தொடர் பேச்சுவார்த்தை மூலம் விசேட திட்டங்கள் வகுப்பு | தினகரன்

தொடர் பேச்சுவார்த்தை மூலம் விசேட திட்டங்கள் வகுப்பு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் விசேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டின் திட்டமிடல் அமைச்சர் ஏ.எச்.எம் முஸ்தஃபா கமலிடம் தெரிவித்தார்.

இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வியட்நாமின் ஹெனோய் நகருக்குச் சென்றிருக்கும் பிரதமர் விக்கிரமசிங்க, அம்மாநாட்டின் முதல் நாள் அமர்வான நேற்று இரு நாடுகளுக்கிடையே நடத்தப்பட்ட சந்திப்பில் கலந்துகொண்டபோதே பங்களாதேஷ் திட்டமிடல் அமைச்சரிடம் இவ்வாறு கூறினார்.

இச்சந்திப்பின் ஆரம்பத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனாவின் வாழ்த்துச் செய்தியை பிரதமர் விக்கிரமசிங்கவிடம் கையளித்த அமைச்சர் முஸ்தபா கமல், பங்களாதேஷுக்கு வருகை தருமாறு பிரதமர் ஷெயிக் ஹசீனா விடுத்த அழைப்பையும் பிரதமரிடம் கையளித்தார்.

அத்துடன் பங்களாதேஷின் தேயிலை உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் மருந்துகள் விற்பனை ஆகியவற்றுக்கு இலங்கையிடமிருந்து உதவி மற்றும் விசேட ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது இந்து சமுத்திரத்தின் எதிர்காலம் தொடர்பிலும் இரு நாடுகளும் கலந்துரையாடின.இதற்கு மேலதிகமாக இரு நாடுகளதும் உறவுகளை பலப்படுத்துவதற்கு சிறந்த திட்டமிடல் அவசியமென்றும் வலியுறுத்தப்பட்டது.

இச்சந்திப்பின்போது பிரதமருடன் அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதமர் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வியட்நாமின் இலங்கைக்கான தூதுவர் ஹசந்தி திசாநாயக்க , பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அத்தாவுதஹெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Add new comment

Or log in with...