தென்னிலங்கை மக்களை குடியேற்ற மகாவலிக்கு அதிகாரம் இல்லை | தினகரன்

தென்னிலங்கை மக்களை குடியேற்ற மகாவலிக்கு அதிகாரம் இல்லை

மாவை சேனாதிராசா

நீர்ப்பாசனத்திற்காக தண்ணீரை வழங்குவது பிரச்சினையில்லை, ஆனால் அதனோடு தென்னிலங்கை மக்களை அரசாங்கம் குடியேற்றக்கூடாது எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றுத் தெரிவித்தார்.

மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி நேற்றுக் (28) காலை முல்லைத்தீவில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்

மகாவலித் திட்டம் ஊடாக தமிழர்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றுவதற்கு அரசு நீண்டகாலமாகவே திட்டமிட்டிருந்து. காமினி திஸநாயக்க அமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களில் அதன் ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினை இன்று நேற்றுஆரம்பித்த விடயமல்ல, அமைச்சர் காமினி திஸநாயக்காவின் திட்டப்படி நாற்பதாயிரம் சிங்கள குடும்பங்களை முல்லைத்தீவில் குடியேற்றுவதுதான் அந்த ஆவணம் எங்களிடம் இருக்கின்றது. ஒரு இலட்சம் ரூபா ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்கும் திட்டம் அந்த நாட்களில் எங்கள் தலைவர்கள் நடத்திய போராட்டங்கள் பேச்சுக்களினால் அந்த நாட்களில் மூவாயிரம் குடும்பங்களுடன் அது நிறுத்தப்பட்டுள்ளது அல்லது இந்த பிரதேசம் முழுக்க சிங்கள தேசமாக மாறி இருக்கும்.

இப்போது ஆறாயிரம் சிங்கள மக்கள் குடியேறியுள்ளதாக அறிவித்துள்ளார்கள். இதுபற்றி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.

இது விடயம் குறித்து ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடம் சம்பந்தனும் நானும் திட்டவட்டமாக சொன்னோம். நீர்பாசனத்திற்காகத் தண்ணீரை வழங்குவது பிரச்சினை இல்லை. அதோடு தென்னிலங்கை மக்களை நீங்கள் குடியேற்றக்கூடாது என்று வாதாடி இருக்கின்றோம் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. சில நாட்களுக்கு முன்னர் மயிலிட்டியில் ஜனாதிபதிக்கு முன்னால் மகாவலியை பற்றி நான் பேசினேன்.

நேற்றும் ஜனாதிபதி செயலகத்தில் நாங்கள் பேசினோம். நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றீர்கள் என்று பேசினோம்.

ஜனாதிபதி உடனடியாக மகாவலி சபைத் தலைவருடன் தொலைபேசியில் பேசினார். ‘நேரடியாகவே வந்து மகாவலி அபிவிருத்தி தலைவர்கள் சொல்லுவது சரியானதா? அல்லது கூட்டமைப்பினர் சொல்லுவது சரியானதா? என்று பார்ப்பேன். அப்படி தவறுகள் இடம்பெற்று வெளியிலிருந்து குடியேற்றப்படுபவர்களை நான் தடுத்து நிறுத்துவேன் என ஜனாதிபதி மீண்டும் நேற்று வாக்குறுதி தந்துள்ளார். அவர் இங்க வந்து பார்த்தால் பார்க்கட்டும் .

மாங்குளம் குறூப் நிருபர்

 


Add new comment

Or log in with...