நீதியான தேர்தல் முறையை அரசு உறுதிப்படுத்தியுள்ளது | தினகரன்

நீதியான தேர்தல் முறையை அரசு உறுதிப்படுத்தியுள்ளது

இந்நாட்டில் 2015 ஜனவரி 08ஆம் திகதிக்கு முன்னர் இருந்து வந்த தேர்தல் முறைமையில் காணப்பட்ட ஊழல் நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக நாட்டில் சுதந்திரமும் நீதியானதுமான தேர்தலுக்கு பலமானதொரு அடித்தளத்தை இடுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் நேற்று (27) இடம்பெற்ற ஆசிய தேர்தல் பங்குதாரர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் அனைத்து தேர்தல்களையும் ஊழலை நீக்கி அமைதி மற்றும் சுயாதீனமான தேர்தலாக நடத்தி நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2015 ஜனவரி 08ஆம் திகதிக்கு முன்னர் நாட்டின் தேர்தல் முறைமையில் காணப்பட்ட ஊழல் நிறைந்த நிலைமைகளை நினைவுபடுத்திய ஜனாதிபதி , 2015 ஜனாதிபதி தேர்தலின்போது அரச ஊடகங்கள் தேர்தல் சட்டங்களை மீறி மிகவும் பண்பாடற்ற முறையில் நடந்துகொண்டதைப் பற்றியும் அரசாங்க திறைசேரியை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்தி பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டமை பற்றியும் குறிப்பிட்டார்.

இன்று இலங்கை பலமான ஜனநாயக அடிப்படையை கொண்ட நாடாகவும் நீதித்துறை பக்கசார்பற்றதாகவும் நீதி பலப்படுத்தப்பட்ட நாடாகவும் உள்ளது.ஆசிய நாடுகளின் புதிய அறிக்கையின் படி இலங்கை நீதித்துறையில் பக்கசார்பின்மை தொடர்பில் உயர்ந்த நிலையில் உள்ளது என தெரிவித்த ஜனாதிபதி,

கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதுடன், மக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்துவதற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஊழல் இல்லாத, பக்கசார்பற்ற, சுதந்திரமும் நீதியுமான தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு முழுமையான அதிகாரங்களை வழங்கி அதனை பலப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிராந்தியத்தில் தேர்தல்களை நடாத்துகின்றபோது ஜனநாயகத்தின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்காக ஆசியாவிலும் அதற்கு வெளியிலும் செயற்பட்டு வரும் பங்காளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையில் பொது உடன்பாட்டுடன் கூடிய இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன், ஆசிய தேர்தல் சம்மேளனம் நடைபெறுகின்றது.

தமது வலயத்தில் தேர்தல் மற்றும் ஜனநாயகம் குறித்து விரிவானதொரு கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு இப்பேரவை சிறந்ததோர் தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், தேர்தல் தொடர்பில் பிராந்தியத்தின் விரிவான ஒன்றியமாக இதனைக் கருத முடியும். இம்முறை இலங்கையில் இடம்பெறுவது ஆசிய தேர்தல் சம்மேளனத்தின் நான்காவது மாநாடாகும்.

தெற்காசியாவில் இத்தகையதொரு மாநாடு நடைபெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இலங்கை தேர்தல் ஆணைக்குழு மற்றும் சுதந்திர தேர்தலுக்கான ஆசிய வலயமைப்பு ஆகியன இம்மாநாட்டுக்கான உபசரிப்பை வழங்கியுள்ளன. இம்மாநாட்டில் 45 நாடுகளின் பிரதிநிதிகளும் 15க்கும் மேற்பட்ட ஆசிய வலய தேர்தல் ஆணைக்குழுக்களும் நூற்றுக்கும் மேற்பட்ட உலகெங்கிலும் உள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவராலயங்கள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

“டொனமூர் ஆணைக்குழு முறைமையிலிருந்து தேர்தல்கள் ஆணைக்குழு வரை” என்ற நூல் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய, பெபரல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகன ஹெட்டியாரச்சி, சுதந்திர ஊடக அமைப்பின் ஆசிய வலயமைப்பின் பிரதிநிதி டெமாசோ மெக்வல்ட்ஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...