Friday, March 29, 2024
Home » இலங்கை – சவூதி அரேபிய நட்புறவை மேலும் வலுப்படுத்தும் பொருளாதார அமைச்சரின் வருகை

இலங்கை – சவூதி அரேபிய நட்புறவை மேலும் வலுப்படுத்தும் பொருளாதார அமைச்சரின் வருகை

by Rizwan Segu Mohideen
November 27, 2023 2:40 pm 0 comment

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் மிகவும் நெருக்கமான நட்புறவு நீண்ட காலமாக நிலவி வருகின்றது. இப்பின்புலத்தில் இந்நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்காக பல வகையான உதவி ஒத்துழைப்புக்களை நல்கக்கூடியதாக உள்ளது சவூதி.

மத்திய கிழக்கின் பலம் மிக்க நாடாகவும் பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சி கண்ட நாடாகவும் முன்னேற்றமடைந்துவரும் சவூதி அரேபியாவின் பொருளாதார மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைஸல் பின் பாழில் அல் இப்ராஹீம் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

‘சவூதியின் மன்னரான இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் கீழ் இலங்கைக்கு விஜயம் செய்யும் இவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நட்புறவை மேலும் மேம்படுத்தும் நோக்கில் சந்திப்புக்களையும் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்வார்’ என்று கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சவூதி அரேபியாவானது மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோரின் பதவிக்காலத்தில் பொருளாதார ரீதியில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக இளவரசரின் விஷன் 2030 திட்டம் சவூதியின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு நல்கி வருகிறது.

உலகின் இருபது பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்கும் சவூதியின் பொருளாதாரம், அரபுலகிலும் மத்திய கிழக்கிலும் மிகப் பாரியதாகத் திகழுகிறது. ஒபெக் நாடுகள் அமைப்பின் நிரந்தர உறுப்பினராக விளங்கும் சவூதி அவ்வமைப்பின் தலைமையையும் வகிக்கிறது. அத்தோடு ஜி 20 நாடுகள் அமைப்பிலும் நிரந்தர உறுப்பு நாடாக உள்ளது.

உலகின் இரண்டாவது மிகப் பெறுமதி மிக்க இயற்கை கனிய வளங்களைக் கொண்ட நாடான சவூதி, எண்ணெய் ஏற்றுமதியின் முன்னணி நாடாகும். வருடமொன்றுக்கு 35 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எண்ணெணையை ஏற்றுமதி செய்கின்றது. ஐந்தாவது பெரிய நிரூபிக்கப்பட்ட இயற்கை எரிவாயு இருப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஆற்றல் மிக்க தேசமாக சவூதி கருதப்படுகிறது. சவூதி பொருளாதாரத்தின் பிரதான மூலாதாரம் எண்ணெய் ஏற்றுமதியாகும். ​என்றாலும் சவூதியின் பொருளாதாரம் எண்ணெய் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் பொருளாதாரத்தைப் பல்வகைமைப்படுத்துவதையும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதையும் நோக்காகக் கொண்டு இளவரசர் முஹம்மத் பின் சல்மான் விஷன் 2030 திட்டத்தை 2016 இல் அறிமுகப்படுத்தினார். இதன் ஊடாக எண்ணெய் அல்லாத வருமான முறைமைகள் ஊடாக 2019 முதல் 2020 வரை சவூதியின் பொருளாதாரம் 2.1 வீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

நிர்வாக மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய போட்டித்திறன் அறிக்கையின் படி, ஜி20 நாடுகளின் குழுவில் 7வது இடத்தையும், உலகளாவிய போட்டித்திறன் தரநிலையில் 26வது இடத்தையும் சவூதி பெற்றுள்ளது.

