‘என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா’ ‘கம்பெரலிய' தேசிய கண்காட்சி | தினகரன்

‘என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா’ ‘கம்பெரலிய' தேசிய கண்காட்சி

மொனராகலையில் இன்று ஆரம்பம்

‘என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா’ மற்றும் ‘கம்பெரலிய' தேசிய கண்காட்சி மொனராகலையில் இன்று ஆரம்பமாகிறது. எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் இக்கண்காட்சியினூடாக, அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் 15 காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவிருப்பதுடன், பெரு நிறுவனத்துறையைச் சேர்ந்த 204 பேர் இவற்றில் கலந்துகொள்ளவுள்ளனர். குறைந்த வட்டியில் கடன் வழங்கும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் பற்றி பொது மக்களுக்கு அறிவூட்டப்படும் என நிதி அமைச்சு தெரிவித்தது.. தொழில்வாண்மை கலாசாரத்தை கிராமப்புறங்களுக்குக்கொண்டு செல்லும் நோக்கில் ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ கடன் திட்டத்தை அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்திருந்தது.

கிராமப்புற உட்கட்டமைப்பு அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்திருந்த ‘கம்பெரலிய’ திட்டம் பற்றியும் இந்தக் காட்சியில் பொது மக்களுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்படும்.

நாட்டில் மிகவும் வறுமைக்கு உட்பட்ட மாவட்டம் என்பதால் மொனராகலையில் இக்கண்காட்சியை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்ததாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சிக்குச் சமாந்திரமாக கிராம மட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் பல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

‘எனடர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ மற்றும் ‘கம்பெரலிய’ திட்டங்களின் இரண்டாவது கண்காட்சி அநுராதபுரத்திலும் மூன்றாவது கண்காட்சி யாழ்ப்பாணத்திலும் நடத்தப்படவுள்ளன.

விவசாய வலயம், அரசாங்க நிறுவனங்கள் வலயம், கல்வி வலயம், பசுமைப் புரட்சி வலயம், நல்லிணக்க வலயம், விளையாட்டு வலயம், வர்த்தக வலயம், ஊடக மற்றும் வெளியீட்டு வலயம் எனப் பல்வேறு வலயங்கள் இந்தக் கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக சகல துறைகளுக்கு வழங்கப்படும் கடன்வசதிகள் தொடர்பிலும் விரிவான விளக்கங்கள் அளிக்கப்படவுள்ளன.


Add new comment

Or log in with...