விற்பனை முகவர் நியமனத்தில் விக்கிரமசிங்க தலையீடு | தினகரன்

விற்பனை முகவர் நியமனத்தில் விக்கிரமசிங்க தலையீடு

முன்னாள் பணிப்பாளர் சாட்சியம்

விற்பனை முகவர்களை நியமிக்கும் பொதுவான நடைமுறைக்குப் புறம்பாகவே ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் தலைவர், முகவர்களை நியமித்ததாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் யஸ்மின் மஜீட் கூறினார். முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்கவின் சிபாரிசுக்கிணங்கவே இம்முகவர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை, மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் கேடரிங் ஆகியவற்றில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

பொது விற்பனை முகவர்களைத் தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சைகளின் ஆகக்குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்களையும் முன்னாள் தலைவர் விக்கிரமசிங்க விற்பனை முகவர்களாக நியமித்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பித்தவாறே யஸ்மின் மஜீட் இவற்றைக் கூறினார். ஆணைக்குழுவின் அரச சட்டத்தரணி சஜித் பண்டாரவினால் குறுக்கு விசாரணை செய்யப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்க, மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோரின் விருப்பப்படியே விற்பனை முகவர்கள் நியமிக்கப்பட்டதாகவும், விற்பனை முகவர்களை நியமிப்பதற்கு முன்னாள் தலைவர் வெளிநாடுகளுக்கு விஜயம் செய்திருந்ததாகவும் இதனால் விமானசேவைக்கு பாரிய செலவுகள் ஏற்பட்டதாகவும் விசாரணையில் அவர் மேலும் கூறினார்.


Add new comment

Or log in with...