Thursday, April 18, 2024
Home » டிசம்பரில் மின்சார சபைக்கு இலாபம் கிடைத்தால் அதன் பலன் ஏப்ரலில் நுகர்வோருக்கு

டிசம்பரில் மின்சார சபைக்கு இலாபம் கிடைத்தால் அதன் பலன் ஏப்ரலில் நுகர்வோருக்கு

- ரூ. 3,000 ஆக உள்ள மின்சார மீளிணைப்புக் கட்டணம் ரூ. 1,000 – 2,000 ஆக திருத்தம்

by Rizwan Segu Mohideen
November 26, 2023 11:36 am 0 comment

– மின்சார சபை தொடர்ந்தும் ரூ. 12 பில்லியன் நட்டத்தில்
– நீர் மின்சார செயற்பாடுகள் 100% அரசாங்கத்தின் கீழ்
– புதிய மின்சார சட்டமூலம் இரு வாரங்களுக்குள் பாராளுமன்றத்தில்

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான மழை காரணமாக டிசம்பர் மாதத்தில் மின்சார சபைக்கு செயற்பாட்டு இலாபம் கிடைக்குமாயின் அதன் பலன் ஏப்ரல் மாதத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மின்சார சபை தொடர்ந்தும் 12 பில்லியன் ரூபா நட்டத்தில் உள்ளதாகவும் தற்போதைய மழைவீச்சியின் மூலம் மின்சார சபையின் டிசம்பர் மாத நிதி அறிக்கையின் பிரகாரம் ஓரளவு செயற்பாட்டு இலாபம் கிடைக்கும் என நம்புவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

மின்சார சபையின் மறுசீரமைப்பு என்பது நாட்டில் நீண்டகாலமாக கருத்தாடலுக்குட்பட்ட விடயமாகும். மறுசீரமைப்பு தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் அளித்ததுடன் புதிய மின்சார சட்ட மூலத்திற்கும் அங்கீகாரம் வழங்கியது.

இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் புதிய மின்சார சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வருடம் ஜனவரியில் புதிய சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பான கட்டமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் தவறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. மின் உற்பத்தி செயற்பாடு தொடர்பான விடயங்களை 04 நிறுவனங்களின் ஊடாக நிறைவேற்ற நாம் முன்மொழிந்துள்ளோம். மேலும், நீர்மின்சாரம் குறித்த செயற்பாடுகள் 100% அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

மகாவலி, லக்ஷபான, சமனலவெவ ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் கீழ் இயங்குவதோடு, நொரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை ஒரு நிறுவனமாகவும் ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் ஒரே நிறுவனத்தின் கீழ் செயற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பரிமாற்றுப் பணிகளை ஒரு தனி நிறுவனமாகவும், பிரதான கட்டுப்பாட்டுக் கட்டமைப்பை 100% அரசாங்கத்தின் கீழ் பேணவும் முன்மொழியப்பட்டுள்ளது. 04 விநியோக வலயங்களை 04 நிறுவனங்களாக மாற்றி அவற்றை செயற் திறன்மிக்க வகையில் செயற்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மின்சார சபையை மறுசீரமைப்பதன் மூலம் செயல்திறன், தரம் மற்றும் வீண் விரயத்தைக் குறைக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது. உலகின் பிற நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டவிதிகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. விரிவாக ஆராயப்பட்ட பின்னர் பெறப்பட்ட துறைசார் நிபுணர்கள் உட்பட அனைவரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளின்படி மறுசீரமைப்பு வரைவு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுத்தவும்ம் எதிர்பார்த்துள்ளோம்.

தற்போது மின்சார சபை 12 பில்லியன் ரூபா நட்டத்தில் இயங்குகின்றது. நீர்மின் நிலையப் பகுதிகளில் மழை பெய்துவருகின்றது. ஆனால் தற்போதுள்ள மழைவீழ்ச்சி காரணமாக மின்சார சபை இன்னும் இலாபகரமான நிலையை அடையவில்லை. டிசம்பர் மாதத்திற்குள் மின்சார சபையின் நிதிக் கணக்கீடு மூலம் செயல்பாட்டு இலாபம் கிடைத்தால்அதன் பலன் ஏப்ரல் மாத்த்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும்.

நீண்ட காலமாக கொள்கை ரீதியிலான தீர்மானங்களை எடுக்காததாலும், எடுத்த முடிவுகளை நீண்ட நாட்களாக நடைமுறைப்படுத்தாததாலும் நாடு பல மின் உற்பத்தி நிலையங்களை இழந்துள்ளது. சாம்பூர் மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பில் பல வருடங்களாக கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றது.

அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டது. சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப்பணிகளை 2020 இல் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மின் உற்பத்தி நிலையத்தினை நிர்மாணிப்பதால் வருடாந்தம் 95 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகின்றது.

அரசாங்கம் என்ற வகையில் 5 பாரிய திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் ஐந்து திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் கைச்சாத்திடவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, அதானி காற்றாலை மின் உற்பத்தி நிலையம், சியம்பலாண்டுவவில் நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய மின்சக்தி மின் உற்பத்தி நிலையம், அம்பாந்தோட்டை சூரிய மின்சக்தி திட்டம், மட்டக்களப்பு மற்றும் பூனகரியில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

மேலும், மின் துண்டிக்கப்ட்ட பின்னர் மீண்டும் அதனை இணைப்பதற்கான கட்டணத்தை திருத்தம் செய்ய சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி தற்போது 3,000 ரூபாவாக இருக்கும் மீள் இணைப்புக் கட்டணத்தை 1,000 – 2,000 ரூபா வரை திருத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.” என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT