யுத்த அபலைகள் மீது பெண்ணியவாதிகளின் அலட்சியம்! | தினகரன்

யுத்த அபலைகள் மீது பெண்ணியவாதிகளின் அலட்சியம்!

மட்டக்களப்பு நகரில் குடிமனைகள் செறிந்துள்ள பிரதேசங்களுக்குள் தினமும் முற்பகல் வேளையில் ஒரு காட்சியைக் காண முடியும். தலையிலும் கைகளிலும் பெரும் சுமைகளைச் சுமந்தபடி வீடுவீடாக பெண்கள் சிலர் அலைந்து திரிவதைக் காணலாம்.

வீட்டில் அரைத்து, வறுக்கப்பட்ட அரிசிமா மற்றும் அவல் போன்றவற்றைச் சுமந்தபடி, தெருத்தெருவாகக் கூவி விற்றுக் கொண்டு திரிவார்கள் அப்பெண்கள்.

இக்காட்சியை கிழக்கில் மட்டக்களப்பு நகரில் மாத்திரமன்றி கல்முனை, வாழைச்சேனை, திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களிலும் அன்றாடம் காலை வேளைகளில் தாராளமாகக் காண முடிகிறது.

இவர்களெல்லாம் நகரங்களில் வாழ்கின்ற பெண்கள் அல்லர். நகரில் இருந்து தொலைதூரங்களில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வசிப்பவர்கள் இப்பெண்கள். தினமும் பெரும் சுமைகளை ஏந்தியபடி, நீண்ட தூரம் நடந்து நகருக்கு வந்து சேர வேண்டும். தோணியில் ஆறு கடந்து வர வேண்டிய அவசியமும் சிலருக்கு இருக்கின்றது.

தாங்கள் கிராமத்திலிருந்து கொண்டு வருகின்ற அரிசிமா, அவல் மற்றும் தானியங்களை நண்பகலுக்கிடையில் நகரில் உள்ள வீடுகளில் விற்று விட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நகரில் உள்ள கடைகளில் தங்களது குடும்பத்துக்குத் தேவையான பாவனைப் பொருட்களை வாங்கிக் கொண்டு இருட்டுவதற்குள் வீடு திரும்பி விட முடியும்.

தாங்கள் கொண்டு வருகின்ற பொருட்களை விற்று முடிப்பதற்காக இப்பெண்கள் வீதிவீதியாக அலைய வேண்டியிருக்கும். பரிச்சயமான வீடுகளின் முன்னால் நின்று கூவியழைக்க வேண்டும்.

கிராமத்திலிருந்து பொழுது புலர்வதற்குள் புறப்பட்டு, காலை ஆறு மணியளவில் நகருக்கு வந்து சேர்ந்து விடும் இப்பெண்கள், நண்பகல் பன்னிரண்டு மணிவரை இவ்வாறு வீதிவீதியாக அலைந்து திரிகின்ற காட்சியை சாதாரணமாகவே தினமும் காண முடியும்.

இப்பெண்களின் தோற்றத்தில் வறுமைக் கோலம் நேரடியாகவே தெரிந்து விடும். பின்தங்கிய கிராமத்தின் வறுமைப் போராட்டங்களாலும், குடும்பத்தின் நிராதரவான நிலைமையினாலும் ஒட்டியுலர்ந்து போன தேகம்!

இழப்புகள், சோகங்கள், ஏக்கங்களை அப்பெண்களின் முகங்கள் பிரதிபலித்து விடுகின்றன.

தினமும் இவ்வாறு நகருக்கு வந்து இப்பொருட்களை விற்று விட்டு பணத்துடன் வீடு திரும்பினாலேயே குடும்பத்தின் அன்றாட சீவியத்தை நடத்த முடியும். இவர்கள் வீட்டுக்குத் திரும்பிய பின்னரும் ஓய்வாக இருந்துவிட முடிவதில்லை.

மறுநாள் விற்பனைக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான பொருட்களை இவர்கள் தயார் செய்ய வேண்டியிருக்கும். இதற்காக நள்ளிரவு வரை அவர்கள் வீட்டில் பரபரப்பாக வேலை செய்வதுண்டு. அன்றாடம் சில மணி நேர உறக்கத்துடன் பெரும் துன்பமாகக் கழிகின்றது இவர்களது வாழ்வு!

இவர்களெல்லாம் யுத்தம் உருவாக்கிய அபலைப் பெண்கள்! கொடிய யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கணவனையும், பிள்ளைகளையும் பறிகொடுத்து விட்டு இன்று அன்றாட சீவியத்துக்காக இவ்வாறு அல்லல்படுகின்ற அப்பாவி ஜீவன்கள்!