உலகளவில் போட்டித்தன்மை மிக்க பொருளாதாரத்தைக் கொண்ட 63 நாடுகளில் சவூதி அரேபியா 24-வது இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார தாக்கங்களையும் சவூதி அரேபியா சீரமைத்து முன்னேறியுள்ளது. இதன் ஊடாக மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகள் மட்டத்தில் முன்னேற்றமடைந்த நாடாக விளங்குகிறது சவூதி அரேபியா. சவூதியின் வருமானம் பெற்றோலியத்துறை மூலம் சுமார் 45 வீதமாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மூலம் 45 வீதமாகவும் அமைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 வீதம் தனியார் துறை மூலம் கிடைக்கப் பெறுவது குறிப்பிடத்தக்கது. இதன்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.155 ட்ரில்லியன் ரியால்களை எட்டியுள்ளது, இது முதல் முறையாக ஒரு ட்ரில்லியன் ரியால்கள் என்ற உச்ச வரம்பைத் தாண்டி உலகளவில் ட்ரில்லியன் பொருளாதாரங்களின் அமைப்பில் சவூதியை இணைத்துள்ளது.

நாட்டின் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கவென தனியார் துறை அரசினால் ஊக்குவிக்கப்படுகிறது. இதன் கீழ் இவ்வாண்டில் 1.18 மில்லியனுக்கும் மேற்பட்ட புதிய தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 212,000 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களில் 71 வீதத்தினர் பெண்களாவர். விஷன் 2030 திட்டத்தின் ஊடாக இவ்வாண்டு இறுதிக்குள் சவூதி மக்களிடையே வேலையின்மை விகிதத்தைக் குறைக்க முடிந்துள்ளது. சவூதியின் பொருளாதாரம் மற்றும் தனியார் துறையின் பங்களிப்பின் தொடர்ச்சியான வளர்ச்சியின் பயனாக, 152.8 ஆயிரம் சவூதி ஆண்களும் பெண்களும் தனியார் துறையில் பணிபுரியும் வாயப்பைப் பெற்றுள்ளனர், அவர்களில் 71% பெண்கள், 29% ஆண்களாவர். இவை இவ்வாறிருக்க, மின்சார உற்பத்திகள், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு சவூதி அனுமதி வழங்க ஆரம்பித்துள்ளது. 2005 இல் சவூதி அரேபியா உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் பயனாக வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுப்பதற்கும் பொருளாதாரத்தை பன்முகப்படுத்துவதற்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. 1974இல் 32 பில்லியன் ரியால்களாகக் காணப்பட்ட சவூதியின் கைத்தொழில் உற்பத்தி, 2018ஆம் ஆண்டின் இறுதியில் 319.5 பில்லியன் ரியால்கள் வரை வளர்ச்சியடைந்திருந்தது.

இயற்கை கனிய வளங்களில் செல்வச்செழிப்பு மிக்க நாடாகவும் விளங்குகிறது சவூதி. 2 மில்லியன் சதுர கிலோமீற்றர்களுக்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்ட சவூதி, மத்திய கிழக்கின் மிகப்பெரிய நாடாக மாத்திரமல்லாமல் உலகின் 14வது பெரிய தேசமாகவும் உள்ளது. இங்கு பல்வேறு கனிய வளங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு, உற்பத்தி மற்றும் கைத்தொழில்துறை வளர்ச்சிக்கான முக்கிய மூலப்பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. அந்த வகையில் நான்காவது பெரிய இயற்கை எரிவாயு படிமத்தை தன்னகத்தே கொண்ட நாடாக திகழுகிறது சவூதி. இந்த எரிவாயுவின் மூன்றில் ஒரு பகுதி சவூதியின் கிழக்கு பிராந்தியத்தில் காணப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான சவூதியின் இலக்குகளை முன்கூட்டியே அடையும் திட்டத்தின் கீழ் 8.7% வளர்ச்சி என்பது இதன் நோக்கமாகும். முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டின் முதல் காலாண்டில் எண்ணெய் அல்லாத ஏற்றுமதி 5.4 சதவீத வளர்ச்சியைக் கண்டது. சவூதியின் அரசாங்க கொள்கைகள் மற்றும் திட்டங்களின் வெற்றியின் தொடர் முன்னேற்றம் சவூதி பெண்களை மேம்படுத்தியுள்ளது. சவூதியர்களை வேலையின்மையிலிருந்து பாதுகாத்து அவர்கள் தொடர்ந்தும் முன்னேற்றமடைதற்கு வழிவகுத்திருக்கிறது. சர்வதேச நிறுவனங்களின் கூற்றுப்படி, திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே விஷன் 2030 திட்ட இலக்குகளை அடைவதற்கேற்ற சரியான பாதையில் சவூதி செல்கிறது.

