சமூகத்தின் துன்பங்களை போக்க அயராது பாடுபட்டவர் அஸ்வர் | தினகரன்

சமூகத்தின் துன்பங்களை போக்க அயராது பாடுபட்டவர் அஸ்வர்

முதலாவது நினைவு தினம் இன்று

இலங்கையின் அரசியலில் தனக்ெகன ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட ஏ.எச்.எம். அஸ்வர் மறைந்து இன்று ஓராண்டாகிறது.

மர்ஹும் அஸ்வர் ஒரு மூத்த அரசியல்வாதி. ஓர் ஊடகவியலாளர். அரசியலில் அமைச்சர் பதவி வரை உயர்வு கண்டவர். சமுதாயத்தோடு இணைந்து வாழ்ந்த அவர் அரசியலால் பணம் சம்பாதிக்கவில்லை.

எளிமைப் பண்பும், பிறருக்கு உதவி உபகாரம் செய்வதும் அவரின் தனித்துவங்கள்.

தேசியப் பட்டியல் மூலம் முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச அஸ்வரைப் பாராளுமன்ற உறுப்பினராக்கினார். எம். பி ஆசனமே கிடைக்காத புத்தளத்துக்கு முஸ்லிம் சிறுபான்மை மகனான அஸ்வரை அவர் நியமித்தார். அஸ்வர் புத்தளம் பிரதேசத்துக்கு பெரும் சேவை புரிந்தார்.

மூத்த அரசியல் தலைவர்ககளான அமரர் டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்த்தன, ரணசிங்க பிரேமதாச, கலாநிதி ரீ. பி. ஜயா, டொக்டர் எம். சீ. எம். கலீல் போன்றோருடன் நெருங்கிப் பழகினார். மும்மொழி வல்லுநரான இவர், இந்தத் தலைவர்களில் உரைகளை மொழி பெயர்த்துள்ளார்.

வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட வேளையில் அகதிகளுக்கான மனிதாபிமானச் சேவைகளில் மும்முரமாக ஈடுபட்டார்.முஸ்லிம் சமய கலாசார, இராஜாங்க அமைச்சராக இவர் பெரும் பணிகளை மேற்கொண்டார்.

பாராளுமன்றத்தை ஓர் உயர்ந்த இடமாகக் கொண்டு பணி செய்த அஸ்வர் ஒருநாள் கூட பாராளுமன்ற அமர்வுகளைத் தவற விடவில்லை. முன்கூட்டியே காலையில் பாராளுமன்றம் செல்லும் அவர் நாடாளுமன்றில் மூடப்பட்ட பின்னரே வெளியேறுவார். முன்னுமாதிரியான எம்.பி.யாக இருந்ததால் பாராளுமன்ற விவகாரங்களில் சிறந்த புலமை இவரிடம் நிறைந்திருந்தது.

இவரால் முஸ்லிம் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். மஸ்ஜித், மத்ரஸா தினம் கொண்டாடப்பட்டது. ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் புதுவடிவம் கண்டன. மத்ரஸாக்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

பலரின் உயர்ச்சிக்கு அவர் காரணகர்த்தாவாக இருந்துள்ளார். முன்னாள் சபாநாயகர்களான எம். எச். முஹம்மத், எம். ஏ. பாக்கீர் மாக்கார் போன்ற தலைவர்களுக்கு அந்தரங்கச் செயலாளராக இருந்த அஸ்வர், பாராளுமன்ற விவகார அமைச்சராகவும் இருந்துள்ளார். ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகர், ஊடக ஆலாட்சி அதிகாரி பதவிகளையும் வகித்த இவர் ஒரு சிறந்த ஊடகவியலாளரும் ஆவார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பினரான இவர், அகில இலங்கை முஸ்லிம் லீக், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளனம், வை.எம்.எம்.ஏ.பேரவை எனப் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளில் முக்கிய பங்கேற்று சமூகப் பணிகளை மேற்கொண்டார்.

முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படும் வேளைகளில் எல்லாம் தீர்வுகளைக் காண அவர் ஆர்வமாக நடவடிக்கை எடுத்தார்.தமிழ் மீது பற்றுமிக்க இவர் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளை ஏற்பாடு செய்தார். தமிழறிஞர் கலநிதி ம.மு. உவைஸ், முன்னாள் சபாநாயகர் எம். ஏ. பாக்கீர் மாக்கார் ஆகியோருடன் இணைந்து இம்மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தினார்.

எப்.எம். பைரூஸ்


Add new comment

Or log in with...