தி.மு.க தலைவரானார் மு.க.ஸ்டாலின் | தினகரன்

தி.மு.க தலைவரானார் மு.க.ஸ்டாலின்

தி.மு.க தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டிருப்பதை திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

தி.மு.க தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து தி.மு.கவின் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று ஆரம்பமானது.

தி.மு.கவின் பொதுச் செயலர் க. அன்பழகன், தி.மு.கவின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகளை அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது, கழகத் தலைவர் பொறுப்புக்கு ஸ்டாலினின் மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை 1,307 பேர் முன்மொழிந்தும், வழி மொழிந்தும் உள்ளனர். தலைவர் பொறுப்புக்கு அவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடாததால் அவரே கழகத் தலைவராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தி.மு.கவின் மூத்தத் தலைவர்கள் பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். அண்ணா அறிவாலயத்தின் வாயிலில் பட்டாசுகள் வெடித்தும், கரகோஷம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேடையில் ஏறிய ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து அன்பழகன் தனது நல்லாசியை வழங்கினார்.

மேலும், தி.மு.க பொருளாளர் பொறுப்புக்கு துரைமுருகன் ஏகமனனதாகத் தேர்வு செய்யப்பட்டார் என்றும் அன்பழகன் அறிவித்தார்.


Add new comment

Or log in with...