இந்து சமுத்திரத்தில் சுதந்திர கப்பற் பயணம்; உறுதிசெய்தால் வளமான எதிர்காலம் | தினகரன்


இந்து சமுத்திரத்தில் சுதந்திர கப்பற் பயணம்; உறுதிசெய்தால் வளமான எதிர்காலம்

சமுத்திரத்தை அண்டிய நாடுகளின் நாகரிகம் சர்வதேச நெறிமுறைகளுடன் பெறுமதியானது

வியட்நாமில் பிரதமர் ரணில்

இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் கடற் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமெனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

ஹனோய் நகரிலுள்ள செரடன் ஹோட்டலில் நடைபெற்ற மூன்றாவது இந்து சமுத்திர மகாநாட்டின் ஆரம்ப உரையை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாற்பத்தெட்டு நாடுகளைச் சேர்ந்த 280 பிரதிநிதிகள் இம்முறை மகாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள். இந்து சமுத்திரம் என்பது “எதிர்காலத்தின் சமுத்திரம்” எனக் கூறிய பிரதமர், சமுத்திரத்தை அண்டிய நாடுகளின் நாகரிகம் ஊடாக உருவாகும் கலாசாரம், சர்வதேச தரம் மற்றும் நெறிமுறைகளுடன் பெறுமதி மிக்கதாக இந்து சமுத்திர வலயம் போதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் மாற்றங்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க வலய அமைப்புக்களால் முடியாது போயுள்ளது. அதனால், புதிய அமைப்பினை உருவாக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காக இம்முறை இம்மாநாடு பலம் பொருந்தியதாக அமையுமென பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பியர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் இந்து சமுத்திரத்தினூடான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. இந்த வர்த்தக நடவடிக்கைகளில் இன, மத கலாசார பிரச்சினைகள் காணப்படவில்லை. இந்து சமுத்திர பிராந்திய வர்த்தகர்கள் ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். அந்த கடந்தகால சம்பிரதாயங்களை மீண்டும் உருவாக்கி இந்து சமுத்திரத்தில் சுதந்திர கப்பற் பயணத்தை உறுதி செய்வதன் மூலம் சிறந்த வளமான எதிர்காலத்தை உருவாக்க சந்தர்ப்பம் ஏற்படுமெனக் குறிப்பிட்டார்.

அங்கு பேசிய இந்திய வெளி நாட்டமைச்சர் ஸ்ரீமதி சுஷ்மா ஸ்வராஜ், முற்காலத்தில் அனைத்து வெளி யுலக தொடர்புகளும் சமுத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றன. அதனால், இது பற்றி இந்து சமுத்திரம் புராண நூல்களில் ‘ரத்னாகர’ என்றே அழைக்கப்பட்டது. இன்று சமுத்திர நடவடிக்கைகளில் சம்பிரதாய மற்றும் சம்பிரதாயமல்லாத சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதெனக் குறிப்பிட்டார்.

வியட்நாம் பிரதிப் பிரதமரும் வெளிநாட்டமைச்சருமான பாம் பின் மின் (H. E. Pham Binh Minh) இந்திய- பசுபிக், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நிரந்தர சமாதானம், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அனைவரும் நன்மை அடையலாம் எனக் குறிப்பிட்டார். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் பெளத்த மதங்கள் மாத்திரமல்ல பலவித கலாசாரங்களும் இந்து சமுத்திரத்தினூடாக ஒன்றோடொன்று இணைந்துள்ளதாக சிங்கப்பூர் வெளிநாட்டமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மகாநாட்டில் பங்குபற்றிய போது குறிப்பிட்டார்.

நேபாள பிரதமரும் சுகாதார மற்றும் சனத்தொகை அமைச்சர் உபேந்திர யாதவ் பிராந்திய சவால்களை வெற்றி கொள்ள அனைத்து நாடுகளும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்கு இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு மிக முக்கியமானது எனக் கூறினார்.

இந்த மாநாட்டில் திட்டமுகாமைத்துவ, இளைஞர் நடவடிக்கைகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வியட்நாமின் இலங்கைத் தூதுவர் ஹனன்தி திஸாநாயக்க, பிரதமரின் மேலதிகச் செயலாளர் சமன் அத்தாவுதஹெட்டி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.


Add new comment

Or log in with...