இரண்டு மாதத்திற்குள் வர்த்தமானி வெளியிட்டால் ஜனவரியில் தேர்தல் | தினகரன்

இரண்டு மாதத்திற்குள் வர்த்தமானி வெளியிட்டால் ஜனவரியில் தேர்தல்

 
சபாநாயகர் கையில் பந்து

மீளாய்வு செய்யப்படும் எல்லை மீள்நிர்ணய அறிக்கை இரண்டு மாதத்துக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படுமாயின் திட்டமிட்டபடி ஜனவரி முதல் வாரத்தில் மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்த முடியும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

"பாராளுமன்ற சபாநாயகரிடத்திலேயே தற்பொழுது பந்து உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைகளுக்கான எல்லை மீள்நிர்ணய அறி க்கை 139 வாக்குகளால் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இதனால் மாகாண சபைத் தேர்தல்கள் மேலும் காலதாமதப் படுத்தப்படலாம் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த கட்டமாக இடம்பெறக் கூடிய செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த அவர், எல்லை மீள்நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்கு பிரதமர் தலைமையில் ஐவரைக் கொண்ட குழுவை சபாநாயகர் நியமிக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் குழுவுக்கு எல்லை மீள்நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்கான அதிகாரமே உள்ளது. இது தவிர வேறெந்த திருத்தங்களையும் அவர்களால் மேற்கொள்ள முடியாது என்றார்.

மீளாய்வுக் குழுவின் அறிக்கை இறுதிப்படுத்தப்பட்டு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதும், அவர் அதனை வர்த்தமானியில் வெளியிடுவார்.

"மீளாய்வு செய்யப்பட்ட எல்லை மீள்நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறவேண்டிய தேவை இல்லை. இது தற்பொழுது முடிந்துவிட்டது. ஜனாதிபதி அந்த அறிtக்கையை வர்த்தமானியில் வெ ளியிட்டால் தேர்தல்களை ஜனவரியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ள முடியும்" என்றார்.

அதேநேரம், மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். உரிய காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். பிரதமர் தலைமையில் மீளாய்வுக் குழுவை விரைவில் அமைப்பேன் என்றும் பிரதமர் தவிர அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் ஏனையவர்கள் அரசியல்வாதிகளாக இருக்காமாட்டார்கள் என்பதுடன், துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவினருடன் தான் கலந்துரையாடியிருந்ததாகவும், மீளாய்வுக் குழுவின் அறிக்கை ஒக்டோபர் நடுப்பகுதியில் தமக்குக் கிடைக்குமாயின் திட்டமிட்டபடி அடுத்தவருடம் ஜனவரி மாதம் முதற்பகுதியில் தேர்தலை நடத்தமுடியும் என அவர்கள் உறுதியளித்திருப்பதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

இதுஇவ்விதமிருக்க, மாகாண சபைத் தேர்தல்களை மீண்டும் பழைய முறையில் நடத்துவதற்கு இடமளிக்கப்போவதில்லையென அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டமையானது நியாயமான அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்காகக் கொண்டது. மோசடி நிறைந்த விகிதாசார முறைக்கு மீண்டும் செல்ல இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய முறையில் தேர்தல் நடத்துவது என்ற முடிவில் உறுதியாக இருந்தால் எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வுக்கு உட்படுத்தலாம். இல்லாவிட்டால் அது வீணாக காலத்தை இழுத்தடிப்பதாக அமைந்துவிடும் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...