இரண்டரை ஏக்கருடன் வாழ்ந்த மக்களுக்கு கால் ஏக்கர் காணி! | தினகரன்

இரண்டரை ஏக்கருடன் வாழ்ந்த மக்களுக்கு கால் ஏக்கர் காணி!

"நாம் வாழ்ந்த இரண்டரை ஏக்கர் காணிக்குப் பதிலாக கால் ஏக்கர் காணியைத் தருகிறார்களாம். அதை ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது" என்று உறுதியாகக் கூறுகின்றனர் பொத்துவில் பிரதேசத்திலுள்ள கனகர்கிராம மக்கள்.

தங்களது காணிகளை மீட்டுக் கொள்வதற்காக கடந்த 15 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராம மக்களுக்கு 40 பேர்ச்சஸ் வீதம் அதாவது கால் ஏக்கர் வீதம் விடுவிப்பதாகக் கூறி, வனபாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட வனத்துறை உயரதிகாரி டி.முனசிங்க காணிகளை அளவையிட்டு எல்லையிட முற்பட்ட போது மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

வனபாதுகாப்புத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அதிகாரி டி.முனசிங்க மற்றும் உயரதிகாரிகள் நேற்றுமுன்தினம் அங்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினர்.

30 வீட்டுத் திட்டத்தில் வாழ்ந்த 30குடும்பங்களுக்கும் 40 பேர்ச்சஸ் வீதம் அதாவது கால் ஏக்கர் வீதம் விடுவித்து ஒப்படைக்கவிருப்பதாகக் கூறினார் அவர். அவற்றை உடனேயே அளந்து தரத் தயாராகவிருப்பதாகவும் அவர் கூறினார்.

கனகர்கிராம மீள்குடியேற்ற சங்கத் தலைவி புஞ்சிமாத்தயா றங்கத்தனா இதற்குப் பதிலளிக்கையில்

"முதலில் அதிகாரிகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இரண்டரை ஏக்கர் நிலத்துடன் வாழந்து வந்தவர்கள். 2 ஏக்கர் சேனைப் பயிர்ச் செய்கைக்கும் அரை ஏக்கர் வீட்டிற்குமாக தந்துதான் எம்மை முன்னாள் எம்.பியான அமரர் எம்.சி.கனகரெத்தினம் ஐயா எம்மை 30 நிரந்தர வீடுகளில் குடியேற்றினார்.

அப்படி வாழ்ந்து வந்த எங்களுக்கு கால் ஏக்கர் நிலமா? ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அப்படிப் பார்த்தால் 79 ஏக்கர் காணி இந்த 30 குடும்பங்களுக்குமாக விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நாம் கேட்பது இந்த 79 ஏக்கரையல்ல. 1960களிலிருந்து இங்கு 278 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அவர்களில் எம்.சி.கனகரத்தினம் ஐயா 30குடும்பங்களுக்கு மாத்திரமே முதற்கட்டமாக வீடுகளை அமைத்துத் தந்தார். மற்றவர்களுக்கு அமைப்பதற்கிடையில் அவர் காலமாகி விட்டார்.

எனவே எமக்கு காணி தருவதாயின் 278 குடும்பங்களுக்கும் காணி தர வேண்டும். இல்லையென்றால் எவருக்கும் அந்தக் காணி தேவையில்லை. நீங்கள் அளக்கவும் வேண்டாம், தரவும் வேண்டாம்"என்று உறுதியாகக் கூறினார்.

அதிகாரி முனசிங்க இதற்குப் பதிலளிக்கையில் "எனது அதிகாரத்திற்குட்பட்ட வகையில் நான் இந்த 30 வீட்டுத் திட்டத்திலிருந்தவர்களுக்கு மாத்திரமே தலா 40 பேர்ச்சஸ் வீதம் மட்டுமே அளந்து தர முடியும். அதற்குமேல் என்றால் என்னால் முடியாது. வேண்டாம் என்றால் வேண்டாம் என்று கையெழுத்திட்டுத் தாருங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

"ஆம் கையெழுத்திட்டுத் தருகின்றோம்"என்று தலைவி றங்கத்தனா கையெழுத்திட்டு வழங்கினார்.

இதனையடுத்து முனசிங்க தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் குழுவினர் காணிகளை அளக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் ஊறணி, கனகர் கிராம தமிழ் மக்களின் காணிமீட்புப் போராட்டம் தொடங்கி 15 தினங்களைக் கடந்துள்ளது.

தற்போது காடு மண்டிக் கிடக்கும் தமது சொந்தக் காணிக்காக போராடி வரும் பொத்துவில் கனகர்கிராம தமிழ் மக்களின் நிலமீட்புப்போராட்டம் பற்றிய செய்திகள் அண்மைக் காலமாக பரவலாக ஊடகங்களில் அடிபட்டதை வாசகர்கள் அறிவார்கள்.

