இற்கும் இடையிலுள்ள விவசாயம், கடற்றொழில், கால்நடைகள், அலங்கார மலர்ச்செய்கை, வீட்டுத் தோட்டம் மற்றும் பொறியியல், அச்சிடல், சுற்றுலா கைவினைப் பொருட்கள், ஆடைகள், தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் ஈடுபட்டுள்ள, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களது அதிக பட்ச கடன் தொகை 100,000,000 ரூபா (ஏற்றுமதி) 50,000,000 (ஏற்றுமதியல்லாத) ஆகும். வருடாந்த வினைத்திறனான வட்டி 13.5% மானிய வட்டி 50% கடன் பட்டோர் செலுத்த வேண்டிய வட்டி 6.75% ஆகும். அரசு ஒதுக்கியுள்ள நிதி 750 மில்லியன் ரூபாவாகும்.

1.7 சொந்துரு பியச

இதன் மூலம் பயன்பெறுபவர்கள் தற்போது வீடொன்றை அமைக்க ஆரம்பித்து அதனை பூர்த்திசெய்ய முடியாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களாகும். அதிக பட்ச கடன் தொகை 200,000 ரூபாவாகும். வருடாந்த வினைத்திறனான வட்டிவீதம் 13.5% ஆகும். மானியவட்டி 50% வீதமாகும். கடன்பட்டோர் செலுத்த வேண்டிய வட்டி 6.75% வீதமாகும்.

1.8 மாத்ய அருண

இதன் மூலம் பயன்பெறுபவர்கள் பதிவு செய்துள்ள ஊடகவியலாளர்களாகும். அதிகபட்ச கடன் தொகை 300,000 ரூபா. வருடாந்த வினைத்திறனான வட்டி 13.5% மானிய வட்டி 100% ஆகும். கடன்பட்டோர் வட்டி செலுத்த வேண்டியதில்லை.

ஊடக உபகரணங்களை புதுப்பிப்பதற்காக வழங்கப்படும் கடன் தொகை 150,000 ரூபாவாகும். வருடாந்த வினைத்திறனான வட்டி 13.5% வீதமாகும். மானிய வட்டி 50 வீதமாகும். கடன்பட்டோர் செலுத்த வேண்டிய வட்டி 6.75 வீதமாகும். ஒதுக்கப்பட்டுள்ள நிதி 25 மில்லியன் ருபாவாகும்.

1.9 ஹரித கடன் (பசுமைக் கடன்)

இதன் மூலம் உக்கிப்போகக் கூடிய மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் பொதியிடும் பொருட்களை உற்பத்தி செய்வோர் சிறிய அளவிலான ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சேதன உரத்தினை தயாரிப்பவர்கள் பயன்பெறுவார்கள்.

அதிகப்பட்ச கடன் தொகை 1,000,000 ரூபாவாகும். மானிய வட்டி 50% ஆகும். கடன்பட்டோர் செலுத்த வேண்டிய வட்டி 6.75% ஆகும்.

 


Add new comment

Or log in with...