ரூ.46,000 கோடியில் ஆயுதங்கள், ஹெலிகொப்டர்கள் கொள்முதல் | தினகரன்

ரூ.46,000 கோடியில் ஆயுதங்கள், ஹெலிகொப்டர்கள் கொள்முதல்

சீன நீர்மூழ்கிக் கப்பல்களை  எதிர்கொள்ள விரைவான திட்டம்
 
 

இந்திய கடற்படைக்கு ரூ.21,000 கோடி செலவில் 135 ஹெலிகொப்டர்களும் இராணுவத்துக்கு சுமார் ரூ.25,000 கோடி செலவில் சிறிய ரக பீரங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களும் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சு சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்புத் துறை கொள்முதல் குழு (டிஏசி) கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடற்படைக்கு இரண்டு வகையான ஹெலிகொப்டர்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

அதில் 111 கடற்படை பயன்பாட்டு ஹெலிகொப்டர்களும் , 24 கடற்படை பல்திறன் கொண்ட ஹெலிகொப்டர்களும் வாங்கப்படவுள்ளன.

இதில் பயன்பாட்டு ரக ஹெலிகாப்டர்களானது தாக்குதல் நடவடிக்கைகளில் மட்டுமல்லாமல் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.

இந்தபயன்பாட்டு ஹெலிகொப்டர் கொள்முதலானது வெளிநாட்டு பாதுகாப்புத் தளவாட நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படும் முதல் திட்டமாகும். இந்தத் தயாரிப்புத் திட்டம் "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டதாகும்.

மற்றொரு ரகமான பல்திறன் கொண்ட ஹெலிகொப்டர்களானது, எதிரிகள் நீர்மூழ்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தக் கூடியதும் பல்வேறு பணிகளில் பயன்படுத்தக் கூடிய திறன் கொண்டதுமாகும்.

இந்த ஹெலிகொப்டர்கள், போர்க் காலத்தில் முன்னணியில் பயன்படுத்தப்படும் போர்க் கப்பல்களில் ஓர் அங்கமாக இருக்கும்.

சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் தடையின்றி உலவி வரும் நிலையில், அதை எதிர்கொள்ளக் கூடிய திறன் தேவையான ஒன்றாக உள்ளதால் இந்த ஹெலிகொப்டர்களின் தேவை அவசியமாகிறது.

கடற்படையில் பயன்படுத்தப்படும் ஹெலிகொப்டர்கள், இராணுவம் மற்றும் விமானப் படையில் பயன்படுத்தப்படுவதைக் காட்டிலும் கடினத் தன்மை கொண்டதாக இருக்கும். கடலின் உப்புக் காற்றை எதிர்கொள்ளும் வகையில் அதன் பெயிண்ட் பூச்சுகள் இருப்பதுடன் அதன் ரேடார் மற்றும் ஆயுதங்களும் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.

இது தவிர, குறைந்த தூரத்திலான இலக்குகளை செங்குத்தாகச் சென்று தாக்கும் திறன் கொண்ட 14 ஏவுகணை தளவாட அமைப்புகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 10 ஏவுகணை தளவாட அமைப்புகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளன. இவை கப்பல்களுக்கு எதிரான ஏவுகணைகளை தகர்க்கும் திறன் கொண்டதாகும். இந்தத் தளவாடக் கொள்முதல்கள், போர்க் கப்பல்களின் தற்காப்பை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கும்.

இதனிடையே, ரூ.24,879.16 கோடி செலவில் இராணுவத்துக்கும் தளவாடங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புத் துறை கொள்முதல் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தக் கொள்முதலில் 155 மில்லி மீட்டர் குண்டுகளை பயன்படுத்தக் கூடிய சிறிய ரக 150 பீரங்கிகளும் அடங்கும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இந்த பீரங்கிகளுக்கான கொள்முதல் செலவு ரூ.3,364.78 கோடியாகும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வடிவமைக்கப்பட்ட இந்த பீரங்கிகள் அந்த அமைப்பால் பரிந்துரைக்கப்படும் நிறுவனங்களாலேயே தயாரிக்கப்படும்.

கடற்படையில் உள்ள பழைய ஹெலிகொப்டர்களுக்கு மாற்றாக புதிய ஹெலிகொப்டர்கள் வாங்கவும் பல்வேறு பணிகளிலும் பயன்படுத்தக் கூடிய வகையிலான ஹெலிகொப்டர்களை வாங்குவதன் மூலமாக பலத்தை அதிகரிக்கவும் மத்திய அரசை கடற்படை வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...