Friday, April 19, 2024
Home » இழுபறிகளுடன் இஸ்ரேல் – ஹமாஸ் நான்கு நாள் போர் நிறுத்தம் நீடிப்பு

இழுபறிகளுடன் இஸ்ரேல் – ஹமாஸ் நான்கு நாள் போர் நிறுத்தம் நீடிப்பு

- மேற்குக் கரையில் ஆறு பலஸ்தீனர்கள் பலி

by Rizwan Segu Mohideen
November 27, 2023 8:50 am 0 comment

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையில் தாமதத்திற்குப் பின் இரண்டாம் கட்டமாக 13 இஸ்ரேலியர்கள் உட்பட 17 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததோடு பதிலாக இஸ்ரேல் 39 பலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

போர் நிறுத்தத்தை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றம்சாட்டிய நிலையில் கைதிகள் பரிமாற்றத்தில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பிந்திய இரவிலேயே பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

கட்டாரின் மத்தியஸ்தத்தில் நான்கு நாள் போர் நிறுத்தம் எட்டப்பட்டதை அடுத்து முதலாவது கைதிகள் பரிமாற்றம் கடந்த வெள்ளிக்கிழமை எந்த சிக்கலும் இன்றி இடம்பெற்றது.

எனினும் வடக்கு காசாவுக்கு உதவிகள் செல்வதில் பிரச்சினை இருப்பதாகவும் பணயக்கைதிகளுக்கு பகரமாக விடுவிக்கப்படும் பலஸ்தீன கைதிகளை தேர்வு செய்யும் முறையில் சிக்கல் இருப்பதாகவும் ஹமாஸ் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படை குற்றம்சாட்டியது. எனினும் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்தது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் காசாவுக்கு மொத்தம் 340 உதவி ட்ரக் வண்டிகள் நுழைந்திருப்பதாகவும் ஆனால் வடக்கு காசாவை 65 வண்டிகள் மாத்திரமே அடைந்திருப்பதாகவும் ஹமாஸ் பேச்சாளர் ஒசாமா ஹம்தான் தெரிவித்தார். இது இஸ்ரேல் இணங்கியதில் பாதி எண்ணிக்கையானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் வடக்கு போர் வலயத்தில் இருப்பதாகவும் உதவி விநியோகத்திற்கு ஐ.நாவே பொறுப்பாக உள்ளது என்றும் இஸ்ரேல் பதிலளித்துள்ளது.

தொடர்ந்து இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டதாக கட்டார் வெளியிட்ட அறிவிப்பை ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

ஒன்றரை மாதங்கள் நீடித்த போருக்குப் பின்னரான முதல் போர் நிறுத்த உடன்படிக்கையின்படி நான்கு நாட்களில் 50 பெண்கள் மற்றும் சிறுவர்களாகிய இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுக்கவும் பதிலாக 150 பலஸ்தீன கைதிகளை விடுவிக்கவும் இணக்கம் எட்டப்பட்டது.

தினசரி 10 பணயக்கைதிகள் விடுக்கப்பட்டால் இந்தப் போர் நிறுத்தம் நீடிக்கப்பட முடியும் என்று இஸ்ரேல் கூறியபோதும், இந்த உடன்படிக்கை தற்காலிகமானது என்றும் மீண்டும் போர் ஆரம்பிக்கப்படும் என்றும் அது உறுதியாகக் கூறி வருகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு காசாவில் இருந்து அனுப்பப்பட்ட பணயக்கைதிகள் ரபா எல்லையைத் தாண்டி எகிப்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கு சர்வதேச செம்பிறை சங்கத்திடம் கையளிக்கப்பட்டனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட 13 இஸ்ரேலியர்களில் ஆறு பெண்கள் மற்றும் ஏழு சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் உள்ளனர்.

‘விடுவிக்கப்பட்ட பயணக்கைதிகள் இஸ்ரேலில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தொடர்ந்து குடும்பத்தினருடன் இணைக்கப்படுவார்கள்’ என்று இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுபுறம் இஸ்ரேல் விடுவித்த 39 பலஸ்தீனர்களில் ஆறு பெண்கள் மற்றும் 33 சிறுவர்கள் அடங்குகின்றனர். இவர்களில் சிலர் ரமல்லாவில் உள்ள அல் பிரா மாநகர சதுக்கத்திற்கு வருகை தந்தபோது அவர்களை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணகானவர்கள் வரவேற்றனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் ஒருவரான 23 வயது நுர்ஹான் அவாத் என்ற பெண் ஜெரூசலத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவராவார். அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையில் எட்டு ஆண்டுகள் சிறை அனுபவித்திருந்தார்.

அதேபோன்று இஸ்ரா ஜாபிஸ் என்ற பெண்ணும் 2015 தொடக்கம் சிறை அனுபவித்தவராவார். அவரது கார் வண்டி மேற்குக் கரை சோதனைச்சாவடி ஒன்றில் இருந்து 1.5 கிலோமீற்றர் தொலைவில் நெடுஞ்சாலை ஒன்றில் உடைந்தது. அப்போது அவர் கார் குண்டு தாக்குதலுக்கு முயன்றதாக இஸ்ரேல் குற்றம்சாட்டினாலும் அந்தக் கூற்று முரண்பாட்டுக்கு உரியதாக இருந்தது.

தவிர தாய்லாந்தைச் சேர்ந்த நான்கு பணயக்கைதிகள் ஹமாஸ் போராளிகளால் தனியாக விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டு 240 பேர் வரை பணயக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டதை அடுத்து இஸ்ரேல், காசா மீது இடைவிடாது நடத்திய தாக்குதல்களில் 14,800க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இதில் 40 வீதத்திற்கும் அதிகமானவர்கள் சிறுவர்களாவர்.

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையிலும் வடக்கு காசாவுக்குச் செல்ல முயன்ற பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் குறைந்தது இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 11 பேர் வரை காயமடைந்தனர்.

போர் நிறுத்தத்தை அடுத்து காசாவில் பெரும் எண்ணிக்கையான மக்கள் தமது வீடுகளுக்கு திரும்ப முயன்றபோதும் வடக்கு காசாவுக்கு மக்கள் திரும்புவதை இஸ்ரேல் தடுத்து வருகிறது.

இதேவேளை இஸ்ரேலிய துருப்புகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஒரு சிறுவன் உட்பட ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி காசாவில் போர் வெடித்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு, ஞாயிறு காலையில் ஜெனின் நகரில் ஐந்து பலஸ்தீனர்களை சுட்டுக் கொன்ற இஸ்ரேல், நப்லுஸ் நகருக்கு அருகில் இருக்கும் யத்மா கிராமத்தில் மற்றொரு பலஸ்தீனரை கொன்றதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெனினில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் மேலும் ஆறு பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.

பல முனைகளாலும் ஜெனின் நகருக்குள் நுழைந்த இஸ்ரேலிய இராணுவம் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி அரச மருத்துவமனைகள் மற்றும் செம்பிறை சங்க தலைமையகத்தை சுற்றிவளைத்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT