விவசாயப் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் முயற்சிகள் | தினகரன்


விவசாயப் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் முயற்சிகள்

இலங்கை ஆரம்ப காலம் முதல் விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட நாடாகும். இந்நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் காலம் முதல் இது தொடங்குகின்றது. அந்தவகையில் விவசாய பொருளாதாரத்திற்கு தேவையான அடித்தளத்தை இந்நாட்டில் இட்ட பெருமை மன்னர்களையே சாரும்.

ஏற்கனவே இந்நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் விவசாயத்தின் பிரதான மூலமாக விளங்கும் நீரைச் சேமித்து வைப்பதற்காகவும் அந்நீரை விவசாய வயல் நிலங்களுக்கு தேவைக்கு ஏற்ப விநியோகிப்பதற்காகவும் குளங்களையும் நீர்ப்பாசனக் கால்வாய்களையும் அமைத்தனர். ஒரு முறை மகா பராக்கிரம பாகு மன்னர்,“ஆகாயத்திலிருந்து கிடைக்கப்பெறும் ஒரு துளி நீரையும் பயன்படுத்தாது கடலில் கலக்க இடமளிக்க மாட்டேன்“ என்று உறுதிபடக் கூறினார். அதற்கேற்ப அவர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

இதன் பயனாக விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அமைந்த இந்நாடு அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடாகவும், தென்னாசியாவின் பிரதான தானியக் களஞ்சியங்களில் ஒன்றாகவும் விளங்கியது.

மேலும் மன்னர்கள் இங்கு கட்டியெழுப்பிய விவசாய, நீர்ப்பாசன தொழில்நுட்பக் கலாசாரம் தனித்துவமானதும், இந்நாட்டுக்கே உரியதுமாகும். இந்தப் பின்னணியில் தான் இலங்கையின் கிராமங்களை மையப்படுத்திய நீர்ப்பாசனத் தொழில்நுட்பத்தைக்கொண்ட எல்லங்கா கிராமிய குள கட்டமைப்பு முறைமையை ஐக்கிய நாடுகள் விவசாய மற்றும் விவசாய அமைப்பு “உலகின் முக்கிய விவசாய மரபுரிமையாக அடையாளப்படுத்தியுள்ளது.

இவ்வாறு ஆரம்ப காலம் முதல் இந்நாட்டில் விவசாயத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்ததால் விவசாய, நீர்ப்பாசனத்தை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களும், கிராமிய பாடல்களும், மரபுத் தொடர்களும் கூட உருபெற்று வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றை தமிழ், சிஙகள இலக்கியங்களில் காண முடியும். அவை இந்நாட்டின் விவசாய நீர்ப்பாசனத்தின் முக்கியத்துவதை வெளிப்படுத்தி நிற்கின்றன.

என்றாலும் இந்நாட்டை ஆக்கிரமிப்பு செய்த ஐரோப்பியர் அறிமுகப்படுத்திய பொரளாதார முறைமை அதனைத் தொடர்ந்து சுதந்திரத்திற்கு பின்வந்த ஆட்சியாளர்கள் முன்னெடுத்த தவறான விவசாயப் பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்நாட்டின் விவசாயத்துறை வீழ்ச்சி அடைந்ததோடு நீர்ப்பாசனத்துறையும் பெரும் பாதிப்புக்கும் உள்ளானது. இவை தொடர்பில் ஆக்கபூர்வமான முறையில் கவனம் செலுத்த ஆட்சியாளர்கள் தவறினர்.

இதேவேளை உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் விளைவாக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுவதிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்தில் ஏற்பட்டிருக்கும் இம்மாற்றங்கள் விவசாயப் பொருளாதாரத்தில் நேரடியாகத் தாக்கம் செலுத்தி வருகின்றன. அதனால் விவசாய வயல் நிலங்களை நிரப்பி கட்டடங்களை எழுப்பும் நிலை கூட ஒரு கட்டத்தில் வேகமாக இடம்பெறத் தொடங்கியது.

அதேநேரம் ஒரு காலத்தில் வெளிநாடுகளுக்கு அரிசி வழங்கிய இந்நாடு அண்மைக் காலம் முதல் விவசாய உற்பத்திகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இங்கு இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்திகளில் பெரும்பாலானவற்றை இந்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். அதற்குத் தேவையான சீதோஷண நிலைமை இங்குள்ளது. இருந்தும் அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கான ஆலோசனைகளோ, வழிகாட்டல்களோ ஊக்குவிப்புகளோ ஒழுங்குமுறையாக கடந்த காலத்தில் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக விவசாயப் பொருளாதாரம் ஒரு நம்பிக்கையற்ற ஒன்றாகவே பார்க்கப்பட்டது. அதன் விளைவையே நாடு எதிர்கொண்டிருக்கின்றது.

இந்த உண்மையை நன்கறிந்து கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே விவசாயம் மற்றும் நீர்பாசனத் துறைக்கு பொறுப்பான அமைச்சராக நீண்ட காலம் பதவி வகித்தவராவார். அவர் விவசாய குடும்பப் பின்னணியைக் கொண்டவராக மாத்திரமல்லாமல் விவசாய மக்களைப் பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்துபவாராகவும் உள்ளார். அதன் ஊடாக விவசாய மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் நன்கறிந்துள்ளார்.

இந்தப் பின்புலத்தில் 2015 ஆட்சி மாற்றத்தோடு பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் விவசாயப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றார். இதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான பங்காளியாக விளங்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க.வும் பூரண ஒத்துழைப்பு நல்கி வருகின்றது. அதன் பயனாக நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் இந்நாட்டு விவசாய மக்கள் நீண்டகாலமாக முகம் கொடுத்துவரும் தண்ணீர்ப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மொரகஹகந்த, தெதுரு ஒயா, களுகங்கை ஆகிய பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பித்து வைக்கபட்டுள்ளன. தற்போது 16 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் “வயம்ப எல“ (வடமேல் கால்வாய்) வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஐனாதிபதியினால் குருநாகல், பொல்பிதிகமவில் கடந்த வெள்ளியன்று தொடக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2400 கிராமிய குளங்கள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.

ஆகவே இவ்வாறு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் பயனாக இலங்கை வெகுவிரைவில் மீண்டும் விவசாயப் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த நாடாக மாறும். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை என உறுதிபடக் கூற முடியும்.


Add new comment

Or log in with...