புத்தரையும், இயேசுவையும், நபியையும் மாத்திரமே டிலான் தூற்றவில்லை | தினகரன்

புத்தரையும், இயேசுவையும், நபியையும் மாத்திரமே டிலான் தூற்றவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா புத்தரையும், இயேசுவையும், நபியையும் மாத்திரமே தூற்றவில்லை. அவர் எங்களை தூற்றுவது புதுமையல்லவென கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர கூறினார்.

நேற்று முன்தினம் (26) மாலை முல்கிரிகல தொகுதி சு. க. அமைப்பாளர்களின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்; நானும் துமிந்த திஸாநாக்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதாகக் அநேகமானோர் குற்றஞ்சாட்டுகின்றார்கள். எங்கள் மீது குற்றம் சுமத்துபவர்களே கட்சியை அழிக்க முயற்சி செய்கின்றார்கள் என நான் கூறுகின்றேன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க நாம் இடமளிக்கமாட்டோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடனோ வேறு எந்தக்கட்சியுடனோ இணைக்க நாம் இடமளிக்க மாட்டோம். அதே போல் மொட்டுகட்சியுடனும், இணைய மாட்டோம். நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடனேயே இருப்போம்.

தற்போது எமது நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளிலும் எமது கட்சியே பலம் வாய்ந்தது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது அபேட்சகர் எமது கட்சியின் தலைவரான தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான். அதனால் எம்மீது குற்றம் சுமத்துபவர்களுக்கு சொல்வது என்னவென்றால் என்றாவது ஒருநாள் உண்மையைப் புரிந்து கொள்வார்கள். அன்று அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு என்ன செய்தோம் என்று கவலைப்படுவார்கள். நாம் கட்சியை அழிக்க எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் கூறினார்.

இந்த அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகித்த 16 பேர் விலகிச் சென்றார்கள். ஆனால் அதில் சிலர் இன்றும் கட்சியின் நன்மைக்காகப் பாடுபடுகின்றார்கள். அவர்கள் அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யாது போனாலும் மொட்டு கட்சியில் இணையமாட்டார்கள். அரசாங்கத்துக்குள்ளே பிரச்சினையை ஏற்படுத்தும் சிலரும் உள்ளனர்.

அவர்கள் சென்ற பின்னர் அரசாங்கம் முன்னரைவிட சிறப்பாக செயல்படுகின்றது எனவும் அமைச்சர் கூறினார்.


Add new comment

Or log in with...