இப்பெண்கள் ஒவ்வொருவரின் பின்னாலும் எத்தனையோ சோகக் கதைகள் நிறைந்திருக்கும். படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் வீடு திரும்பாதவர்கள், மோதலின் போது இடையில் அகப்பட்டு உயிரிழந்து போனவர்கள், புலிகளால் பலவந்தமாக ஆட்சேர்ப்புக்காக அழைத்துச் செல்லப்பட்டு பலியாகிப் போனவர்கள், வீணான சந்தேகங்களுக்காக பழிவாங்கப்பட்டவர்கள்... இத்தகையோரெல்லாம் அன்றைய வேளையில் குடும்பங்களின் உழைப்பாளிகளாக இருந்தனர். அவர்கள் இன்றில்லை.

இவ்வாறெல்லாம் பலவித காரணங்களுக்காக தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவானோர் அன்றைய காலத்தில் வீணாக பலியாகிப் போனார்கள். இப்போது இவர்களும் இல்லை, புலிகளும் இல்லை... யுத்தமும் ஓய்ந்து போய் ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன.

குடும்பத்தின் உழைப்பாளிகளை இழந்து விட்ட காரணத்தினால், குடும்பத்தில எஞ்சியிருப்போரின் சிவியத்துக்காக இப்பெண்கள் தினமும் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கின்றார்கள்.

யுத்தம் ஓய்ந்து ஒரு தசாப்தமாகப் போகின்ற போதிலும், இப்பெண்கள் பற்றி எவருமே பேசுவதில்லை. தமிழ் அரசியல்வாதிகளெல்லாம் நிறைவேற முடியாத அரசியல் தீர்வைப் பற்றி மேடை போட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு புறத்தில் தமிழ் இணையத்தளங்கள் இன்னுமே சலிக்காமல் புலிகளின் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன. புலிகள் மீண்டும் வருவார்களாம் என்றபடி இணையத்தளங்கள் எழுதுகின்ற ஊகங்களைப் படித்துப் படித்து மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள்.

அநாவசியங்களைப் பேசுகின்ற அரசியல்வாதிகளும் இணையத்தளங்களும் இந்த அபலைப் பெண்களைப் பற்றிப் பேசாதிருப்பது ஒருபுறம் இருக்கட்டும்...

பெண்ணிலைவாதிகளின் அனுதாபப் பார்வையானது அந்த அப்பாவிப் பெண்கள் பக்கம் திரும்பக் கூடாதா?

இலத்திரனியல் ஊடகங்களின் குளிரூட்டிய மண்டபத்துக்குள் அமர்ந்திருந்தபடி நேரடி விவாதம் நடத்துகின்ற பெண்ணிய சிந்தனையாளர்களின் கருத்துகளைக் கேட்கின்ற போது நகைப்புத் தோன்றுகிறது.

மேல்வர்க்கப் பெண்கள் மீதான சமூக அநீதிகளை மாத்திரமே பெண்ணியவாதிகள் தொட்டுக் கொள்கின்றார்கள். குளிரூட்டிய கண்ணாடி அறைகளுக்குள் தொழில் புரிகின்ற பெண் ஊழியர்களுக்கு ‘பெண்’ என்ற ஒரேயொரு காரணத்துக்காக பதவியுயர்வும் சலுகைகளும் மறுக்கப்படுவதாக இவர்கள் குரலெழுப்புகிறார்கள். பெண் சமத்துவமின்மையை இவர்கள் கடுமையாகக் சாடுகிறார்கள். அவையெல்லாம் உண்மைதான்!

எமது நாட்டின் அனைத்து சமூகங்களிலும் பெண்கள் மீதான அடக்குமுறையும் பாரபட்சங்களும் இன்றும் தொடர்ந்தபடியே உள்ளன என்பதில் ஐயமில்லை.

எனினும் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட யுத்த அபலைகளான பெண்களைப் பற்றிப் பேசுவதற்கு யார்தான் இருக்கிறார்கள். தமது வாழ்க்கைத் துயரங்களையும், அன்றாட மனஏக்கங்களையும் வெளிப்படுத்தத் தெரியாமல் நிரந்தரத் துன்பத்தில் உழல்கின்ற அப்பெண்களின் மீது இச்சமூகம் கருணை கொள்வது எப்போது?


Add new comment

Or log in with...