இற்றைக்கு 58 வருடங்களுக்கு முன்பிருந்து அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் தமது காணிகளைக் கையளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 1960களில் சுமார் 278 குடும்பங்கள் அக்கிராமத்தில் வாழ்ந்து வந்தன. 1981களில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் காலத்தில் முன்னாள் எம்.பி. அமரர் எம்.சி.கனகரெத்தினத்தின் முயற்சியால் வீடுகட்ட அரை ஏக்கர் நிலமும் பயிர் செய்ய 2 ஏக்கர் நிலமும் தரப்பட்டு 30 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவர்கள் மகிழ்ச்சியாக சேனைப் பயிர்ச் செய்கையுடன் வாழ்ந்து வந்தனர்.

1990களில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 28 வருடங்களாக அங்கு குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றசாட்டாகும்.

அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் முட்கள் நிறைந்த சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டிக் காணப்படுகின்றது. அந்தக் காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30 வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன. 2000 வருடங்களுக்கு முன்னர் எங்கெங்கு மக்கள் வாழ்ந்தனரென்ற தடயங்களைக் கூறுகின்ற தொல்பொருளியலாளர்களுக்கு, 28 வருடங்களுக்கு முன்னர் இங்கு மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்று கூறுவதற்கு நேரமெடுக்காது.

இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள், சமுகசேவையாளர்கள் எனப் பலரும் வந்து அம்மக்களுடன் கலந்துரையாடி பல உறுதிமொழிகளையும் அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் இக்காணியை மீளளிக்க முன்னர் உறுதி கூறியிருந்தார். எனினும் எதுவும் நிறைவேறவில்லை.

"நாம் இறந்தாலும் இந்த இடத்திலே சாவோமே தவிர எமக்கான உறுதியான ஆவணம் கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் ஓயாது? நிலத்தை மீட்கும் வரை எமது போராட்டம் ஓயாது" என்று அக்கிராமத்தின் மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கச் செயலாளர் வே.அருணாசலம் கூறுகிறார்.

அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 பிரதான வீதியில் ஊறணி எனுமிடத்தில் இந்தக் கனகர்கிராமம் உள்ளது.

அம்மக்கள் இரவுபகலாக அந்த காட்டுப் பகுதியின் வீதியோரத்தில் முகாமிட்டு இரவுபகலாக தங்கியிருந்து போராட்டத்தை நடாத்தி வருகின்றனர். அந்த முகாம் தற்போது இரண்டாகியுள்ளது. அருகில் தண்ணீர் வவுசரொன்று நிறுத்தப்பட்டுள்ளது. அங்கேயே அடுப்பு மூட்டி சமையல் செய்கின்றனர். இடையிடையே தேநீர் போடுகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கூறுகையில் "இங்கு பலரும் வருகின்றனர், போகின்றனர். எமக்கு அரை ஏக்கரில் வீடு கட்டித் தரப் போவதாகக் கூறுகின்றனர். எமக்கு வீடு வேண்டாம். எமது சொந்தக் காணியினை வழங்குங்கள். அதுவே தேவை.எனவே முதலில் எமது காணியினைப் பெற்றுத் தாருங்கள்.

தமிழ்த் தலைமைகள் வடக்கில் காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றனரே தவிர, பொத்துவில் காணியை விடுவிக்குமாறு கூறாதது கவலையளிக்கிறது" என்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுள் இதயவலி காரணமாக இ.நடேசபிள்ளை, க.யோகேஸ்வரி, க. சுபத்ரா ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன், கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண. ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் மற்றும் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், பிரதேசசபை உறுப்பினர் சின்னையா ஜெயராணி, மூத்த சமுகசேவையாளர் எஸ்.தம்பிராசா, த.தே.கூட்டமைப்பின் திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் த.கமலராஜன், பொத்துவில் உபதவிசாளர் பெருமாள் பார்த்திபன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கே.செல்வராஜா, ரி.கலையரசன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் நிலைமையை நேரில் பார்வையிட்டு மக்களுடன் உரையாடியிருந்தனர். வனவளத்துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

"எமது உடன்பிறப்புகளின் இப்போராட்டம் பூரணமாக வெற்றியடைய வேண்டுமானால் அம்பாறை மாவட்ட தமிழ்க் கிராமங்களின் பொது அமைப்புகளின் ஒட்டுமொத்தமான ஆதரவு அவசியம்" என்று பொத்துவில் பிரதேச சபையின் உபதவிசாளர் பெருமாள் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வி.ரி. சகாதேவராஜா
காரைதீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...