Thursday, April 18, 2024
Home » பாடசாலை இடைவிலகலுக்கு விரைவில் முடிவு காணப்பட வேண்டியது அவசியம்

பாடசாலை இடைவிலகலுக்கு விரைவில் முடிவு காணப்பட வேண்டியது அவசியம்

by Rizwan Segu Mohideen
November 27, 2023 10:37 am 0 comment

சிறுவர்கள் 16 வயது வரை கட்டாயக்கல்வி கற்பது அவசியம் ஆகும். இக்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக பலர் பாடசாலைக் கல்வியை இடைநடுவில் விட்டுவிடுகின்றனர். இதற்காக பல்வேறு காரணிகளை முன்வைக்கின்றனர். வறுமை, பொருளாதார நெருக்கடி, பொருட்களின் விலையேற்றம், குடும்பத்தை நடத்துவதற்கான நாளாந்த வருமானம் கிடைக்காமை, போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு எரிெபொருள் விலையேற்றம், பிரத்தியோக வகுப்பிற்கான மோகம் அதிகரித்து உள்ளமையும், கட்டண அதிகரிப்பு என பல்வேறு காரணங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு வலைப்பின்னல் போல் உள்ளன.

பெண் த​ைலமை தாங்கும் குடும்பங்கள், அதிக குடும்ப அங்கத்தவர்கள் உள்ள குடும்பங்கள், வெளிநாட்டில் பணிபுரியும் தாய் தந்தையர் உள்ள குடும்பங்கள் என வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள், பெற்றோர் நிரந்தர நோயாளியாய் உள்ள குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் போன்றோர் இவ்வாறான பாடசாலை இடைவிலகல்களில் அதிகமாய் உள்ளனர். படித்து தொழில்புரிந்து எதிர்காலத்தில் வருமானம் ஈட்டுவதைவிட விடியும் ஒருபொழுதை கழிப்பதற்கான வழிகளை இவர்கள் தேடுகின்றனர். இதனால் தொழிலில் ஈடுபடுவதில் ஆர்வமாய் உள்ளனர். பருவகால தொழிலாக இருந்தாலும் சரி, நிரந்தரமான வேலைகளாக இருந்தாலும் சரி தமக்கு ஏற்ற வேலைகளில் ஈடுபட்டு தமது குடும்பத்தில் வாழ்க்கையை நடாத்த தங்களால் ஆன பங்களிப்பை வழங்கி வழங்குகின்றனர். இதன்போது தொழில் வழங்குனர்கள் தமக்கு சாதகமாக நிலைமையை பயன்படுத்தி சுரண்டல்களில் ஈடுபடுவதும் உண்டு

இவற்றைவிட தற்காலத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பயனாக தொலைபேசி, இணையம், ஈமெயில், சினிமா, முகநூல் என சமுகவலைத்தளங்களில் மக்கள் மூழ்கியுள்ளனர். ண்பர் வட்டங்களின் மூலமான போதைப் பாவனையும் பாடசாலை இடைவிலகல்களுக்கு காரணமாக அமைகிறது. யௌவன பருவமாற்றங்களும் இதற்கு உறுதுணையாய் காணப்படுகின்றன. தரம் 8_-11 வரையான காலப்பகுதிகளிலே இவ்வாறான இடைவிலகல்கள் அதிகரித்துள்ளன. இக்காலப்பகுதிகளில் இவர்களை பாடசாலைகளில் இணைக்கும்போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான தன்மைகள் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் மாத்திரமே இடைவிலகல்களை குறைத்து பாடசாலை கல்வியை சிறப்பாக வழங்க முடியும்.

தரம் 8 இன் பின்னரான காலப்பகுதி சிறுவர்களின் கல்வி வளர்ச்சியில் முக்கிய காலமாகும். இக்காலத்தில் இவர்களின் உடல் மாற்றம் மனமாற்றமும் ஏற்படுகிறது. இக்காலத்தில் பாடசாலை ஆசிரியர்கள் நடந்துகொள்ளும்விதமே கல்வி கற்பதா?அல்லது இடைவிலகிச்செல்வதா? என்பதை தோற்றுவிக்கிறது. பிள்ளைகளை தரம் குறைத்தல், அதிகமாக தண்டித்தல், மனம் நோகும்படி ஏசுதல், கிண்டல் செய்தல், அனைவர் மத்தியிலும் வைத்து மனம் பாதிக்கும்படி பட்டப்பெயர் சூட்டி அழைத்தல் போன்ற காரணங்களாலும் குடும்ப நிலை காரணமாக தாமதமாக பாடசாலை செல்லல், பாதணி இன்றி பாடசாலை செல்லல் என்பவற்றுக்காக உயரிய தண்டனை வழங்கல், ஏசுதல் போன்ற செயற்பாடுகளாலும், மெல்லக்கற்கும் மாணவர்களைப் பற்றியும் அக்கறை செலுத்தாது பாடவிதானங்களை முடிப்பதில் ஆர்வம் காட்டுவதனாலும் இத்தகைய தன்மை அதிகரித்து காணப்படுகிறது.

இவ்வாறான நிலமைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள உளவள ஆலோசனை ஆசிரியர்கள் மூலமாகவும் இத்தகைய மாணவர்களின் வரவு குறைதல் கண்டறியப்பட்டு அவர்களின் பிரச்சினையை நிவர்த்திக்க வேண்டும். இதைவிட பாடசாலை கட்டாய கல்விக்குழுவில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலக சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர் போன்ற பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அனைவர் மூலமாகவும் ஆரம்பநிலையிலேயே ஒருமித்த சேவையை வழங்குவதன் மூலம் மீண்டும் பாடசாலையில் இனணத்தல் என்பது சாத்தியப் பாடானதாக காணப்படும்

கல்வி என்பது காலத்தால் அழியாத செல்வம். இச்செல்வத்தை பெற்றுக்கொள்ள இடம் பொருள் காலம், வயது என எதுவும் தடையாக இருக்க முடியாது. நாம் ஒவ்வொருவரும் இச்செல்வத்தை எம் எதிர்கால சந்ததியினருக்கு கொடுத்து வளமிக்க சிறுவர் சமூகத்தை கட்டி எழுப்புவோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT