பழைய தேர்தல் முறைக்கு செல்ல பிரதமர் குழுவுக்கு அதிகாரம் எதுவும் இல்லை | தினகரன்

பழைய தேர்தல் முறைக்கு செல்ல பிரதமர் குழுவுக்கு அதிகாரம் எதுவும் இல்லை

திருத்தங்களுடன் ஜனாதிபதிக்கு அறிக்ைக மாத்திரமே சமர்ப்பிக்கலாம்

சபாநாயகரினால் நியமிக்கப்பட இருக்கும் பிரதமர் தலைமையிலான ஐவரடங்கிய குழுவுக்கு எல்லை நிர்ணய அறிக்கையிலுள்ள குறைபாடுகளை திருத்தி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கவே முடியும். பழைய விகிதாசார முறைக்கு செல்வதற்கான அதிகாரம் இந்த குழுவுக்கு கிடையாது என மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

மீண்டும் பழைய தேர்தல் முறையில் ​மாகாண சபை தேர்தலை நடத்துவதானால் மாகாண சபை தேர்தல் சட்டத்தை திருத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தனக்கு சட்டத்தினூடாக வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தின் படியே குறைபாடுகள் இருப்பது தெரிந்த நிலையிலும் எல்லை நிர்ணய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை பெரும்பான்மை வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று கருத்து தெரிவிக்கையிலே அமைச்சர் இதனை தெரிவித்தார். புதிய தேர்தல் முறைக்கு எதிராக அன்றி சிறுபான்மையினருக்கு பாதகமான வகையில் எல்லை நிர்ணய அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதற்கு எதிராகவே தான் வாக்களித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.பெண்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து கட்சிகளிடையே மோதலை ஏற்படுத்தும் விருப்பு வாக்கு முறையை கொண்டுவர எந்த கட்சியும் ஆதரவு வழங்கக் கூடாது என்று குறிப்பிட்ட அவர் புதிய தேர்தல் முறையை உருவாக்கவே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கியதாகவும் அமைச்சர் கூறினார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டது தொடர்பாக என் மீது பழி போடுகின்றனர்.நான் பதவி விலக வேண்டும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

ஆனால் 2017 ஆம்ஆண்டின்17 ஆம் இலக்க மாகாண சபை தேர்தல் சட்டத்தினூடாக எனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. எல்லை நிர்ணயம் தொடர்பில் மேன்முறையீட்டு குழு நியமிக்கும் அதிகாரம் பறிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணயத்திற்கு ஜனாதிபதியினால் ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.இதன் அறிக்கையை சமர்ப்பிக்க முன்னர் கட்சிகளின் கருத்துக்களையும் பெறுமாறு நான் குழுவிடம் கோரியிருந்தேன். அதனை குழு நிராகரித்தது. குழுவின் செயற்பாடுகளில் தலையிட அமைச்சருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இந்த நிலையில் எல்லை நிர்ணய குழு கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி என்னிடம் கையளித்த அறிக்கையை நான் மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன். அத்துடன் சட்டத்தினூடாக எனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் நிறைவடைந்து விட்டது.

இதனை ஒரு மாத காலத்தினுள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரத்தை பெற வேண்டும். ஆனால் கடந்த 5 மாத காலமாக இந்த அறிக்கையை கட்சி தலைவர்கள் ஆராய்ந்தாலும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் தான் அது தொடர்பான வாக்கெடுப்பு கடந்த வாரம் இடம்பெற்றது.

மாகாண சபை சட்டத்தின் பிரகாரம் அடுத்து பிரதமர் தலைமையில் ஐவரடங்கிய குழுவொன்றை சபாநாயகர் நியமிக்க வேண்டும். இந்த குழு 2 மாத காலத்தினுள் இதிலுள்ள குறைபாடுகளை திருத்தி ஜனாதிபதியிடம் கையளிக்க வேண்டும். அதனை ஜனாதிபதி வர்த்தமானியில் வெளியிட வேண்டும். அடுத்து தேர்தல் செயற்பாடுகள் இடம்பெறும்.

ஆனால் பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஐ.தே.க கூறி வருகிறது. சிறுபான்மை கட்சிகளும் இதனையே கோருகின்றன.

ஆனால் 25 வீத பெண் பிரதிநித்துவத்தை அகற்றும் இந்த முயற்சிக்கு எதிராக பெண்கள் அணிதிரள வேண்டும். பெண் பிரதிநிதித்துவம் குறைவது மட்டுமன்றி சண்டைகளை தோற்றுவிக்கும் விருப்பு வாக்குமுறை மீண்டும் வரும். ஊருக்கு ஒரு பிரதிநிதி தெரிவாக மாட்டார்.

பழைய முறையினூடாக அரசியல் கட்சிகளுக்கு கிடைக்கும் அதே அளவு உறுப்பினர்கள் புதிய முறையினூடாகவும் கிடைக்கும். இனத்தை விற்று அரசியல் செய்யக் கூடாது.

தற்பொழுது பிரதமர் தலைமையில் நியமிக்கப்படும் குழுவிடமே எல்லை நிர்ணயம் தொடர்பான பொறுப்பு இருக்கிறது.இதில் நான் அங்கத்தவர் கிடையாது. இந்த குழுவுக்கு பழைய தேர்தல் முறைக்குச் செல்ல எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றார்.

தேர்தலை ஒத்திவைக்கத்தான் அறிக்கையை தோற்கடித்ததாக குற்றஞ்சாட்டப்படுவது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,தேர்தலை ஒத்திவைக்கப் போவதில்லை என ஜனாதிபதி உறுதியாக கூறியுள்ளார்.தேர்தலை பின்போடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.

பழைய முறையில் தேர்தல் நடத்துவதாயின் சட்டத்தை திருத்த வேண்டும். ஆனால் இது மக்கள் ஆணையை மீறுவதாகும். புதிய முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில்சு.கவும் ஜே.வி.பியும் உறுதியாக இருக்கின்றன என்றார்.

எல்லை நிர்ணய அறிக்கையில் எந்த குறைபாடும் கிடையாது என அதன் தலைவர் கனகரத்னம் கூறியிருப்பது தொடர்பில் பதிலளித்த அவர், தனது அறிக்கை சரியென்று அவர் கூறலாம். அதில் குறைபாடு இருக்கிறது என எல்லா பாராளுமன்ற எம்.பிகளும் கூறுகின்றனர் என்றார்.

மேன்முறையீட்டு குழுவினூடாக பழைய முறையை கொண்டுவர முடியாதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த் அவர், மேன்முறையீட்டு குழுவினூடாக புதிய தேர்தல் முறையை நிராகரிக்க பிரதமரினால் முடியாது. அது சட்டத்தை மீறுவதாக அமையும்.

எல்லை நிர்ணய அறிக்கையினூடாக பல்தொகுதிகளை உருவாக்க முடியும். ஆனால் ஒரு பல்தொகுதி கூட நியமிக்கப்படாதது சிறுபான்மைக்கு அநீதியாகும். அதனாலேயே அறிக்கையை எதிர்த்தேன்.

- ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...