திமுக தலைவராக தளபதிக்கு இன்று பட்டாபிஷேகம் | தினகரன்


திமுக தலைவராக தளபதிக்கு இன்று பட்டாபிஷேகம்

திமுக தலைவராக ஸ்டாலின் இன்று பதவி ஏற்கவுள்ளதை அடுத்து தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி காலமானதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பதவி காலியானது. இந்நிலையில் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்காக ஸ்டாலின் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படவுள்ளார்.

ஸ்டாலின் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம். மு.க.ஸ்டாலின் கடந்த 1953-ஆம் ஆண்டு மார்ச் 1ம் திகதி கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

1967ல் முதல் முறையாக திமுகவில் சேர்ந்தார். அதே ஆண்டு 14 வயதாக இருந்த போது, திமுகவிற்கு பிரசாரம் செய்தார். இதுவே ஸ்டாலினின் முதல் பிரசாரம் ஆகும். 1968ல் திமுக இளைஞர் அணிக்கு முன்னோட்டமாக இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கினார்.

அதன்பின் சென்னை நியூ கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார். 1973-ஆம் ஆண்டு திமுக பொதுக்குழுவில் உறுப்பினரானார். 1975இல் அவசரகால சட்டம் காரணமாக சிறைக்கு சென்றார். இந்த சிறை வாழ்க்கை ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் திருப்பாக இருந்தது.

பின்னர் 1975இல் துர்காவை மணந்தார். 1977ல் உதயநிதி ஸ்டாலின் பிறந்தார். 1978ல் முதல் திரைப்படத்தை தயாரித்தார். சில காட்சிகளில் நடித்தார். 1984ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல்முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ஸ்டாலின்.

1988ல் ஒரே இரத்தம் படத்தில் நடித்தார். 1989ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991ல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1993-ஆம் ஆண்டு இளைய சூரியன் என்ற இதழை தொடங்கினார்.

1996ல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிபெற்றார். 1996 சென்னையின் 37வது மேயராக ஸ்டாலின் தேர்வானார். அவர் அப்பதவியில் 2002ஆம் ஆண்டு வரை நீடித்தார்.

சென்னையின் மேயரானது ஸ்டாலின் அரசியல் பயணத்தில் மற்றொரு திருப்பு முனையானது.

2001ல் மூன்றாவது முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்றார். 2001ல் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிர்வாக துறை அமைச்சரானார். 2008ல் திமுகவில் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. 2009ல் தமிழகத்தின் துணை முதல்வரானார். அவர் அப்பதவியில் 2011-ஆம் ஆண்டு வரை நீடித்தார். 2011ல் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். 2016ல் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் வென்றார்.

2016ல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். 2017ல் திமுகவின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கருணாநிதி கடந்த ஓகஸ்ட் 7-ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.

இதைத் தொடர்ந்து திமுகவுக்கு தலைவர் பதவிக்கு வரும் 28-ஆம் திகதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே நிலையில் வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டாலினை தவிர்த்து வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் அவர் திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளார்.


Add new comment

Or log in with...