அல் அரேபியா பிசினஸ் மதிப்பாய்வு செய்த பல அறிக்கைகள், ஆய்வுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அரசாங்கத் தரவுகளின் அடிப்படையில் சவூதி அரேபியா தனது பல இலக்குகளை அடைவதற்கான சரியான பாதையில் செல்கிறது. ஒருவேளை திட்டமிட்ட காலத்திற்கு முன்பே அதன் இலக்குகளை அடையும்.

இளவரசர் முஹம்மத் பின் சல்மான் கடந்த செப்டம்பரில் அமெரிக்காவின், ‘பொக்ஸ் நியூஸ்’ செனலுக்கு அளித்த பேட்டியின் போது, சவூதியின் பொருளாதாரம் ஜி20 நாடுகளில் வேகமாக வளர்ந்து வருவதை உறுதிப்படுத்தினார். ‘சவூதியின் பொருளாதாரம் உலகில் 17வது இடத்தில் உள்ளது, மேலும் அது “7” பட்டியலுக்கு திரும்ப முடியும்’ என்றும் அவர் கூறினார்.

2022 இல் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் சுமார் 122 பில்லியன் ரியால்களாக (33 பில்லியன் டொலர்கள்) இருந்தது, இதனால் சவூதி ஜி20 பொருளாதாரங்களில் பத்தாவது இடத்தைப் பிடித்தது. 2022 இல் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் இருப்பு 775 பில்லியன் ரியால்களை (207 பில்லியன் டொலர்கள்) எட்டியதாக சவூதி முதலீட்டு அமைச்சு அறிவித்தது, இது ஜி20 நாடுகளின் பொருளாதாரங்களில் சவூதிக்கு 16வது இடத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளது. இவ்வாறு வளர்ச்சி அடைந்துவரும் சவூதி, தனது பொருளாதாரத்தின் மூலம் ஏழை நாடுகளுக்கும் வளர்ந்துவரும் நாடுகளுக்கும் நீண்ட, குறுகிய கால வட்டியில்லா கடன்கள் அடிப்படையில் உதவி, ஒத்துழைப்புக்களை நல்கி வருகிறது. அத்துடன் மனிதாபிமான உதவிகளையும் இன, மத பேதமின்றி அனைவருக்கும் அளிக்கின்றது. அந்த அடிப்படையில் சவூதி அரேபியா இலங்கைக்கும் நேச நாடு என்ற அடிப்படையில் பல பில்லியன் ரியால்கள் பெறுமதியான உதவிகளைச் செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள சவூதி அரேபியாவின் பொருளாதார மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைஸல் பின் பாழில் அல் இப்றாஹீம் அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானியின் ஏற்பாட்டில் இந்நாட்டின் அரசாங்க உயர் தலைவர்களையும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். சவூதி அமைச்சர் மேற்கொண்டுள்ள இந்த உத்தியோகபூர்வ விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்துவதோடு இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நன்மைகள் பெற்றுத்தரக்கூடியதாக அமையும் என உறுதிபடக்கூறலாம்.

சவூதியின் மன்னரான இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் கீழ் இலங்கைக்கு விஜயம் செய்யும் இவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நட்புறவை மேலும் மேம்படுத்தும் நோக்கில் சந்திப்புக்களையும் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்வார்’ என்று கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

அஷ் ஷெய்க் எம்.எச். சேஹுத்தீன் மதனி (பி.ஏ)
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT