கடவுளின் தேசத்துக்கு வந்துள்ள புதிய துன்பம் | தினகரன்

கடவுளின் தேசத்துக்கு வந்துள்ள புதிய துன்பம்

'கடவுளின் தேசம்' என வர்ணிக்கப்படும் கேரளா மாநிலத்தை, 1924 இற்குப் பிறகு புரட்டிப் போட்டுள்ள இயற்கைப் பேரழிவு 300இற்கும் மேற்பட்ட மக்களைக் காவு வாங்கியதுடன், 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களை முகாம்களில் தள்ளி முடக்கிப் போட்டுள்ளது.

தண்ணீருக்குள் தத்தளிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலங்கள் ஒக்டோபர் மாதத்திற்குள் இயல்பு நிலைக்குத் திரும்பாவிட்டால், 4 முதல் 5 சதவீதம் வரை மாநிலத்தின் வளர்ச்சி வீதம் சரிவடையும் என்ற அச்சம் நிலவுகிறது.

கடந்த 8 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்கள் விடாது பெய்த பலத்த மழையால் வீடுகளில் மட்டுமல்லாமல் விமான நிலையத்திலும் வெள்ளம் புகுந்தது. இதனால் கொச்சின் விமான நிலையம் ஓகஸ்ட் 16 ஆம் திகதி முதல் மூடப்பட்டது.

29 ஆம் திகதி சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 52 சதவீத சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கொச்சின் மற்றும் எர்ணாகுளம் 2 வாரங்களாகத் தண்ணீருக்குள் தத்தளித்தது.

முதல் காலாண்டில் 17% வளர்ச்சியைப் பெற்ற கேரளா, நிபா வைரஸ் பீதி காரணமாக ஏப்ரல் தொடக்கம் மே மாதங்களில் 14 சதவீதம் சரிவு ஏற்பட்டதாக அம்மாநில சுற்றுலா இயக்குனர் பி.பாலா கிரண் தெரிவித்தார். ஒக்டோபர் மாதத்தில் இயல்பு நிலை திரும்பினால் வளர்ச்சி வீதத்தை எதிர்பார்க்கலாம் என்ற அவர், அப்படியொரு நிலைமை ஏற்படாவிட்டால் 4 முதல் 5 வீதம் வரை வீழ்ச்சி ஏற்படும் என்றும் கூறினார்.

2017 ஆம் ஆண்டுச் சுற்றுலாத்துறையில் 10.94 சதவீத வளர்ச்சியை எட்டியது கேரளா. 1.91 மில்லியன் வெளிநாட்டு பயணிகளும், 14.6 மில்லியன் உள்நாட்டுச் சுற்றுலா பயணிகளும் கேரளாவுக்குப் படையெத்தனர். இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு பூக்கும் நீலக்குறிஞ்சி மலர் அடுத்த மாதம் பூக்க இருக்கிறது. குறிஞ்சி மலர் அதிகம் பூக்கும் மூணாறு முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளப் பாதிப்புக் காரணமாகக் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற நேரு கோப்பைக்கான படகுப் போட்டியை கேரள அரசு ரத்து செய்துள்ளது.இது வெளிநாட்டவரையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் விளையாட்டாகும்.

வேட்பநாடு ஏரியில் நடைபெற்ற ஆலப்புழா பாம்புப் படகு போட்டி முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வருகையால் புகழ் பெற்றது. ஓகஸ்டு மாதம் மத்தியில் நடைபெறும் இந்தப் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Add new comment

Or log in with...