நம்பிக்கை அளிக்கும் தேசியக் கண்காட்சி | தினகரன்

நம்பிக்கை அளிக்கும் தேசியக் கண்காட்சி

நாட்டில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தோடு நல்லாட்சி அரசாங்கம் உதயமானது. அன்று தொடக்கம் நாட்டை நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதனூடாக நாட்டில் அச்சம், பீதியில்லாத சுதந்திர ஜனநாயக சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த வேளையிலும், எந்தநேரத்திலும், நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வரக் கூடிய சுதந்திர ஜனநாயகச் சூழல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு ஜனநாயகமும் சுதந்திரமும் தழைத்தோங்கியுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் உட்பட உயர் பதவி வகிப்பவர்களைக் கூட விமர்சிக்கக் கூடிய அளவிற்கு ஜனநாயக சுதந்திரம் மேம்பாடு அடைந்துள்ளது. குறிப்பாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பிரதமர் கூட ஆஜராகி சாட்சியமளிக்கும் அளவுக்கு நீதித்துறை சுதந்திரம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த காலங்களைப் போலன்றி நீதித்துறையின் சுயாதீனத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவை இவ்வாறிருக்க, நாட்டின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியிலும் இவ்வரசாங்கம் விஷேட கவனம் செலுத்தியுள்ளது. இதனடிப்படையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டை நிலைபேறான அபிவிருத்தி மிக்க தேசமாகக் கட்டியெழுப்புவதைப் பிரதான இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்ற இவ்வரசாங்கம் மொரகஹகந்த, தெதுறுஓயா, களுகங்கை ஆகிய நீர்த்தேக்க திட்டங்களை ஆரம்பித்துள்ளது. 2400 கிராமியக் குளங்களை புனரமைக்கும் வேலைத் திட்டம் அண்மையில் குருநாகலில் தொடக்கி வைக்கப்பட்டது. அத்தோடு 'நீர்வள தோழர்கள்' திட்டத்தின் கீழ் நீர்ப்பாசனத்துறையை மேம்படுத்தவும் பாரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான வெளிநாட்டுக் கொள்கை காரணமாக பல நாடுகள் இலங்கையுடனான நற்புறவில் இருந்து தூரமாகின. குறிப்பாக ஐரோப்பிய யூனியன் ஜீ.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை இடைநிறுத்தியது. இலங்கையில் இருந்து கடல் உணவு இறக்குமதி செய்யப்படுவதையும் ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தின. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கொண்டுவரப்பட்டிருந்த பிரேரணை இலங்கைக்கு பெரும் சவாலாக மாறியிருந்தது.

இவ்வாறு சர்வதேச மட்டத்தில் பல்பேறு நெருக்கடிகளுக்கும் சவால்களுக்கும் கடந்த ஆட்சிக் காலத்தில் முகங்கொடுத்த இந்நாட்டை அவற்றிலிருந்து இவ்வரசாங்கமே மீட்டெடுத்தது. இவ்வரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களின் பயனாக இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கடல் உணவுக்காக விதிக்கப்பட்டு இருந்த தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது. ஜீ.எஸ்.பி. பிளஸ் நிவாரணமும் மீண்டும் கிடைக்கப் பெற்றுள்ளது. ஐ.நாவின் இலங்கை மீதான அழுத்தங்கள் குறைந்துள்ளன.

இவ்வாறு நல்லாட்சி அரசாங்கம் பதவி வந்தது முதல் இதுகாலவரையான காலப் பகுதிக்குள் பாரிய சேவைகளை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இவ்வரசாங்கம் ஆற்றியுள்ளது. இருந்தும் அவை தொடர்பிலான தெளிவு, விளக்கம் , புரிதல் மக்களை உரிய முறையில் சென்றடையாத குறைபாடும் இடைவெளியும் விரிவாகக் காணப்படுகின்றன.

அதேநேரம் அரசாங்கத்தின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு இன்றும் சில வருடங்களே உள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் நாட்டை ஒரு குறிப்பிட்ட மேம்பாட்டை நோக்கி இக்காலப்பகுதிக்குள் நகர்த்திச் செல்வது அவசியம். இதன் நிமித்தம் 2017 மற்றும் 2018 வரவு செலவு திட்டத்தில் 'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா ' என்ற திட்டம் அறிமுகப்படுத்துள்ளது. இந்த இரண்டு விடயங்களை பிரதான இலக்காக கொண்டு 'கம்பெரலிய மற்றும் என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா' என்ற தேசிய கண்காட்சி இன்று 29ம் திகதி மொனராகலையில் தொடக்கி வைக்கப்படுகின்றது. மொனராகலை மாவட்ட செயலகத்துக்கு அருகிலுள்ள 20 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றது.

'நல்லிணக்கம் மற்றும் ஜனாநாயகத்தின் மீது கட்டியெழுப்பப்படும் நிலைபேறான அபிவிருத்தியை நாட்டுக்கு காட்சிப்படுத்தியும், இலங்கையை தொழில்முனைவின் சொர்க்கபுரியாக்குவதற்குமான புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதே இப்பாரிய கண்காட்சியின் அடிப்படை நோக்கம்' என நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றது.

'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' கடன் திட்டம் குறித்தும் இக்கண்காட்சியில் பொதுமக்களுக்கு அறிவூட்டப்படவுள்ளது. குறிப்பாக தொழில்வாண்மை கலாசாரத்தை கிராமப்புறத்திற்கு கொண்டு செல்வதற்காகத்தான் இக்கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புற உட்கட்டமைப்பு அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கிலான கம்பெரலிய திட்டமும் அரசாங்கத்தினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டங்கள் குறித்து மக்களை தெளிவுபடுத்துவதற்கு இக்கண்காட்சியூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

12 பிரதான வலயங்களாக அமைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சி 515 காட்சிக்கூடங்களை உள்ளடக்கியுள்ளது. இக்கண்காட்சியின் ஊடாக அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் மற்றும் என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா கடன் திட்டம் குறித்து முழுமையான தெளிவை வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு இக்கண்காட்சி இரண்டாம் கட்டமாக அநுராதபுரத்திலும், மூன்றாம் கட்டமாக யாழ்ப்பாணத்திலும் நடத்தப்படவுள்ளது.

இவற்றின் விளைவாக கம்பெரலிய மற்றும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் என்பன குறித்து பாரிய தெளிவையும் விழிப்புணர்வையும் மக்களால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அது தொழில்வாண்மை காலாசாரத்தைக் கிராம மட்டத்திற்கு கொண்டு செல்வதோடு, கிராம மட்ட தொழில் முயற்சிகளிலும் புத்தெழுச்சியையும். ஏற்படுத்தும். அத்தோடு கிராமப்புற உட்கட்டமைப்பு அபிவிருத்தியும் விரைவுபடும். இவை துரிதகதியில் நாட்டில் ஒரு பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திடும்.


Add new comment

Or log in with...